கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

கோவிட் காலத்தில் வீட்டிலேயே இருந்து நல்லாச் சாப்பிட்டதுல‌ பத்து கிலோ கூடி குண்டாகிட்டேன்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சூப்பர் சிங்கர்’ மாளவிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இவரது வருங்காலக் கணவருடைய வயது குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இதனால்‌ கடுப்படைந்த மாளவிகா, ‘ஆமாம்! என்னைவிட அவருக்கு ஒரு வயது குறைவுதான். அதனால யாருக்கு என்ன பிரச்னை?’ எனக் கேட்டிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`அன்பே சிவம்’ தொடர் குறித்த பேச்சுகள் தொடங்கிய புதிதில் தொடருக்கு ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டவர் பாவினி. ஆனால் திடீரென அவருக்கு ‘பிக் பாஸ்' வாய்ப்பு வர, அங்கு போய்விட்டார். எனவே அந்த இடத்துக்கு வந்திருக்கிறார் ரக்ஷா. ‘‘கோவிட் காலத்தில் வீட்டிலேயே இருந்து நல்லாச் சாப்பிட்டதுல‌ பத்து கிலோ கூடி குண்டாகிட்டேன். என்னைக் கமிட் செய்ய வந்த தயாரிப்பாளர், பார்த்து நிஜமாகவே ஷாக் ஆகிட்டார். ‘இவ்ளோ குண்டாகிட்டீங்களே'ன்னு பின்வாங்கினார். ரொம்பவே கஷ்டமாப்போச்சு. ‘ஒரு டார்கெட்டா வச்சு எடையக் குறைச்சுக் காட்டுறேன், டைம் கொடுங்க’ன்னு கேட்டேன். கொஞ்சமும் நம்பிக்கையே இல்லாமத்தான் தலையாட்டிட்டுப் போனாங்க. உடனே சில ஒர்க் அவுட்கள், சில உணவு மாற்றங்கள்னு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து அந்த 10 கிலோவைக் குறைச்சதனால‌ தமிழ் சீரியல்ல அடுத்த ரவுண்ட் தொடங்கியிருக்கு’' என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆரம்பத்தில் ‘கஸ்தூரி’ உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கியவர் தவ.கார்த்திக். பிறகு தெலுங்கு சீரியல் பக்கம் வாய்ப்பு வர, அங்கு சென்றார். கடந்த பத்தாண்டுகளாக அங்கு முன்னணி சேனல்களில் பல ஹிட் சீரியல்களைத் தந்தவரை மறுபடியும் தமிழுக்குக் கூட்டி வந்திருக்கிறது சன் டி.வி. ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பாகும் இரவு பத்து மணி ஸ்லாட்டில் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘பூவே உனக்காக’ தொடரை இப்போது இயக்கிவருகிறார் கார்த்திக். ‘‘மொழி பேதமில்லாம திறமை இருந்தா கொண்டாடுறதுல தெலுங்கு தேசம் நமக்குச் சளைத்தது இல்லைங்கிறதை என் அனுபவத்துல இருந்து கத்துக்கிட்டேன்’’ என்கிற கார்த்திக், திரைப்பட இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையில் சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அப்ளிகேஷன் போட்டவராம். டைரக்‌ஷன் கோர்ஸ் கிடைக்காமல் ‘பிலிம் ப்ராசஸிங்’ கிடைக்க, அந்தப் படிப்பையும் பாதியில் விட்டுவிட்டு ‘அனுபவம் கைகொடுக்கும்’ என நேரடியாக சீரியல் பக்கம் வந்தவர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ரன்’ சீரியலில் வில்லனாக நடித்து சின்னத்திரையில் கவனம் பெற்ற விஜித், ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால் அவை பலன் தரவில்லை. எனினும் விடா முயற்சி செய்து, இப்போது ‘டைட்டில்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ஹீரோ மாற, அந்த இடத்துக்கு விஜித்தைக் கேட்டிருக்கிறார்கள். கைவசம் உள்ள இரண்டு படங்களின் ரிசல்ட்டுக்குப் பிறகே மீண்டும் சீரியல் பண்ணுவது குறித்து யோசிக்க இருப்பதாகச் சொல்கிறார் விஜித்.

கடந்த சில வாரங்களாக சீரியல் ஏரியாவிலும் கெத்து காட்டத் தொடங்கவிருக்கிறது விஜய் டி.வி. ‘‘சீரியல் என்றால் ‘சன்’னை வீழ்த்த முடியாது’’ எனச் சின்னத்திரையில் இருந்துவந்த ஒரு நிலையை இது கொஞ்சம் அசைத்திருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த வாரம் வெளியான டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் டாப் 5 சீரியல்களில் மூன்று சீரியல்கள் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள். ‘சன்’ தரப்பு இதை ரொம்பவே சீரியஸாக எடுத்திருப்பதால், அங்கு ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் அடுத்தடுத்த நாள்களில் எதிர்பாராத காட்சிகள், திருப்பங்கள் அரங்கேறலாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

குடும்பக் கட்டுப்பாட்டை விளம்பரப்படுத்தும் சீரியலுக்கு அந்த நடிகையைக் கூப்பிட்ட போதே அவரின் கணவர் எச்சரித்திருக்கிறார். ‘‘ஏற்கெனவே கசப்புடன் வெளியில வந்திருக்கோம். திரும்பவும் போனா மரியாதை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது’’ எனச் சொன்னாராம். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் கமிட் ஆனார் நடிகை. இதனால் கணவன்-மனைவி இடையில் கருத்து வேறுபாடுகூட உண்டானதாகச் சொன்னார்கள். இப்போது ‘எனக்கு மரியாதை இல்லாத இடத்துல என்னால இருக்க முடியாது’ என்றபடி வெளியேறியிருக்கிறார் நடிகை.