சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரோஷினி ஹரிப்ரியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஷினி ஹரிப்ரியன்

‘‘போட்டோஷூட்டை சுய விளம்பரமா பார்க்கத் தேவையில்லை. வாய்ப்புகளைத் தேடி அலைவதற்குப் பதில் நாமே உருவாக்க முடியும்கிறதுக்கு வழி இது

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாரதி கண்ணம்மா’வில் இருந்து வெளியேறியபோதே ‘‘இனி சினிமாதான்’’ எனத் தெளிவான முடிவை எடுத்துவிட்டதாகச் சொன்னவர் ரோஷினி ஹரிப்ரியன். சில தினங்களுக்கு முன் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக இவர் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் பரவின. ரோஷினியிடமே கேட்டால், ‘‘அதெல்லாம் வெறும் வதந்திங்க. சீரியலுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லைங்கிறதுதான் என் பதில். சினிமா, வெப் சீரிஸ்னு சில விஷயங்கள் பேச்சுவார்த்தை அளவுல போயிட்டிருக்கு. கூடிய சீக்கிரத்திலேயே அது தொடர்பா நல்ல தகவலை நானே சொல்றேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜீ தமிழ் சேனலில் ‘ராக் ஸ்டார்’ என்ற பட்டமெல்லாம் கொடுத்த ரமணியம்மாளை நினைவிருக்கிறதா? வீட்டு வேலை செய்துவந்தவர் ‘சரிகமப’ இசை நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் வேலை செய்துவந்த வீட்டுக்காரர்கள் இவரை வேலைக்கு வர வேண்டாமெனச் சொல்லி விட்டார்களாம். ‘‘டி.வி-யிலெல்லாம் வந்தவங்க நீங்க, இனி இந்த வேலையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லியே வேலை தர மறுத்துடுறாங்க’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் வருவோம் என நினைத்துப் பார்க்காத மகேஸ்வரியிடம், ‘பிக் பாஸ் சம்பளத்தை வச்சு என்ன பிளான் பண்ணியிருக்கீங்க’ எனக் கேட்டால், ‘‘என்னைக்குமே பெரிசா எதையும் பிளான் பண்ணுவது எனக்குப் பிடிக்காது. நடக்கறது தானா நடக்கும்னு நம்புகிறவள் நான். அதனால திட்டமெல்லாம் ஒண்ணுமில்லை. அதேநேரம், பையனைக் கூட்டிக்கிட்டு எங்காவது ஒரு வெளியூர் ட்ரிப் செல்லலாமென ஒரு ஐடியா மட்டும் இருக்கு’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

போட்டோஷூட் ஒன்றுதான் சீரியல், சினிமா வாய்ப்புகளைப் பெற சரியான வழி எனப் புரிந்து கொண்டு அதில் இறங்கியிருக்கும் சின்னத்திரைப் பிரபலங்களின் வரிசையில் செய்தி வாசிப்பாளர் லாவண்யா ஸ்ரீராமும் சேர்ந்திருக்கிறார். சமீபத்திய இவரது ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி போட்டோஷூட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். ‘‘போட்டோஷூட்டை சுய விளம்பரமா பார்க்கத் தேவையில்லை. வாய்ப்புகளைத் தேடி அலைவதற்குப் பதில் நாமே உருவாக்க முடியும்கிறதுக்கு வழி இது’’ என பஞ்ச் பேசுகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘இரண்டு பெயர்களைச் சேர்த்து வச்சிருக்காங்களே, கூப்பிடுறவங்களுக்கு நீளமாகத் தெரியாதா’ என வைஷ்ணவி அருள்மொழியிடம் கேட்டால், ‘‘ஹலோ, அதுக்குப் பின்னாடி ஒரு கதையே இருக்கு’’ என்கிறார். இவர் சிறு வயதாக இருக்கும் போது பெற்றோருடன் ஜம்மு காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருந்தார்களாம். அங்கு ஒரு இடத்தில் குழந்தையாக இருந்த இவர் கூட்டத்தில் தொலைந்து விட்டாராம். அந்தப் பகுதியில் புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயத்தை நினைத்து குழந்தை கிடைக்க வேண்டும் என வேண்டியிருக்கிறார்கள் இவரின் பெற்றோர். அதேபோல் அடுத்த சில மணி நேரத்தில் இவர் கிடைத்துவிட, அருள்மொழியுடன் வைஷ்ணவியும் சேர்ந்து கொண்டதாகச் சொல்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

பெரிய நிகழ்ச்சிக்குள் இருந்தபோது, இருவருடைய சேட்டைகளையும் தாங்க முடியாமல்தான் ஜோடியைப் பிரித்து முதலில் ஒருவரை வெளியில் அனுப்பினார்கள். தற்போது இரண்டாவதாக வெளியில் வந்தவர், முதலில் வெளியில் வந்த அந்தப் போட்டியாளரைத் தேடத் தொடங்க, உஷாரான சகோதரர் தங்கையை சிங்கப்பூருக்குப் பேக் பண்ணுவதில் மும்முரமாக இருக்கிறாராம்.