சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV: ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV: ரிமோட் பட்டன்

நிகழ்ச்சியின் ஷூட்டிங்ல ராஜா சாரை முதன் முதலா பார்த்ததும், ‘என்ன இந்தப் பக்கம் திடீர்னு, அதுவும் என்னை என்ன பண்ணப் போற’ன்னுதான் கேட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜெயா டி.வி-யில் இளையராஜா, தான் கடந்து வந்த பாதையை விவரிக்கும் ‘கதைகேளு கதைகேளு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ரங்கராஜ் பாண்டே. ‘`அரசியல், சமூக விஷயங்களைப் பேசிட்டிருந்தவனுக்கு இந்த வாய்ப்பு வந்ததும், ‘இதுக்கு நான் சரிப்பட்டு வருவேனா’ங்கிற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனா நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தந்த ஊக்கத்துல ‘பார்த்துக்கலாம்’னு கமிட் ஆகிட்டேன். நிகழ்ச்சியின் ஷூட்டிங்ல ராஜா சாரை முதன் முதலா பார்த்ததும், ‘என்ன இந்தப் பக்கம் திடீர்னு, அதுவும் என்னை என்ன பண்ணப் போற’ன்னுதான் கேட்டார். ‘நீங்க பாடப் போறீங்க... நான் ஓரமா நின்னு கேக்கப்போறேன்’னு சொன்னேன். என் வீட்டுலயுமே ‘அவரு நிகழ்ச்சியில நீங்க என்னங்க செய்யப்போறீங்க’ன்னுதான் கேட்டாங்க. `அவரு பாடுவார், நான் கேட்கப்போறேன்’னு அங்கயும் அதே பதிலைத்தான் சொன்னேன். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் அனுபவம் ரொம்பவே சிலிர்ப்பா இருந்தது. ராஜா வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத கதைகளையெல்லாம் பேசப்போகிறது நிகழ்ச்சி’’ என்கிறார் பாண்டே.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் பக்கம் வந்து ஒரேயொரு சீரியலில்தான் ஹீரோவாக நடித்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் நந்தா. அதற்குள் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக அடுத்த சீரியலுக்குக் கேட்டார்களாம். முதலில் யோசித்தாலும், கடைசியில் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு கமிட் ஆகிவிட்டார். விஜய் டி.வி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது `கண்ணே கலைமானே' எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த சீரியல்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரை நடிகர்கள் கலந்துகொண்ட நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் விஜய் டி.வி-யிலிருந்து இரு அணிகள் மற்றும் சன் டி.வி அணி கலந்துகொண்டு ஆடினார்கள். அரையிறுதியில் சன் டி.வி அணி வெளியேற, விஜய் டி.வி-யின் மா.கா.பா. ஆனந்தைக் கேப்டனாகக் கொண்ட அணி கோப்பையை வென்றிருக்கிறது. தன்னுடைய அணிக்கு மா.கா.பா. சூட்டிய பெயர் என்ன தெரியுமா? சில்க் ஸ்மிதா அணி

விகடன் TV: ரிமோட் பட்டன்

கிருத்திகா உதயநிதியின் ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸ் மூலம் முதன் முதலாக நடிப்பைத் தொடங்கியிருக்கும் ஜேடன் ‘வானிலைச் செய்திகள்’ வாசித்துப் பிரபலமான நடிகை மோனிகாவின் மகன். தற்போது 5வது படிக்கும் ஜேடனுக்கு பேட்மிட்டன் ரொம்பவே இஷ்டமாம். டி.வி நிகழ்ச்சி ஒன்றில் அம்மாவுடன் ஜேடன் கலந்துகொண்டதைப் பார்த்த கிருத்திகா தன்னுடைய ‘பேப்பர் ராக்கெட்’டில் கமிட் செய்திருக்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

அந்தச் சேனல் அலுவலகம் இயங்கிவருகிற கட்டடம் வாடகைக் கட்டடம். கட்டடத்தின் உரிமையாளர் அலுவலகம் தனக்குத் தேவைப்படுவதாகச் சொல்லி காலி செய்யும்படி கேட்டார். சேனல் தரப்பில் அதற்குக் காது கொடுக்கவில்லை. தங்களது அரசியல் பின்புலத்தையும் அவ்வப்போது அந்த உரிமையாளரிடம் காட்டி, காலி செய்வதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததாம் சேனல் நிர்வாகம். ஒருகட்டத்தில் நீதிமன்றம் சென்று காலி செய்ய உத்தரவு வாங்கியிருக்கிறார் உரிமையாளர். அந்த உத்தரவையும் சேனல் மதிக்காததால், மீண்டும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் உரிமையாளர். இந்த முறை சற்று காட்டமாகவே தீர்ப்பளித்ததாம் நீதிமன்றம். இந்த மாதத்தின் (ஜூலை) கடைசி நாளுக்குள் காலி செய்யாவிட்டால் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைக்கச் சொல்லிவிட்டதாம். இந்த மாதத்துடன் ஒளிபரப்பு நிறுத்தம் அல்லது பெருமளவில் ஆட்குறைப்பு என வந்த தகவலின் பின்னணியாக இந்தக் காரணத்தையும் சொல்கிறார்கள்.