
விஜய் டெலி அவார்ட்ஸில் தனக்கு சிறந்த நகைச்சுவை நடிகை விருது கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தாராம் நடிகை கம்பம் மீனா.


‘அபி டெய்லர்ஸ்’ சீரியலில் இருந்து ஃபரினா வெளியேறியிருக்கிறார். ‘‘இப்ப ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். அதோட அப்பப்ப வர்ற சில ஷோக்கள் போதும்னு நினைக்கிறேன். பாப்பாவுடனுடம் நேரம் செலவழிக்கணுமில்லையா, அதனாலதான் இந்த முடிவு’’ என்கிறார்.

விஜய் டெலி அவார்ட்ஸில் தனக்கு சிறந்த நகைச்சுவை நடிகை விருது கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தாராம் நடிகை கம்பம் மீனா. ஆனால் அந்த விருது நடிகை அர்ச்சனாவுக்குச் சென்றுவிட்டதில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் சமூக வலைதளங்களில் ‘அர்ச்சனாவுக்குத் தந்ததுக்குப் பதிலா எங்க செல்வி அக்காவுக்குத் தந்திருக்கலாம்' (பாக்யலட்சுமி தொடரில் மீனாவின் கேரக்டர் பெயர்) என அவரின் ரசிகர்கள் ஆறுதல் கமென்டுகளை அள்ளித் தெளிக்க, ‘எனக்கு இது போதும்' என மனதைத் தேற்றிக் கொள்கிறார்.

கல்யாணத்தை ஒட்டி எடுக்கப்படும் வெட்டிங் போட்டோகிராபியை விமர்சித்த சீரியல் காட்சியில் நடித்ததற்கு வீடியோ கிராபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்த போதும், அந்தக் காட்சி நடிகர் மாரிமுத்துவுக்குக் கூடுதல் பிரபல்யத்தைத் தந்துள்ளதாம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு லயன்ஸ் கிளப் மாதிரியான அமைப்புகள் தங்களுடைய நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அவரை அழைக்கத் தொடங்கியுள்ளன.



ஏப்ரல் 12-ம் தேதி நடிகை வித்யாவின் பிறந்த நாள். அன்று ‘அபியும் நானும்' சீரியலின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டவருக்கு செட்டில் இருந்த சக ஆர்ட்டிஸ்டுகள் கேக் வெட்டிக் கொண்டாடி சர்ப்ரைஸ் வாழ்த்துச் சொன்னார்கள். பிறந்த நாள் அன்று சொந்த ஊரான கேரளாவில் இருந்தால் அந்த நாளை சமூகப் பணிகள் செய்ய ஒதுக்கிவிடுவாராம். தன் குடும்பத்தார் சார்பாக டிரஸ்ட் ஒன்றை நிறுவி அங்கு பலருக்கும் பல உதவிகளைச் செய்துவருகிறார் வித்யா.
`செம்பருத்தி’ கதிருக்கு கர்நாடக மாநிலம் கோலாரில் தொடங்கப்பட்ட ரசிகர் மன்றம் சில தினங்களுக்கு முன்புதான் ஓராண்டை நிறைவு செய்தது. தற்போது `நீ தானே எந்தன் பொன் வசந்தம்’ ஜெய் ஆகாஷ் இலங்கையில் தன்னுடைய ரசிகர் சந்திப்பை நடத்தியிருக்கிறார். ஏப்ரல் 12-ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் அவரின் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்களாம், ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடியான சூழல்ல இப்படியொரு நிகழ்ச்சி அவசியமான்னு தோணுச்சு. ஆனாலும் முன்னரே திட்டமிடப் பட்டிருந்ததால தவிர்க்க முடியலை’ என்கிறார் ஜெய்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
வெளிநாட்டில் விழா ஒன்றில் மேடையில் தொகுப்பாளருக்கு விழுந்த அடி, நம்மூரில் சர்வ சாதாரணமாக உருவக் கேலி செய்துகொண்டிருந்தவரை பீதியடைய வைத்திருக்கிறதாம். நண்பர்கள் சிலர்தான், ‘மச்சான், உனக்கு ஒரு நாள் விழலாம்’ எனக் கலாய்க்கத் தொடங்க, இப்போது நிஜமாகவே பயம் சூழ, வாயை கண்ட்ரோலில் வைக்க முயற்சி செய்துவருகிறாராம்.