
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கிவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்துப் பலவிதமான பேச்சுகள் கேட்கின்றன.

‘வலிமை' படத்தில் சைத்ரா ரெட்டி, பியர்லி உள்ளிட்ட சில டி.வி நட்சத்திரங்கள் நடித்ததுபோல அஜித்தின் 61-வது படத்திலும் டி.வி நட்சத்திரங்கள் சிலர் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்கள். படம் குறித்த எந்தத் தகவலும் வெளியில் செல்லக் கூடாது என ஸ்ட்ரிக்டான உத்தரவு இவர்களுக்குப் போயிருக்கிறது. ‘‘சீக்ரெட்டை எப்படி மெயின்டெய்ன் பண்ணினாங்க என சைத்ராவிடம் கேட்க வேண்டும்’’ என்கிறார்கள் இவர்கள்.

எங்காவது பிக்னிக் சென்றால், அந்த ஏரியாவில் இருக்கும் தன் நண்பர்களிடம் பேசி, அவர்கள் மூலமாகவே தன் யூடியூப் சேனலுக்கு கன்டென்டும் வாங்கிவிடுகிறார் நிஷா கணேஷ் வெங்கட்ராம். அதேநேரம் அந்த கன்டென்ட் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பலன் கிடைக்குமாறு பார்த்துக்கொள்கிறாராம்.

சித்ரா இருந்தவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டைக் கலகலவென வைத்திருப்பதில் அவரது பங்கே அதிகமாக இருந்ததாம். சித்ராவுக்குப் பிறகு ‘முல்லை' கேரக்டருக்குக் கமிட் ஆன காவ்யாவும் தற்போது அதே இடத்தைப் பிடித்திருக்கிறார். ஸ்பாட்டில் உடன் நடிக்கும் பலருடைய குரலையும் மிமிக்ரி செய்து காவ்யா பேசினால், அதற்கு அவ்வளவு கைத்தட்டல்கள் கிடைக்கிறதாம்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கிவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்துப் பலவிதமான பேச்சுகள் கேட்கின்றன. முதல் ஐந்து சீசன்கள்தான் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் என ஒப்பந்தம் இருந்ததாகச் சிலர் கூறிவரும் நிலையில் இதுகுறித்து நம்பகமான சிலரிடம் விசாரித்ததில், அவர்களோ, நிகழ்ச்சி தொடர்ந்து விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாவதற்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள்.


வடசென்னைப் பகுதியில் வாடகைக்கு இருந்தனர் அனிதா சம்பத்தின் பெற்றோர். அனிதா சம்பத் தலையெடுத்த பிறகுதான் ஓரளவு வசதி வாய்ப்பைப் பெற்றது அந்தக் குடும்பம். அனிதா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அந்த நிகழ்ச்சியையே பக்கத்து வீட்டு டி.வி-யில்தான் பார்த்ததாக அனிதாவின் தந்தையும் சில மாதங்களுக்கு முன் மறைந்த பத்திரிகையாளருமான ஆர்.சி.சம்பத் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது சொந்த வீடு வாங்கிக் குடியேறியிருக்கும் அனிதா சம்பத், ‘‘நிறைய வலி, மெனக்கெடல்களுக்குப் பிறகு கனவு நிறைவேறியிருக்கிறது'’ என்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
அந்த இரண்டு பேரும் ஒரே நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இருவருக்குமே சரிசமமாக சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ‘புக'ழின் வெளிச்சம் கொஞ்சம் பட்டதும், ஒருவருக்குத் தலைகால் புரியவில்லை. யாராவது போனில் அழைத்தால், உதவியாளரை விட்டே ‘என்ன விஷயம்' எனக் கேட்கச் சொல்கிறாராம். சினிமா ஏரியாவிலும்கூட, ‘ரொம்ப அழும்பால்ல இருக்கு' என இவர் குறித்து முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னொருவரோ எந்த ஆரவாரமும் இல்லாமல் சில நல்ல காரியங்களைச் செய்துவருகிறார். இவருடைய இந்தச் செயல்கள் குறித்தும் சினிமா வட்டாரத்தில் தெரியவர, இவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.