
ஓ.டி.டி.க்கு என்று தனியாகத் தொடங்கப்படவிருக்கும் பிக்பாஸ்க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை விறுவிறுவென நடந்து வருகிறதாம்.
`வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்து வரும் நட்சத்திரா கேரளாவைச் சேர்ந்தவர். அந்த சீரியலில் கமிட் ஆன போது, ‘வள்ளி திருமணம்’ நாடகம் குறித்தும் புராண வள்ளி குறித்தும் ஆர்வமாகக் கேட்டாராம். எனவே சீரியல் யூனிட் காட்பாடி அருகே அமைந்துள்ள ‘வள்ளிமலை’ முருகன் கோவிலுக்கே அவரை அழைத்துச் சென்று வந்துள்ளது. வள்ளி முருகனைச் சந்தித்த இடம், வள்ளியை முருகன் கைபிடித்த இடம் ஆகியவை இந்தப் பகுதிதான் என்பது இந்தக் கோவிலின் தல வரலாறு. வள்ளி கோவில் விசிட் குறித்து நட்சத்திராவிடம் கேட்ட போது, ‘‘என் வாழ்க்கையில மறக்க முடியாத சீரியலா இது நிச்சயம் அமையும். ஏன்னா சுமார் 400 படிகள், அதற்கு மேல கரடுமுரடான பாதையில அடர்ந்த காடுகளுக்கு நடுவே இருபது நிமிஷப் பயணம்னு மலை உச்சிக்கு ஏறிய அனுபவம் த்ரில்லிங்கா இருந்தது. அடிப்படையில நான் சிவ பக்தை. அவருடைய மகன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு இந்த சீரியலைத் தொடங்கியிருக்கேன். ஆனால் இது புராண சீரியல் இல்லை” என்கிறார்.
சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரை மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது ஊரடங்கு அச்சம். ‘‘ஷூட்டிங் இல்லாமல் வேலைவாய்ப்பு பறி போகும்னு நினைச்சுக் கவலைப்படுறதா அல்லது கொரோனா இருந்தாலும் ஷூட்டிங் வரணும்னு கெடுபிடி காட்டற சேனல்களை நினைச்சுக் கவலைப்படுறதான்னு தெரியலை’’ எனப் புலம்பத் தொடங்கி விட்டனர். ‘‘வயசாயிடுச்சுன்னு முதல் அலையில என்னையெல்லாம் நடிக்க வரவேண்டாம்னு சொன்னாங்க. இந்த தடவை யார் யாரை அனுப்பப் போறாங்களோ’’ என்கிறார் சீனியர் நடிகை எஸ்.என்.பார்வதி.
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ரம்யா, ஸ்ரீத்திகா, ‘மின்னல்’ தீபா, நீபா, சிந்து, தேவி கிருபா என இந்த முறைதான் அதிக எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த ஆர்வம் குறித்துக் கேட்டால், ‘‘சீரியல்களில் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு வேணும்னா, இனி நாங்களும் சங்கப் பொறுப்புல இருந்தாதான் அது நடக்கும்னு தோணுச்சு, அதான்’’ என்கிறார்கள்.
ஓ.டி.டி.க்கு என்று தனியாகத் தொடங்கப்படவிருக்கும் பிக்பாஸ்க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை விறுவிறுவென நடந்து வருகிறதாம். பழைய போட்டியாளர்களின் வரிசையில் நடிகை ஓவியாவைத்தான் முதலில் டிக் செய்திருக்கிறார்கள். அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்குமென சேனல் நம்புகிறதாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...
பெரிய நிகழ்ச்சிக்குள் இருந்து ஜோடியாக வெளியில் வந்தது மட்டுமல்லாமல் பொது இடங்களுக்கும் சேர்ந்தே சென்று வருகிறது அந்த ஜோடி. கேட்டால், தங்களுக்குள் எதுவுமில்லை என்கிறார்கள். பையன் சைடில் எந்தப் பிரச்னையும் இல்லை, பெண் தரப்பில் அவரது சகோதரர்தான் ‘இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது’ என தடையாக நிற்பதாகச் சொல்கிறார்கள்.