Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திரா

‘ராஜ பார்வை' தொடரில் நடித்த முன்னாவுக்கு அதன் பிறகு தமிழ் சீரியல் வாய்ப்பு என்பது கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாகவே அமைந்து கொண்டிருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

டி.வி, சினிமா என பிரபலமாகிவிட்டாலும் தன்னுடைய கிராம நிர்வாக அலுவலர் பதவியையும் விட்டுவிடாத ராமர், சொந்த ஊரில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அரசு ஊழியராக இருக்கும் காரணத்தினாலேயே ‘மீடியாவில் முகம் காட்டினால் என்ன சொல்வார்களோ’ என்கிற தயக்கத்திலேயே ஆரம்பக் காலத்தில் நிறைய வாய்ப்புகளைத் தவற விட்டாராம். ‘‘இவ்வளவு ஏன், கொஞ்சம் பிரபலமான பிறகுகூட வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டா, வெளிநாட்டுப் பயணம் செய்தா டிபார்ட்மென்ட்டுக்குச் சொல்லணும்யா’ன்னு சொல்லி வர மறுத்துடுவார்’’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் தயாரிப்பாளர் சங்கம் என்றால், நடிகர் ஜெயம் ரவியின் மாமியாரும் ‘ஹோம் மீடியா' சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான சுஜாதா விஜயகுமார் மற்றும் குஷ்பு என இவர்கள் இருவரின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததே இல்லை. ஒருவர் தலைவர் என்றால் இன்னொருவர் செயலாளர் என கடந்த பல வருடங்களாக இவர்கள்தான் இந்தப் பொறுப்புகளை அலங்கரித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வில் இவர்கள் இருவருமே இல்லை. தேர்தல் நடத்தப்படாமல் போட்டியின்றித் தேர்வாகியிருக்கின்றனர், புதிய நிர்வாகிகள். சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவது போல் சீரியல் ஏரியாவிலும் காட்சிகள் மாறத் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள் இந்த உள் விவகாரங்களை அறிந்தவர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நகைச்சுவை நடிகை ‘ஜாங்கிரி’ மதுமிதா தீவிர சிவ பக்தை ஆனதில், சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்திக்கு அதிக பங்கு இருக்கிறதாம். ‘‘அவருடன் சில படங்களில் நடித்தபோது, சிவபுராணம், திருவாசகம் குறித்தெல்லாம் அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்’’ என்கிறார் மது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘யாரடி நீ மோகினி’, ‘வள்ளி திருமணம்’ ஆகிய சீரியல்களில் நடித்த நட்சத்திராவின் வீட்டில் விசேஷம். சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது அம்மா ஆகப்போகிற சந்தோஷத்தில் இருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ராஜ பார்வை' தொடரில் நடித்த முன்னாவுக்கு அதன் பிறகு தமிழ் சீரியல் வாய்ப்பு என்பது கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாகவே அமைந்து கொண்டிருக்கிறது. ‘வைதேகி காத்திருந்தாள்' தொடரில் இருந்து பிரஜின் விலகியதும் அந்தத் தொடருக்கு கமிட் ஆனார். ஆனால் என்ன காரணமோ சில நாள்களிலேயே அந்தத் தொடர் முடிக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் நடிகர் அர்னவ் குடும்பப் பிரச்னை காரணமாகக் கைதாகி சிறைக்குச் சென்றபோது அவருக்குப் பதிலாக முன்னாவை கமிட் செய்து சில தினங்கள் ஷூட்டிங்கும்கூட நடந்தது. ஜாமீனில் வெளியில் வந்த அர்னவ் மறுபடியும் சீரியலுக்குள் என்ட்ரி ஆகிவிட, இந்த வாய்ப்பும் முன்னாவிடம் இருந்து போய்விட்டது.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

மணம் வீசும் சீரியலில் முள் குத்துகிற மாதிரி சம்பவங்கள் நடப்பதால் நடிக்கும் நடிகர்களின் கண்களின் ஓரம் ஈரம் கசிவதாகத் தகவல்கள் கசிகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது வெளியில் சொன்னால், சீரியலிலிருந்து ஓரங்கட்டப்படலாம் என்பதால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் புழுங்கித் தவித்து வருகிறார்களாம்.