சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: “கமலுடன் நடிச்சாலே ஆஸ்கர் விருது வாங்கின மாதிரி!”

கமலேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கமலேஷ்

எனக்குக் கமல் சார்னா உயிர். ஸ்கூல் முடிக்கிற சமயம் அவர்மீது ஏதோ ஒருவித ஈர்ப்பு உண்டாச்சு. அவருடைய ஒவ்வொரு அசைவையும் நான் ரசிப்பேன்.

90களின் பிரபலமான டி.வி நடிகர்களில் ஒருவர் கமலேஷ். பல தொடர்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வெள்ளித்திரையிலும் தடம் பதித்திருக்கிறார். தற்போது, `எதிர்நீச்சல்' தொடரிலும், விஜய் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாகும் `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ஷூட்டிங் பிஸியில் ஓடிக் கொண்டிருந்தவரை ஒரு பொன்மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

‘‘சின்ன வயசில ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது நிறைய டிராமாவில் நடித்துப் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன். அப்படித்தான் நடிப்பின் மீது ஆர்வம் வந்துச்சு. `மாயா பஜார்' என்னுடைய முதல் படம். அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அப்போதான் எனக்குப் பிறந்த நாள். அங்க போன பிறகுதான் அன்னைக்கு நடிகர் ராம்கிக்கும் பிறந்தநாள்னு தெரிஞ்சது. ரெண்டு பேரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். முதல் நாளே செலிபரேஷனுடன்தான் என் கரியர் ஆரம்பிச்சது. அந்தப் படம் காலேஜ் முடிச்ச டைமில் பண்ணினது. அப்ப ரொம்பவே ஒல்லியா இருப்பேன். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா, வெள்ளித்திரை எனக்குப் பெருசா கைகொடுக்கல. அப்பதான் சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது. அப்பவே சீரியலில் ஹீரோவாகத்தான் நடிக்கக் கேட்டாங்க.

குடும்பத்துடன்
குடும்பத்துடன்

`சிங்கத்துக்கு வாலாக இருக்கிறதைவிட பூனைக்குத் தலையாக இருந்திடலாம்'னு முடிவெடுத்துதான் சின்னத்திரையை செலக்ட் பண்ணினேன். ஆனா, இப்ப வரைக்கும் அதிலிருந்து வெளியில் போக முடியல. இப்ப 87-வது சீரியல் பண்ணிட்டு இருக்கேன். எனக்குத் தெரிந்து யாரும் இத்தனை சீரியல்களில் நடிக்கலைன்னு நினைக்கிறேன். 2002, 2003 சமயங்களில் எல்லாம் தொடர்ச்சியா 6, 7 சீரியல்களில் லீடு கேரக்டரில் நடிச்சிட்டிருந்தேன். வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். ‘செம்பருத்தி’ படத்திலிருந்து ரோஜா மேம் மீது மிகப்பெரிய கிரஷ். அவங்களுக்கு ஜோடியா சீரியலில் நடிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. சின்னத்திரையில் அவங்களுடைய முதல் ஹீரோ நான்தான்! அவங்க குடும்பத்துல என்ன நல்லது, கெட்டதுன்னாலும் அதுல நான் நிச்சயம் இருப்பேன்.. என்னோடதுல அவங்க நிச்சயம் இருப்பாங்க. அந்த அளவுக்கு இப்ப ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்’’ என்றவரிடம் சீரியல் பிரேக் குறித்துக் கேட்டோம்.

‘‘திரும்பவும் படங்கள்ல ட்ரை பண்ணலாம்னு நானே சீரியலில் பிரேக் எடுத்தேன். அந்த 6, 7 வருஷம் வெள்ளித்திரையில் முயற்சி பண்ணினேன். ‘ஸ்கெட்ச்’, ‘சிங்கம் 3’ போன்ற பெரிய படங்களில் நடிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. ஆனா, வாய்ப்புகள் அதிகம் வந்த நேரத்துல கொரோனா லாக்டௌன் வந்ததனால எல்லாமே அப்படியே நின்னுடுச்சு. ஒரு ஆர்ட்டிஸ்ட் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் கேமரா முன்னால இருக்கணும். தினமும் கேமராவைப் பார்த்துட்டு, கொரோனா நேரத்துல வீட்ல முடங்கி இருந்தது ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு. அப்பதான் மறுபடி சீரியல் வாய்ப்பு வந்தது. இப்ப சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன்’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.

கமலேஷ்
கமலேஷ்

‘‘எனக்குக் கமல் சார்னா உயிர். ஸ்கூல் முடிக்கிற சமயம் அவர்மீது ஏதோ ஒருவித ஈர்ப்பு உண்டாச்சு. அவருடைய ஒவ்வொரு அசைவையும் நான் ரசிப்பேன். அவர்கிட்ட எல்லாமே கத்துக்கலாம். அவரை நேரில் எப்பப் பார்த்தாலும் கண் இமைக்காம அவரையே பார்த்துட்டு இருப்பேன். கடவுள் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்த குழந்தை அவர். நீங்க எந்த சப்ஜெக்ட் பேசினாலும், அவருக்கு அதைப் பற்றித் தெரிஞ்சிருக்கும். ஒரே ஒரு படத்தில் அவருடன் நான் சேர்ந்து நடிச்சாலே போதும், அதுதான் எனக்கு ஆஸ்கர் விருது வாங்கின மாதிரி! அந்த நாளுக்காகக் காத்திருக்கேன்’’ என்றவாறு தன் குடும்பத்தினரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

‘‘என் குடும்பம்தான் என்னுடைய மிகப்பெரிய பலம். நடிப்பைத் தாண்டி நான் ஒரு பிசினஸ்மேனாகவும் இருக்கேன். டான்ஸ் ஸ்கூல், ஈவென்ட் மேனேஜ்மென்ட்னு ரொம்ப பிஸியா ஓடிட்டிருக்கேன். அதுல எனக்கு உதவியா என் சகோதரர் இருக்கிறார். எங்க வீட்ல யாருக்கும் சினிமாப் பின்னணி இல்லைன்னாலும் என்னுடைய ஆசைக்காக எனக்கு இப்ப வரைக்கும் சப்போர்ட்டா என் அம்மா, அப்பா இருக்காங்க. என் மனைவிதான் எனக்கு எல்லாமே. நான் உடைஞ்சுபோகிற தருணமெல்லாம் கீழ விழாம என்னை இப்ப வரைக்கும் வழி நடத்திட்டு இருக்கிறா.

எங்களுக்கு 12 ஆண்டுகள் கழிச்சு எங்க பொண்ணு தியா பொறந்தா. அவ வந்ததுக்கு அப்புறம் எங்க வீடே ரொம்ப பிரகாசமாகிடுச்சு. என்னுடைய முதல் பையன் நாங்க வளர்க்கிற டாபி. அவனும், தியாவும் எனக்கு ஒண்ணுதான். ரொம்ப நிறைவா மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருக்கோம்’’ என்றவரிடம் அடுத்த புராஜெக்ட் குறித்துக் கேட்டோம்.

‘‘இப்ப ஆண்ட்ரியாவுடன் `கா' படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிச்சிருக்கேன். இனிமேல் நான் சாதிக்க வேண்டிய இடம் சினிமாதான்... அதுவும் சீக்கிரமே நடக்கும்னு நம்புறேன்’’ என்றார்.