கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: “கைவசம் ஒரு தொழில் இருக்கு!”

ரேமா
பிரீமியம் ஸ்டோரி
News
ரேமா

கோர்ஸ் முடிக்கிறவங்க சீரியல், சினிமா ஃபீல்டுல வேலைவாய்ப்புகளைப் பெறுவதுடன், சொந்தமாகவும் பொட்டிக் மாதிரி வைக்க முடியும்.

கோவிட் ஊரடங்கால், பிசினஸ் மேன், டியூஷன் வாத்தியார் என ஆளுக்கொரு அவதாரம் எடுத்திருக்கிறார்கள் சின்னத்திரைப் பிரபலங்கள் சிலர். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது ஆன்லைனில் சில பணிகளைத் தொடங்கிய இவர்களிடம் பேசினேன்.
ரேமா
ரேமா

‘ரேமா’ஸ் பெலீஸா அடாலியர்’ என்பதுதான் ‘சின்னத்தம்பி’ ரேமாவின் ஆன்லைன் அகாடமியின் பெயர். ‘பெயரே வித்தியாசமா இருக்கே’ என்றால், ‘‘புரியும்படி சொல்லணும்னா இது ஒரு பியூட்டி ஸ்டூடியோ, பெலீஸான்னா அழகுன்னு அர்த்தம். வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வச்சேன்’’ என்கிறார். ரேமா ஃபேஷன் டிசைனிங் முடித்தவராம்.

‘‘ஃபேஷன் டிசைனிங், ஹேர் ஸ்டைலிங், மேக்-அப், நெய்ல் ஆர்ட், டெய்லரிங்னு எல்லாப் பயிற்சிகளுமே தந்துட்டு வர்றேன். எங்களுக்குன்னு தனியா ஒரு ஆப் இருக்கு. பயிற்சியில சேர்றவங்க சௌகரியத்தைப் பொறுத்து வகுப்புகளின் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். கட்டணம் சாதாரண மிடில் கிளாஸ் பெண்கள் கட்டற அளவுக்குத்தான் நிர்ணயிச்சிருக்கோம்.

கோர்ஸ் முடிக்கிறவங்க சீரியல், சினிமா ஃபீல்டுல வேலைவாய்ப்புகளைப் பெறுவதுடன், சொந்தமாகவும் பொட்டிக் மாதிரி வைக்க முடியும். இந்த ஒரு வருஷத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடிச்சுப் போயிருக்காங்க’’ என்கிறார் ரேமா.

நித்யா
நித்யா

ஜாவா ஸ்கிரிப்ட் தொடங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் அப்டேட் ஆகி வரும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை தெரிந்துகொள்வதற்கான பயிற்சிகளைச் சில நிறுவனங்கள் ஆன்லைனிலேயே நடத்திவருகின்றன. அது மாதிரி ஒரு நிறுவனத்தில் டியூட்டராகச் சேர்ந்து இந்திய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாட்டு மாணவர்களுக்கும் வகுப்பெடுத்துவருகிறார் ‘பிக் பாஸ்’ நித்யா.

‘‘தொழில்நுட்பத் துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை முதல்ல எங்களுக்குப் பயிற்சி அளிச்சுடறாங்க, நாங்க பசங்களுக்கு வகுப்பெடுக்கிறோம். நான் இப்ப அதிகமா வகுப்பெடுக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பசங்களுக்குத்தான். இந்த ட்ரெய்னிங் எடுக்கிற பசங்களுக்கு படிச்சு முடிச்சதும் ஐ.டி.ஃபீல்டுல வேலை நிச்சயம்னு உறுதியாச் சொல்லலாம்’’ என்கிறார் நித்யா.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

அடிப்படையில் சார்ட்டட் அக்கவுன்டன்ட்டான நடிகர் ‘ஆடிட்டர்’ ஸ்ரீதர் 11,12-ம் வகுப்பு மற்றும் பி.காம் மாணவர்களுக்கு ஆன்லைனில் அக்கவுன்டன்சி வகுப்பெடுத்துவருகிறார்.

‘‘போன வருஷம் கோவிட் வந்ததும், வீட்டுல வயசானவங்கெல்லாம் இருந்ததால ஷூட்டிங் போக வேண்டாம்னு முடிவு செய்தேன். பள்ளிகள் மூடியிருந்த அந்தச் சூழல்ல ஆன்லைன்ல நடந்த தேர்வுல தன்னுடைய ப்ளஸ் 2 படிக்கிற மகள் மார்க் ரொம்பவே கம்மியா வாங்கியதாச் சொல்லி நண்பர் ஒருத்தர் வருத்தப்பட்டார். ஏன்னா, நல்லாப் படிக்கிற குழந்தை அது. அந்தப் பொண்ணுகிட்ட பேச ஆரம்பிச்சுத் தொடங்கிய பணி. மூணு மாசத்துல நடந்த அடுத்த தேர்வுல அந்தப் பொண்ணு 97 மார்க் வாங்கிட, அந்த ஸ்கூல்ல இன்னும் நாலு பேருக்கு அது தெரிய அவங்களும் எங்கிட்ட ஸ்டூடன்ட்டா சேர்ந்தாங்க. அப்படியே மாணவர்களுடைய எண்ணிக்கை பெருகப் பெருக, இப்ப பகுதிநேர வாத்தியாராகிட்டேன்’’ என்கிற ஸ்ரீதர் சி.ஏ வகுப்பும் எடுக்கிறாராம்.

ஜெனிஃபர்
ஜெனிஃபர்

‘நேச்சுரல்ஸ் ஜாய்’ என்கிற பெயரில் கெமிக்கல்கள் கலக்காத பொருள்களைத் தயாரிக்கும் பயிற்சியை ஆன்லைனில் வழங்கிவருகிறார் ‘கில்லி’ ஜெனிஃபர்.

‘‘ஆரம்பத்துல அப்பா புதுச்சேரி போய் இந்தப் பயிற்சிகளை எடுத்துட்டு வந்தார். எனக்கு நலுங்கு மாவு முதலான ஹோம் மேடு பொருள்களை அவர்தான் தயாரிச்சுச் தந்திட்டிருந்தார். ஒரு கட்டத்துல ‘நீ படிச்சன்னா, உன்னை ஃபாலோ பண்ணுகிறவர்களுக்கும் நீ சொல்லித் தரலாம்’னு ஐடியா தந்ததும் அவர்தான்.

போன வருஷம் லாக்டௌன் இந்த முயற்சியைச் செயல்படுத்த வச்சது. பயிற்சி தர்றதுடன் தேவையான மூலப் பொருள்களையும் நானே ஏற்பாடு செய்து தந்திடுறேன். குளிக்கற சோப், துணி துவைக்கிற சோப், ஹேண்ட் வாஷ் உள்ளிட்ட சில பொருள்களைத் தயார் செய்யப் பயிற்சி தந்திட்டிருந்த என்னுடைய இன்ஸ்ட்யூட்டை, ஃபேஸ் மாய்ஸரஸிங், சேலை கட்டுவதற்குப் பயிற்சின்னு இப்ப கொஞ்சம் விரிவாக்கியிருக்கோம்’’ என்கிறார் ஜெனிஃபர்.