
‘பவித்ர லட்சுமிக்கு என்ன பிரச்னை?’ ஏதோ புதிதாக வரப்போகும் விளம்பரத்தின் டயலாக் என நினைக்காதீர்கள்.

பாடகியாக இருந்து சீரியல் பக்கம் வந்த ‘பகல் நிலவு' சௌந்தர்யாவை அந்த சீரியலுக்குப் பிறகு சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை. இசைக் கச்சேரி, ஆல்பம் எனப் பரபரப்பாகவே இருக்கும் அவர் சினிமா முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம். ‘‘சின்ன கேரக்டர்னாலும் பேசப்படுகிற மாதிரி இருக்கிற கேரக்டருக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். சில விஷயங்கள் நடந்திருக்கு. 2023-ல் இது தொடர்பா நல்ல செய்தி நிச்சயம் சொல்ல முடியும்னு நம்பறேன்’' என்கிறார்.

‘பவித்ர லட்சுமிக்கு என்ன பிரச்னை?’ ஏதோ புதிதாக வரப்போகும் விளம்பரத்தின் டயலாக் என நினைக்காதீர்கள். சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது நிஜமாகவே இந்தக் கேள்விதான் ஹாட் டாபிக்காக வட்டமடித்துவருகிறது. காரணம், துப்பட்டா, மாஸ்க் உதவியால் முழுக்க முகத்தை மறைத்துக்கொண்டு கடந்த வாரம் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பவித்ர லட்சுமியின் வருகைதான். அடையாளம் தெரியாததால் மீடியாக்கள் அப்போது இவரைக் கண்டுபிடிக்கவில்லை. நேராக அலுவலகத்தின் உள்ளே சென்றவர் புகார் ஒன்றைத் தந்துவிட்டு, அரை மணி நேரத்தில் வெளியேறி விட்டாராம். ‘‘பர்சனலான ஒரு பிரச்னைங்க’' என்கிறார்கள் அவருடைய நெருக்கமான நண்பர்கள். அவரை நன்கு அறிந்த வேறு சிலரோ, ‘‘கத்தரிக்காய் எந்த நேரத்திலும் கடைத்தெருவுக்கு வரலாம்'’ என்கிறார்கள்.


தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் நீண்ட நாள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையைப் பிடித்த ‘சந்திர லேகா'வில் நடித்த ஸ்வேதா, தன் நீண்ட நாள் காதலரைக் கரம்பிடித்து இல்லற வாழ்வில் நுழைந்திருக்கிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 4-ம் தேதி சென்னைப் போரூரில் நடந்தது. மாப்பிள்ளை விளம்பரப் படங்களில் நடித்துவருகிற மாடல் என்கிறார்கள்.

ஸ்டேண்ட் அப் காமெடி, நகைச்சுவைப் பட்டிமன்றம், நடிப்பு எனப் பயணித்து வந்த மதுரை முத்து புதிதாக ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கியிருக்கிறார். கேட்டால், ‘‘பாட்டையும் ஒரு கை பார்த்துடலாம்ணே'’ என்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
சம்பளம் அதிகம் என்பதற்காக இருந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குத் தாவிய ‘நட்சத்திர’ம் அவர். இப்போது சென்ற இடத்தின் நிலைமை சரியில்லை. மறுபடியும் பழைய இடத்துக்குத் திரும்பி விடலாமென நினைத்து நண்பர்கள் சிலர் மூலம் தூது விட்டிருக்கிறார். ‘‘இங்கிருந்து சென்றபோது என்ன சம்பளமோ, அதேதான் கிடைக்கும், விருப்பமிருந்தால் வரலாம்’’ எனப் பதில் வந்திருக்கிறது. ரொம்பவே ஃபீலிங்கில் இருக்கிறாராம்.