Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

நித்யா ராம்
பிரீமியம் ஸ்டோரி
News
நித்யா ராம்

கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சில மாதங்கள் ஐ.டி கம்பெனி, பிறகு வங்கி எனப் பணி புரிந்துவிட்டு நடிக்க வந்தவர் ‘செவ்வந்தி' தொடரில் வில்லியாக நடிக்கிற சிவன்யா பிரியங்கா.

மலர்
மலர்

செய்தி வாசிப்பாளராக மீடியா பணியைத் தொடங்கியவர் மலர். ‘தாலாட்டு’ தொடர் மூலம் சீரியல் நடிகையாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தவர் விரைவிலேயே தன்னுடைய இரண்டாவது சீரியலில் நடிக்கவிருக்கிறார். மே மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் அந்த சீரியல், த்ரில்லர் கதையாம். ‘செய்தி வாசிப்பாளர், சீரியல்... அடுத்து சினிமாதானே’ என்றால், ‘‘பட வாய்ப்புகளும் வருதுதான். ஆனா கிளாமர் ப்ளஸ் க்ளோஸ் அப் காட்சின்னா வேண்டாமேன்னு ஒரு நிபந்தனை வச்சிருக்கறதால இதுவரை அந்தப் பக்கம் என்னால வர முடியலை. பார்க்கலாம். எனக்கு ஏத்த ஒரு கதாபாத்திரம் வராமலா போகும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

‘மலர்’ பிரீத்தி சர்மா
‘மலர்’ பிரீத்தி சர்மா

ஷூட்டிங் ஸ்பாட்டில் மதிய உணவு இடைவேளை என்றால், வீடியோ வெளியிடுவது, அரட்டை, குட்டித் தூக்கம் என நடிகர் நடிகைகள் அவரவர்க்குப் பிடித்த விஷயங்களைச் செய்வார்கள். ‘மலர்’ பிரீத்தி சர்மாவோ பேப்பரும் பென்சிலுமாக உட்கார்ந்து வரையத் தொடங்கிவிடுகிறார். அதுதான் அவருக்கு விருப்பமாம். ஹேண்ட் பேக்கில் பேப்பர், பென்சில் எப்போதுமே வைத்திருக்கிறார்.

அரசுத் தொலைக்காட்சியான ‘பொதிகை'யில் மீண்டும் நேரடித் தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றனவாம். அவை, ஏ.வி.எம் மற்றும் ராதிகாவின் ராடான் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் சீரியல்களாம்.

நித்யா ராம்
நித்யா ராம்

‘நந்தினி’ தொடர் முடிந்ததும் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார் நித்யா ராம். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சீரியலில் நடிக்கக் கமிட் ஆகியிருக்கிறாராம். விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிற சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

சிவன்யா பிரியங்கா
சிவன்யா பிரியங்கா

கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சில மாதங்கள் ஐ.டி கம்பெனி, பிறகு வங்கி எனப் பணி புரிந்துவிட்டு நடிக்க வந்தவர் ‘செவ்வந்தி' தொடரில் வில்லியாக நடிக்கிற சிவன்யா பிரியங்கா. இப்போது பெரிய திரைக்கும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில் வீட்டில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திவருகிறார்களாம். ‘‘அதிகபட்சம் இன்னும் ஒரு வருஷம் வேணும்னா என்னால தள்ளிப் போட முடியும். அதுக்கு மேல வாய்ப்பே இல்லை, எனக்கு இருக்கிற ஒரேயொரு தயக்கம் என்னன்னா, கட்டிக்கப்போறவர் தொடர்ந்து நடிக்க விடுவாரா மாட்டாராங்கிறதுதான். அதனாலதான் ஏதாவது சாக்குச் சொல்லித் தள்ளிப்போட்டுட்டே வர்றேன்’' என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

‘கடை’ சீரியலில் கதைப்படி அண்ணன் தம்பிகளுக்கிடையே பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிற சூழலில், மூத்தவராக நடிக்கிறவர் வீட்டில் நிஜமாகவே தகராறாம். பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் அவரின் மனைவி உள்ளூர் போலீசில் கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகப் புகார் தர, பேசித் தீர்க்குமாறு அறிவுரை கூறியிருக்கிறது காவல்துறை. ஷூட்டிங்குக்காக நடிகர் தலைநகர் வந்து போகிற நாள்களில் கணவரின் நடவடிக்கை குறித்து மனைவிக்குச் சந்தேகம் வர, ‘‘அங்கேயே வீடு பாருங்கள்; நானும் வருகிறேன்’’ எனச் சொன்னாராம். கணவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதுதான் பிரச்னைக்குக் காரணமெனத் தெரிகிறது.