சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் TV: “என்னைக் கிண்டலடித்த கலைஞர்!”

மோனிகா
பிரீமியம் ஸ்டோரி
News
மோனிகா

‘என்னம்மா, எல்லாரையும் வீட்டுக்குள் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு நீ மட்டும் வெளியில கிளம்பிட்டியேம்மா’

’வானிலைச் செய்திகள்’ வாசித்த மோனிகாவை நினைவிருக்கிறதா? இப்போது ‘எழுச்சி’ யூடியூப் சேனலில் அரசியல் கருத்துகளை முன்வைத்து புயலாய்க் கொந்தளிப்பவரை, இந்தப் புயல் காலத்தில் தேடிப் பிடித்துப் பேசினேன்.

``டிவியில் மழைச்செய்தி பார்க்கிறப்பெல்லாம் இன்னைக்கும் பலருக்கும் உங்க முகம்தான் ஞாபகத்துல வருது. அந்த நாள்களின் மறக்க முடியாத தருணங்களை நினைவுகூர முடியுமா?’’

‘`நியூஸ் ரீடர் ஆகணும்கிறது என் சின்ன வயசுக் கனவு. ஆனா சன் டிவியில செய்தி முடியறப்ப ரெண்டு நிமிஷத்துல வந்து போற ‘வானிலைச் செய்தி’ வாசிக்கிற வாய்ப்புதான் கிடைச்சது. ஆனா போகப் போக அந்த வேலை ரொம்பவே பிடிச்சிப்போச்சு. மழைக்காலம் வந்தாலே ‘எல்லாரும் நம்மைத் தேடுவாங்கல்ல’ங்கிற அந்த நினைப்பே சந்தோஷத்தைக் கொடுக்கும். அதனால வெளியில க்ளைமேட் எப்படி இருந்தாலும் உற்சாகத்துடன் செய்தி வாசிக்கக் கிளம்பிடுவேன். பத்து வருஷமா தொடர்ந்து ‘வானிலைச் செய்தி’ வாசிச்ச பிரபல்யத்தை வெச்சுதான் சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்தன.

மறக்க முடியாத நிகழ்வு 2008-ம் வருஷம் நவம்பர் மாசம் நடந்தது. அப்ப வந்த ‘நிஷா புயல்’ எச்சரிக்கைச் செய்தியைப் படிச்சு முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்னு சன் டிவி இருந்த அறிவாலய வளாகத்தை விட்டு வெளியில வர்றேன். காத்து மழை பயங்கரமா மிரட்டுது. ரெயின் கோட் போட்டுகிட்டு ஸ்கூட்டியில கிளம்பினவ, `லேசா மழை விடட்டும்; பத்து நிமிஷம் பார்த்துட்டுப் போலாம்’னு வாசல் ஓரத்துலயே நின்னுட்டேன். அதுவரைக்கும் அறிவாலயத்துல இருந்த கலைஞர் அந்தச் சமயத்துலதான் வீட்டுக்குக் கிளம்பறார். அப்ப அவர் முதலமைச்சர். அறிவாலய வாசலுக்கு வந்தவர், ஓரமா நின்ன என்னைக் கவனிச்சு கையசைச்சுக் கூப்பிட்டார்.

‘என்னம்மா, எல்லாரையும் வீட்டுக்குள் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு நீ மட்டும் வெளியில கிளம்பிட்டியேம்மா’ன்னு அவருக்கே உரிய நகைச்சுவையோட கேட்டார். ‘வீட்டுக்குக் கிளம்புறேங்கய்யா’ன்னு சொன்னேன். ‘எப்படிப் போறீங்க?’ன்னு கேட்டவர், பக்கத்துல இருந்தவங்களைக் கூப்பிட்டு, ‘பத்திரமா கார்ல அனுப்பி வைக்கச் சொல்லுங்கய்யா’ன்னு சொல்லிட்டுக் கிளம்பினார். உடனே முரசொலி ஜீப்ல வீட்டுல கொண்டு விட்டாங்க. சுத்தி கட்சிக்காரங்க, அதிகாரிங்கன்னு நிறையபேர் இருந்த நிலையிலும் என்னை அடையாளம் கண்டு அவர் பேசியது என் வாழ்நாள் பாக்கியம்னு சொல்வேன்.”

மோனிகா
மோனிகா

``சீரியலுக்கு நிரந்தரமா விடை கொடுத்துட்டீங்களா, ‘தெய்வம் தந்த வீடு’ தொடருக்குப் பிறகு டிவியில பார்க்க முடியலையே?’’

“சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்ப மறுபடியும் நியூஸ் ஆங்கரா ஒரு சேனல்ல கூப்பிட்டாங்க. அந்தச் சமயத்துல வேலைக்கு நேர்மையா இருந்துட்டே என் மனசுக்குப் பிடிச்ச சில விஷயங்களையும் பண்ணினேன். அதுக்கு இடைஞ்சல் வந்தப்ப வேலையை உதறிட்டு ‘எழுச்சி’ங்கிற பேர்ல ஒரு அமைப்பு, யூடியூப் சேனல்னு தொடங்கினேன்.”

``உங்கள் ‘எழுச்சி’ யூடியூப் சேனலில் பெரியார், பெண்ணுரிமை, மதவாத எதிர்ப்புன்னு வெளிப்படையா அரசியல் பேசுறீங்களே, அரசியல் சார்பு உங்களுக்கு எப்போ, எப்படி வந்தது?’’

“ஆர்த்தடாக்ஸ் பேமிலியில பிறந்து வளர்ந்த பொண்ணு நான். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பெல்லாம் சீரியஸான விஷயங்களைப் பேசினதில்லை. சிந்திச்சதில்லை. மீடியாவுக்குள் வந்தபிறகு நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். நிறைய படிக்கிறவங்களைப் பார்த்தீங்கன்னா, அவங்களால‌ நடுநிலைமைங்கிற பேர்ல போலித்தனமா இருக்க முடியாது. ஒருவித சார்பு அல்லது நிலைப்பாடு எடுக்கற மனப்பான்மை அவங்களுக்கு வந்துடும். அப்படித்தான் எனக்கும் வந்திருக்கும்னு நினைக்கிறேன். சுயமரியாதை, பெண்விடுதலை பத்தியெல்லாம் பெரியார் சொன்ன கருத்துகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால அதைப் பேசுவேன்.”

``உங்க கணவர் நடத்துகிற நிறுவனத்துடன் இணைந்து, வரும் சட்டசபைத் தேர்தல்ல ஆளுங்கட்சிக்காக சில அசைன்மென்ட் செய்யப் போறீங்கன்னு பேச்சு அடிபடுது. நிஜமா?’’

‘‘என் கணவர் `செவன் மைல்ஸ் பெர் செகண்ட்’ங்கிற பெயர்ல பொலிட்டிகல் பிராண்டிங் கம்பெனி நடத்திட்டு வர்றது நிஜம்தான். அவருடைய அரசியல் புரிதல்களை, உத்திகளை மதிச்சு அணுகுகிற கட்சிகளுக்காக ஒர்க் பண்ணிட்டு வர்றார். இதுல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு பாகுபாடு இல்லை. கணவரின் நிறுவனத்தில் என் பங்கு ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால் இதைப் பத்திப் பேச பெரிசா எங்கிட்ட விஷயமில்லை.’’