
சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்குத் திரும்பியிருக்கிறார் வந்தனா.

மறுபடியும் ஜீ தமிழ் சேனலுக்கு வந்துவிட்டார் அர்ச்சனா. சேனலின் அடையாள ஆங்கராக இருந்து ரஜினிகாந்த் பேட்டி வரை எடுத்தவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் காட்டி அழைத்துச் சென்றது விஜய் டி.வி. அந்த நிகழ்ச்சி மூலம் அர்ச்சனா எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் நிறைய. இப்போது ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசனைத் தொகுத்து வழங்க ஜீ தமிழ் அழைக்க, ஓகே சொல்லி விட்டாராம் அர்ச்சனா.

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்குத் திரும்பியிருக்கிறார் வந்தனா. ‘வம்சம்’, ‘கல்யாணம் முதல் காதல்’, ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பல சீரியல்களில் நடித்தவர். ‘வில்லி வேடமா, கூப்பிடுங்கள் வந்தனாவை’ என ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக நெகட்டிவ் கதாபாத்திரத்துக்கு இவரை அழைத்தது சின்னத்திரை உலகம். இப்போது ‘மகராசி’ தொடரிலும் வில்லிதான். ‘எப்பதான் ஹீரோயின் ஆவீங்க’ எனக் கேட்டால், ‘‘என்ன பண்றது, என்னுடைய ரசிகர்கள் என்னை இப்படித்தான் எதிர்பார்க்குறாங்க’’ எனச் சிரிக்கிறார்.

‘சத்யா 2’ தொடரில் இரண்டாவது ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் ஜெனிப்ரியா. தொடரில் நிறைய திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ இருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகவே தான் கமிட் ஆகியிருப்பதாகவும் சொல்கிறார். தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வந்தவருக்கு இப்போது டாக்டர் வேடமாம்.

டி.டி., ரம்யா, பாவனா என ஒரே சமயத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த தொகுப்பாளினிகளில் இன்றைக்கும் லைம் லைட்டில் இருப்பவர் என்றால் பாவனா மட்டுமே. ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக மும்பைப் பக்கம் சென்றுவிட்டாலும் இன்றைக்கும் சென்னையில் நடக்கும் கார்ப்பரேட் நிறுவன நிகழ்ச்சி என்றாலும் சரி, அரசு நிகழ்ச்சி என்றாலும் சரி, இவரைத்தான் முதல் சாய்ஸாக வைத்திருக்கிறார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சியும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவும் சமீபத்திய உதாரணங்கள்.

‘‘சென்னை வந்ததன் நோக்கம் நிறைவேறி விட்டது’’ என்கிறார் வித்யா பிரதீப். ‘நாயகி’ தொடர் மூலம் சீரியல் ரசிகர்களிடம் பரிச்சயமாகிய இவர் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். ஆனாலும் நடிப்பைக் குறிப்பிட்டு நோக்கம் நிறைவேறியதாகச் சொல்லவில்லை. ‘‘கண் மருத்துவம் படிக்கவே சென்னை வந்தேன். அதுல டாக்டர் பட்டம் வாங்கியாச்சு’’ என்கிறார். அது தொடர்பான ஆராய்ச்சிக்காக மேற்கொண்டு வெளிநாடு செல்கிற முயற்சியிலும் இருக்கிறாராம்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க
சீரியல் தயாரித்த காலத்தில் நடிகர்கள் பலருக்கும் சம்பள பாக்கி வைத்தவர் அவர். நடிகர் நடிகைகள் சங்கம் வரை புகாரைக் கொண்டு சென்றதும், மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு ஒதுங்கினார். இப்போது வண்ணத் தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவர், நடிகர் நடிகைகள் பலரையும் சிபாரிசு செய்கிற இடத்தில் இருக்கிறார். ஆனால், அன்று அவரிடம் சம்பளத்தை இழந்தவர்கள் யாராவது தேடிச் சென்றால், அவர்களின் கண்ணில் படுவதை மட்டும் தவிர்க்கிறாராம்.