சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “ரொமான்ஸ் சீன் இருந்தா பார்க்கவே மாட்டேன்!”

நவீன் - செளம்யா
பிரீமியம் ஸ்டோரி
News
நவீன் - செளம்யா

ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பொசசிவ் ஆக இருப்போம். இப்ப வரைக்கும் சீரியலில் அவர் சண்டை போடுற சீன் வந்தா ரொம்ப ஜாலியா ரசிச்சுப் பார்ப்பேன். ரொமான்ஸ் சீன் இருந்தா அதைப் பார்க்கவே மாட்டேன்.

`தமிழும் சரஸ்வதியும்' தொடரில் கார்த்திக் கதாபாத்திரம் மூலம் டி.வி பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நவீன் வெற்றி. இரண்டு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பத்தினரை ஒரு ரிலாக்ஸான தினத்தில் சந்தித்தேன்.

‘‘இவர்தான் என் மனைவி செளம்யா’’ என அவர் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திய கையோடு, ‘‘பத்து வருஷமா காதலிச்சு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்துக்கிட்டோம். எனக்கு விஸ்காம் படிக்கணும்னுதான் ஆசை. ஆனா, இன்ஜினீயரிங் படிக்கிற மாதிரி ஆகிடுச்சு. வேண்டா வெறுப்பாதான் காலேஜுக்குப் போனேன். அங்கதான் செளம்யாவைப் பார்த்தேன். அதன்பிறகு அந்த காலேஜ் எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சது. அந்தக் காலேஜுக்குப் போனதாலதான் எனக்கு செளம்யா கிடைச்சிருக்காங்க. செளம்யா பிடிச்சதனால இன்ஜினீயரிங்கும் பிடிச்சது’’ என்று புன்னகைத்தவரிடம், ‘‘காலேஜ் டைம்ல பண்ணின விஷயம் பின்னாளில் உங்களுக்கே ரொம்ப கிரின்ச்சாக தோணியிருக்கா’’ என்று கேட்கவும் இருவரும் சிரித்துக்கொண்டனர்.

‘‘ப்ரொப்போஸ் பண்ணுறப்ப இவங்க கறுப்பு டிரஸ்ல வந்திருக்காங்கன்னு மதியத்துக்கு மேல கிளாஸ் கட் அடிச்சிட்டு நானும் கறுப்பு கலர்ல மெனக்கெட்டு டிரஸ் வாங்கிப் போட்டு வந்ததை இப்ப நினைச்சாலும் கிரின்ச்சாகத்தான் இருக்கும்’’ என்று நவீன் சிரிக்க, ‘`என்கிட்ட அன்னைக்கு ஈவ்னிங் கிளாஸ்ல ‘வெயிட் பண்ணு, உன்கிட்ட பேசணும்’னு இவர் சொல்லும்போதே ப்ரொப்போஸ்தான் பண்ணப் போறார்னு யூகிச்சேன். இவர் லன்ச் பிரேக்ல டிரஸ் மாத்திட்டு வந்ததைப் பார்த்ததும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன்’’ என்றவாறு செளம்யா பேச ஆரம்பித்தார்.

‘‘அவருடைய ரெக்கார்டு நோட்டுக்கு மேல என் நோட்டு இருக்கணும்னு வேணும்னே பார்த்துப் பார்த்து வைப்பேன். அதெல்லாம் இப்ப நினைச்சாலும் காமெடியா இருக்கு. லவ் பண்ண ஆரம்பிச்சப்ப இவர் எனக்குக் கொடுத்த சின்னச் சின்னப் பரிசுகளிலிருந்து எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். எங்க காலேஜுக்கே நாங்க லவ் பண்ணுறோம்னு தெரியும். எங்க கல்யாணம் கோவிட் சமயத்துல நடந்ததால எங்க புரொபசர் எல்லாரையும் கூப்பிட முடியல’’ என்றவரிடம் ‘‘ரெண்டு பேருல யார் ரொம்ப பொசசிவ்?’' என்று கேட்டேன்.

‘‘ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பொசசிவ் ஆக இருப்போம். இப்ப வரைக்கும் சீரியலில் அவர் சண்டை போடுற சீன் வந்தா ரொம்ப ஜாலியா ரசிச்சுப் பார்ப்பேன். ரொமான்ஸ் சீன் இருந்தா அதைப் பார்க்கவே மாட்டேன். அதனாலேயே ஆரம்பத்தில் `தமிழும் சரஸ்வதியும்' சீரியல் பார்க்காம இருந்தேன். இப்பதான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்’’ என்று சௌம்யா சொல்ல, ‘‘டைரக்டர் குமரன் சார் ரொம்ப அழகா ரொமான்ஸ் காட்சிகள் எடுப்பாங்க. இதைப் பார்த்துட்டு அவர் இன்னும் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கவும் வாய்ப்பிருக்கு’' என செளம்யாவை வம்பிழுத்தவாறே பேச ஆரம்பித்தார் நவீன்.

விகடன் TV: “ரொமான்ஸ் சீன் இருந்தா பார்க்கவே மாட்டேன்!”

‘‘செளம்யாவுக்கு என் வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப போல்டான குரல்னு அடிக்கடி சொல்லுவாங்க. சர்ச்ல கொயர்ல பாடிப்பாடி வாய்ஸ் இப்படி வந்திருக்குன்னு நினைக்கிறேன். சென்னை வந்த பிறகுதான் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்னு ஒரு கரியரே இருக்குன்னு தெரிஞ்சது. டப்பிங் மிகப்பெரிய உலகம். உண்மையாகவே எல்லா டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் ஹேட்ஸ் ஆப்’’ என்றவரிடம், தனுஷுக்கு டப்பிங் கொடுத்த அனுபவம் குறித்துக் கேட்டேன்.

‘‘சத்யஜோதி பிலிம்ஸ் ஆபீஸுக்குள்ள என்ட்ரி ஆகுற வரைக்கும் தனுஷ் சாருக்குத்தான் டப்பிங் பேசப் போறேன்னு எனக்குத் தெரியாது. `பட்டாஸ்' படத்தோட கன்னட வெர்ஷனுக்கு தனுஷ் சாருக்கு நான் டப்பிங் பேசினேன். அதுல டூயல் ரோல்ங்கிறதனால, ரொம்ப சவாலா இருந்துச்சு. அந்தப் படத்தில் அவருடைய பாடி லாங்குவேஜுக்கு ஏற்ற மாதிரி குரல் கொடுத்தேன். அது ஸ்கிரீன்ல ரொம்பவே பொருந்திப் போயிருக்குன்னு பலரும் பாராட்டியிருந்தாங்க’’ என்றவர், சீரியல் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்குக் கடவுள் கொடுத்த வரம் ‘தமிழும் சரஸ்வதியும்' சீரியல். ஆழ்ந்த தேடல் என்கிட்ட எப்பவுமே இருக்கும். அதுக்குக் கிடைச்ச பலனாகத்தான் இந்தத் தொடரைப் பார்க்கிறேன். இப்படியான ஒரு டீமுடன் சேர்ந்து ஒர்க் பண்ணுறது மிகப்பெரிய பாக்கியம். விகடன் புரொடக்‌ஷன் லோகோவை சின்ன வயசில பார்த்து ரசிச்சிருக்கேன். அந்த பிராண்ட்ல இப்ப நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. `கார்த்திக்' கேரக்டர் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் இன்னமும் என் வாழ்க்கையில் சக்சஸ் பார்க்கவே இல்ல... பார்த்ததாக உணரவும் இல்ல. பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டுமே இந்த சீரியலில் பண்ணுறதால மக்கள்கிட்ட பாராட்டும் கிடைக்குது, திட்டும் கிடைக்குது’’ என்றவர், தன் முதல் குழந்தை பிராக்லியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

‘‘இவன் பெயருக்குப் பின்னாடி ஒரு வரலாறே இருக்கு. இப்ப இவனுக்கு ரெண்டரை வயசாகுது. எங்களுடைய மொத்த வீடே இவன் கன்ட்ரோலில் தான் இருக்கும்’’ என்றதும் குழந்தை அழும் குரல் கேட்க, ‘`அண்ணன் வந்தது பாப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சு போல... ஒரு நிமிஷம் ப்ளீஸ்’' என்றவாறு அவர்களின் இரண்டாவது குழந்தையைத் தூக்கி வந்தார் செளம்யா. குழந்தையின் அழுகை நின்றதும், நவீன் தொடர்ந்தார்.

‘‘இது எங்க பொண்ணு யுநேத்ரா. இப்ப ஒரு வயசாகுது. டெலிவரி சமயத்தில் நான் தெலுங்கில் லீடு ரோலில் நடிக்கிற சீரியல் ஷூட்டிங் இருந்தது. ஆனாலும், அன்னைக்கு குழந்தை பிறந்திடும்னு டாக்டர் சொன்னதால டெலிவரி சமயத்துல ஆஸ்பத்திரியில் அவங்க கூடவே இருந்தேன். அந்தச் சமயத்துல இவங்க பட்ட வலிக்கு என்ன சமாதானம் சொல்றதுன்னே தெரியல. முக்கியமா எங்க டாக்டர் இந்துமதிக்கு நன்றி சொல்லியே ஆகணும். குழந்தை பிறந்ததுமே முதலில் என் கையிலதான் கொடுத்தாங்க. அவளைக் கையில் வாங்கினதும் செளம்யாவை மறந்துட்டேன். அவளைப் பார்த்து அழுதுட்டே இருந்தேன். அந்தத் தருணம் இப்ப நினைச்சாலும் மெய் சிலிர்க்குது’’ என்றதும் செளம்யா பேச ஆரம்பித்தார்.

விகடன் TV: “ரொமான்ஸ் சீன் இருந்தா பார்க்கவே மாட்டேன்!”

‘‘என்ன குழந்தைன்னு நான் கேட்டுட்டே இருந்தேன். இவர் பதில் சொல்லாம அழுதுட்டே இருந்தார். அப்புறமா டாக்டர்தான் பெண் குழந்தைன்னு சொன்னாங்க. முதன்முதலில் அவ கண் திறந்து பார்த்தது நவீனைத்தான். நான் மாசமா இருந்தப்ப எல்லாரும் எனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும்னு சொன்னாங்க. நாங்களும் எங்களுக்குப் பையன்தான்னு முடிவே பண்ணிட்டோம். அதனாலேயே புளூ கலர் டி-சர்ட் போட்டு நவீன் வந்திருந்தார். குழந்தை பிறந்த பிறகுதான் ‘எல்லாக் குழந்தையும் ஒண்ணு தானே, நாம ஏன் இவ்ளோ முட்டாளாக இருந்திருக்கோம்’னு உணர்ந்தோம். ஆண் குழந்தைன்னு முடிவு பண்ணிட்டதால பெண் குழந்தைக்கான பெயர் எதுவும் நாங்க யோசிக்கக் கூட இல்ல. அப்புறமா ராசிப்படி முடிவு பண்ணி `யுநேத்ரா'ன்னு பெயர் வச்சோம். யுநேத்ரான்னா யுகத்தின் ஒரு அழகான விழின்னு அர்த்தம். இவங்க ரெண்டு பேரும் வந்ததும் எங்களுடைய வாழ்க்கை முழுமையான மாதிரியொரு உணர்வு’’ என நெகிழ்ச்சியுடன் யுநேத்ராவையும் பிராக்லியையும் இருவரும் முத்தமிட்டுக் கட்டிக் கொண்டனர். நெகிழ்ச்சியுடன் நவீன் ஆரம்பித்தார்.

‘‘நிறைய நிராகரிப்புகளைச் சந்திச்ச பிறகு ‘இந்தத் துறையே வேண்டாம்... விட்டுடலாம்’னு முடிவெடுத்திருக்கேன். ஒரு ஐ.டி கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குப் போய் செலக்ட் ஆகி கால் லெட்டரும் வந்துடுச்சு. அந்த நேரத்துல எனக்கு `நாளைக்கு ஷூட் இருக்கு வர்றீங்களா?'ன்னு அழைப்பு வந்துச்சு. இப்படித்தான், ‘நீ பார்க்க இன்னும் எவ்வளவோ இருக்கு... அதுக்குள்ளேயே விட்டுட்டா போறே’ன்னு மறுபடி இங்க கொண்டு வந்து விட்டுடும். எல்லாச் சூழ்நிலையிலும் எனக்கு ஆதரவா என் கூடவே இவங்க இருந்திருக்காங்க. அதுக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன்’’ என்றவரின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டார் செளம்யா.

அந்த அழகான குடும்பத்துக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்!