Published:Updated:

தமிழும் சரஸ்வதியும்: முதல் வாரமே டிஆர்பி ஹிட் அடித்த புதிய நெடுந்தொடர்!

தமிழும் சரஸ்வதியும் டீம்
தமிழும் சரஸ்வதியும் டீம்

''ஒரு நெடுந்தொடரின் முதல் எபிசோடுக்குக் கிடைக்கிற வரவேற்பு ரொம்பவே முக்கியமானதா கருதப்படும். ரசிகர்கள் தொடர்ந்து சீரியலைப் பார்ப்பாங்களாங்கிறதை இதை வச்சே ஓரளவு கணிச்சிடலாம்.''

விகடன் டெலிவிஸ்டாஸின் 'தமிழும் சரஸ்வதியும்' நெடுந்தொடர் கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. திங்கள்- வெள்ளி தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடருக்கு சீரியல் ரசிகர்கள் அமோக ஆதரவைத் தந்திருக்கிறார்கள்.

வியாழக்கிழமை தோறும் வெளியாகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

'தமிழ்' குடும்பத்தினரின் அறிமுகத்துடனேயே தொடங்கியது தொடரின் முதல் வாரத்தின் முதல் எபிசோடு. ஹீரோ தமிழ் (தீபக்) குடும்பத்தின் மூத்த மகன். அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அளவான குடும்பம் அவருடையது. அப்பாவுக்கு பிசினசில் உதவும் பொறுப்பான மகனாக வருகிறார் தமிழ்.

தமிழும் சரஸ்வதியும்
தமிழும் சரஸ்வதியும்

அதேபோல அம்மா சொல்படி கேட்கிற மகனாகவும் இருக்கிறார். சூழல் காரணமாக அவரால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆனால் அவரது தம்பி, தங்கை இருவரும் நன்றாகப் படிக்கின்றனர்.

தமிழின் நண்பனுமே கூட அந்த வீட்டில் உரிமையுடன் வலம் வருகிறான். வீட்டில் வேலை செய்யும் பெண்ணையும் தங்கள் வீட்டில் ஒருவராகவே கருதுகிறார் தமிழின் அம்மா.
ஒரு விஷயத்தைத் தொடங்கும் போது, 'ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி' என வாழ்த்துவார்கள். முதல் எபிசோடிலேயே தமிழின் அம்மா எல்லாருக்கும் அருகம்புல் ஜூஸ் போட்டுத் தந்தது, அந்த வாழ்த்தை நினைவூட்டியது.

அடுத்தடுத்த எபிசோடுகளில் ஹீரோயின் சரஸ்வதி (நட்சத்திரா) யின் அறிமுகமும் காட்டப்பட்டுவிட்டது. எந்நேரமும் துறுதுறுவென வளைய வரும் கொஞ்சம் குறும்புப் பெண்ணாகவே வருகிறார். தமிழால் சூழல் காரணமாகவே பத்தாவதைத் தாண்ட முடியவில்லை. சரஸ்வதியோ படிப்பு மண்டையில் ஏறாததால் பன்னிரண்டாவதைத் தாண்டப் படாத பாடுபடுகிறார்.
படிப்பு என்கிற ஒரு விஷயமே இவர்கள் இருவரையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கச் செய்கிறது.

படிப்பு குறைவு என்கிற ஒரு காரணத்தாலேயே பல்வேறு அவமானங்களை இவர்கள் சந்திப்பதெல்லாம் கதையில் அடுத்தடுத்து நடக்கின்றன.

இங்கு ஹைலைட், சீரியலுக்கு முதல் நாள் கிடைத்த வரவேற்புதான். டி.ஆர்.பி. ரேட்டிங் புள்ளி விபரப்படி, தொடரின் முதல் எபிசோடுக்கு அதிக புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அதாவது முதல் நாள் சீரியலை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

தமிழும் சரஸ்வதியும்
தமிழும் சரஸ்வதியும்

சேனல் வட்டாரத்தில் இது குறித்துப் பேசிய போது, "புதுசா தொடங்குற சீரியலின் முதல் எபிசோடுக்குக் கிடைக்கிற வரவேற்பு ரொம்பவே முக்கியமானதாக் கருதப்படும். சீரியல் ரசிகர்கள் தொடர்ந்து அந்த சீரியலைப் பார்ப்பாங்களாங்கிறதை இதை வச்சே ஓரளவுக்குக் கணிச்சிடலாம். 'தமிழும் சரஸ்வதியும்' நாங்க எதிர்பார்த்தது போலவே நல்ல புள்ளிகளுடன் டாப்ல இருக்கு" என்றார்கள்.

மேலும், வார இறுதி நிகழ்ச்சிகளிலுமே சமீபமாக தங்கள் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகச் சொல்கிறது விஜய் டிவி.

முதல் வாரத்திலேயே டிஆர்பி ஹிட் அடித்திருக்கும் 'தமிழும் சரஸ்வதியும்' தொடருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது!

அடுத்த கட்டுரைக்கு