
கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங் இல்லாதபடி பார்த்துக்கொள்வது சீரியல் தம்பதியினரின் வழக்கம்.

ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது கடைப்பிடித்த வழக்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்திருப்பதாகச் சொல்கிறார் ஆர்த்தி. புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள பிளாக்ஷீப் டி.வி-யில் காலையில் ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சிக்காக விடியற்காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி சேனலுக்கு வந்துவிடுகிறாராம். நேயர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது ராசி நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிற நிகழ்ச்சி அது. ஆர்த்தியுடன் அர்ச்சகர் ஒருவரும் இருக்கிறார். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அவரவர் மத குருக்கள் முன்னிலையில் பிரார்த்தனை நடக்குமாம். இந்துக் கடவுள்களுக்குத் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது.


கடந்த ஆண்டு ‘பூவே உனக்காக' தொடரில் இருந்து வெளியேறிய ராதிகா ப்ரீத்தி, இனி சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாகச் சொல்லியிருந்தார். தற்போது டப்பிங் பேசுவது போன்ற புகைப்படங்களைத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ‘சஸ்பென்ஸ்' என்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளிவருமாம்.

கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங் இல்லாதபடி பார்த்துக்கொள்வது சீரியல் தம்பதியினரின் வழக்கம். கணவருக்கு மாதத்தின் முதல் 15 நாள் ஷூட்டிங் என்றால் அந்த நாளில் மனைவி வீட்டில் இருப்பார். வீட்டை நிர்வகிப்பதற்கு வசதியாகப் பலரும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதில் ஆல்யா -சஞ்சீவ் ஜோடி கொஞ்சம் வித்தியாசம். அதாவது ஆல்யா ஷூட்டிங் செல்லும் நாள்களில் தனக்கு ஷூட்டிங் இல்லை யென்றாலும் சஞ்சீவ் வீட்டில் இருப்பதில்லையாம். சாப்பாடு, ஜூஸ் எடுத்துக்கொண்டு மனைவியின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருபவர், ஷூட்டிங் முடிகிற வரை அங்கேயே இருந்து மனைவியை அழைத்துக் கொண்டே வீட்டுக்குக் கிளம்புகிறார்.
முதலாமாண்டை வெற்றிகரமாகக் கடந்துள்ளது செய்தித் தொலைக்காட்சியான நியூஸ் தமிழ். தொடங்கிய சில மாதங்களிலேயே ரேட்டிங்கில் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைப் பிடித்ததைத் தங்களது சாதனையாகச் சொல்கிறார்கள். முதலாண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தை அலுவலக ஊழியர்கள் கடந்த வாரம் அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்.

உணவகம் திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த ஐடியா அவரது கனவாக இருந்த ஒன்றாம். இதே கனவைக் கொண்டுள்ள இன்னொரு சின்னத்திரை பிரபலம் நடிகை கம் தொகுப்பாளினி நட்சத்திரா. ஓய்வு நேரங்களில் சாக்லேட் உள்ளிட்ட சில ஹோம் மேட் தயாரிப்புகளை வீட்டில் இவரே தயாரிப்பாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...
நட்சத்திர சேனலில் கொஞ்ச காலம் உயர் பதவியில் இருந்தவர் அவர். சில ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வெளியேறியவர், ஒரு தொலைக்காட்சி சேனலையே விலைக்கு வாங்கிவிட்டாராம். வாங்கிய தொலைக்காட்சியை மேம்படுத்தத் திட்டமிட்டவர், பழைய தொடர்பில் சில நட்சத்திரங்களிடம் பேசி சேனலில் புதிய நிகழ்ச்சிகள் பண்ணுவது குறித்துப் பேசிவருகிறாராம்.