
செலிபிரிட்டிகளையும், சினிமாக்களையும் டி.வி-யில் சகட்டுமேனிக்குக் கலாய்த்து, எல்லோரையும் கலகலப்பூட்டுகிறவர் ராமர்.
‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சி மீண்டும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. சாண்டி, சினேகா இருவரும் நிகழ்ச்சியின் நடுவர்களாக உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்றாவது நடுவர் ஒருவர் கமிட் ஆனதும் நிகழ்ச்சி குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியாகும் என்கிறார்கள்.


மகனுக்கு ஒரு வயது தாண்டிவிட்டதால், வேறு சில வேலைகளில் கமிட் ஆகத் தொடங்கியிருக்கிறார், ஷமீரா. முதல் கட்டமாக தன்னுடைய யூடியூப் சேனலில் லைஃப்ஸ்டைல் தொடர்பான வீடியோக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். ‘‘தமிழ் சீரியலில் எப்போது எதிர்பார்க்கலாம்’' என்றால், ‘‘அது என் கையில் இல்லை, காலத்தின் கையில்தான் இருக்கிறது’' எனச் சொல்கிறார். விஜய் டி.வி-யில் சில சீரியல்களைத் தயாரித்தது மட்டுமல்லாமல், ரீல் ஜோடியாகவும் நடித்தவர்கள் ஷமீரா - அன்வர் ஜோடி. கோவிட் தொடங்கிய நாள்களில் சொந்த ஊரான ஹைதராபாத்துக்குப் போன இவர்கள், மீண்டும் தமிழ் சீரியலுக்குத் திரும்பக் கிடைத்த வாய்ப்புகளையும் குழந்தையின் நலன் கருதி மறுத்துவிட்டு தற்போது வரை அங்கேயே இருக்கிறார்கள்.

‘பகல் நிலவு’ சீரியல் ஒளிபரப்பானபோது அதில் நிகழ்ந்த ஒரு பிரச்னையைத் தொடர்ந்தே சௌந்தர்யாவுக்கு சீரியல் வாய்ப்புகள் அமையாமல் போனது என சில தினங்களுக்கு முன் ட்வீட் போட்டிருந்தார், அந்த சீரியலில் சௌந்தர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விக்னேஷ் கார்த்திக். ஆனால். ‘‘அப்படி இல்ல, சில சீரியல் வாய்ப்புகள் வந்தது நிஜம், ஆனா என்னுடைய கேரக்டர் எனக்குத் திருப்தி இல்லாததால நான் மறுத்துட்டேன்’’ என்கிறார் சௌந்தர்யா.

செலிபிரிட்டிகளையும், சினிமாக்களையும் டி.வி-யில் சகட்டுமேனிக்குக் கலாய்த்து, எல்லோரையும் கலகலப்பூட்டுகிறவர் ராமர். இவர் ஹீரோவாக நடித்த ‘போடா முண்டம்’ எனப் பெயரிடப்பட்ட படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியதாம், கொரோனா காரணமாகத் தள்ளிப்போய் இப்போது வரை ரிலீஸ் ஆகவில்லை என்பதில் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம்.

ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் `கலக்கல் காமெடி கேங்ஸ்டர்ஸ்' நிகழ்ச்சியிலிருந்து ‘காதல்' சுகுமார் திடீரென வெளியேறியுள்ளார். ‘என்ன காரணம்' என விசாரித்தால், ‘‘நான் கேட்டதற்கு ‘உங்களுக்குத் தர்ற பேமென்ட் எங்களைப் பொறுத்தவரை அதிகமாத் தெரியுது'ன்னு சொன்னாங்கண்ணே'’ என அப்பாவியாகச் சொல்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...
இருந்தது முகம் தெரிந்த இரண்டு தொகுப்பாளர்கள்தான். ஒருவர் ‘பெரிய வீட்டுக்குப் போறேன்' என முதலில் கிளம்பினார். ஏற்கெனவே சீரியலில் நடித்திருந்த இன்னொருவரோ மறுபடியும் சீரியலுக்கே சென்று விட்டார். இதனால் ‘நம்ம முகம்னு சொல்ல தொகுப்பாளர்கள் இல்லையே' என வருத்தப்படுகிற அந்த சேனல், தற்போது புதிய தொகுப்பாளர்களைத் தீவிரமாகத் தேடத் தொடங்கியிருக்கிறது.