
கணவர் சிங்கப்பூர்க் குடிமகனாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்குமாகப் பாதிநாள் விமானத்திலேயே பறந்துகொண்டிருந்தார் ஆங்கர் தியா


கணவர் சிங்கப்பூர்க் குடிமகனாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்குமாகப் பாதிநாள் விமானத்திலேயே பறந்துகொண்டிருந்தார் ஆங்கர் தியா. ‘‘அம்மா ஆகப்போகிற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருப்பதால், இனி குழந்தை பிறக்கிறவரைக்கும் பயணத்துக்குத் தடைதான்’’ என்கிறார். தியாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர். தியாவின் கணவர் கார்த்திக், சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் சீரியல் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இவரது தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஐயனார்' சீரியல் விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

சன் டி.வி-யின் தொடக்கக்கால ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அரட்டை அரங்கம்.' நடிகர் விசு தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சி வாயிலாக கிராமங்களுக்கு வசதிகள், நலிந்தவர்களுக்கு உதவிகள் என்பன போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. மீண்டும் தற்போது புதுப்பொலிவுடன் அரட்டை அரங்கத்தைத் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது தொகுத்து வழங்குவதற்கு ‘பட்டிமன்றம்' ராஜாவுடன் பேசி இறுதி செய்திருப்பதாகத் தெரிகிறது.


தன் மகன் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் வி.ஜே மகேஷ்வரி. ‘‘பையன் வளர்ந்துட்டான்; அடுத்த சில ஆண்டுகளுக்கு அவனுக்குப் படிப்பு ரொம்பவே முக்கியம்’' என்கிறவர், அதற்காகவே இவ்வாண்டு முதல் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கிறாராம்.

‘மெட்டி ஒலி' திருமுருகன் மீண்டும் சன் டி.வி-க்கு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சீரியல் தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த திருமுருகன் சினிமா இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. சத்யஜோதி நிறுவனத்துக்குப் படம் இயக்கப் போவதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சன் டி.வி-யிலேயே சீரியல் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார். சீரியலில் நடிக்கிற நட்சத்திரங்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
யார்கிட்டயும் சொல்லாதீங்க
சமீபத்தில் முடிந்த ஒரு சீரியலில் நடித்துவந்த அந்த இரண்டெழுத்து நடிகையும் சீரியலின் தயாரிப்பாளரும் நெருங்கிப் பழகி வந்தார்களாம். தயாரிப்பாளர் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என நம்பிய நடிகை, ஒருகட்டத்தில் அது குறித்துத் தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், திருமணப் பேச்சை எடுத்ததுமே தயாரிப்பாளர் நழுவ, நடிகை தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவுக்கு நிலைமை போய் விட்டதாம். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகை, நேராக முன்னணிச் சேனலில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அந்தத் தயாரிப்பாளரின் சகோதரரிடமே சென்று நியாயம் கேட்டிருக்கிறார். அங்கு நடந்த பஞ்சாயத்துக்குப் பிறகு நடிகை இப்போதைக்குக் கொஞ்சம் அமைதி காப்பதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பாளரின் வீட்டிலோ, அவருக்குக் கால்கட்டு போட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்களாம்.