
வெளிநாட்டில் கோயிலில் வைத்து நடந்த பிரியங்காவின் திருமணத்தில் அவரது வீட்டாரும் அவரின் கணவர் வீட்டாரும் கலந்துகொள்ளாததற்குக் காரணம், அவர்களது காதலுக்கு எழுந்த எதிர்ப்புதானாம்.


வெளிநாட்டில் கோயிலில் வைத்து நடந்த பிரியங்காவின் திருமணத்தில் அவரது வீட்டாரும் அவரின் கணவர் வீட்டாரும் கலந்துகொள்ளாததற்குக் காரணம், அவர்களது காதலுக்கு எழுந்த எதிர்ப்புதானாம். திருமணத்தை முடித்த சூட்டோடு தனது வீட்டில் திருமணத்தை ஏற்றுக்கொள்ள வைத்து விட்டாராம். ‘‘கணவர் ராகுல் வீட்டிலும் சீக்கிரமே ஏற்றுக் கொள்வார்கள்’’ என நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரியங்கா.

மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி ட்விட் போட்டுப் பரபரப்பைக் கிளப்பிய ‘பிக் பாஸ்' பாலாஜி முருகதாஸுக்கு அரசியல் ஆசை ஆரம்பத்திலேயே இருந்ததுதானாம். நடிகர் ஒருவர் நடத்திய கட்சியில் இணைந்து சில ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். ஆனால் வளர்ச்சிக்கும் வருமானத்துக்கும் அது உதவவில்லை என்பதாலேயே மாடலிங் பக்கம் வந்தார். இப்போதும் ஏதோவொரு அரசியல் கட்சியில் சேரலாமென்கிற முடிவில்தான் இப்படிப் பேசத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரசவத்துக்காக டி.வி, சினிமா வாய்ப்புகளைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு இருந்தார் மதுமிதா. தற்போது குழந்தை பிறந்து ஓராண்டாகும் நிலையில், மீண்டும் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறாராம். கூடுதலாக ஃபேஷன், மேக்கப் செமினார் என அந்த ஏரியாவிலும் ஒரு ரவுண்ட் அடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

என்ன காரணமோ தெரியவில்லை, ‘சரவணன் மீனாட்சி’ சீரியலுக்குப் பிறகு தமிழ் சீரியலுக்குக் கேட்டு யாராவது அணுகினால், ஒற்றை வார்த்தையில் மறுப்பு சொல்லி விடுகிறாராம் குயிலி. தற்போது மும்பையில் வசித்துவரும் அவர், ‘‘சீரியலில் நடிச்சது, அதுவும் தமிழ் சீரியல்களில் நடிச்சதெல்லாம் போதும்’’ எனப் பெரிய கும்பிடு போடுகிறாராம்.

அறந்தாங்கி நிஷாவை எல்லோருக்கும் தெரியும். அறந்தாங்கி நிவிஷாவைத் தெரியுமா? ‘தெய்வமகள்’ சீரியல்தான் இவரது அடையாளம். இப்போது ‘மலர்’ தொடரில் நடித்துவருகிறார். வாய்க்கு வாய் ‘தெய்வ மகள்’ நினைவுகளைப் பேசிவருகிற இவருக்குத் தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களே கிடைத்துவந்ததால் கொஞ்ச நாள் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்தாராம். நெகட்டிவ் கேரக்டர் இல்லையென்பதால் மலர் சீரியலில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
புதிய சீரியல் ஒன்றில் நடிக்கக் கேட்டு நடிகர், நடிகைகள் பலரிடம் பேசியிருக்கிறது ஒரு தயாரிப்பு நிறுவனம். விக்ரமன் பட டைட்டிலில் மேற்படி நிறுவனம் தயாரித்த முந்தைய சீரியலில் ஆர்ட்டிஸ்டுகள் பலரும் சந்தித்த ஊதியப் பிரச்னையைச் சுட்டிக்காட்டி, பின்வாங்கியிருக்கிறார்கள் ஆர்ட்டிஸ்டுகள். ‘‘இந்த முறை அந்த மாதிரி எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம்’’ என சேனல் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டு நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்துவருகிறார்களாம்.