
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடி ஒன்று நிஜ வாழ்வில் இணைந்தது போல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடந்தேவிட்டது. அமீருடனான காதலை முறைப்படி அறிவித்திருக்கிறார் பாவனி


இந்தக் காதலர் தினத்தன்று தன் காதலர் யோகேஷை முறைப்படி அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆயிஷா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஆயிஷா சென்றபோது, அவரை வழியனுப்பி வைத்தவர்தான் இந்த யோகேஷ். மேலும், ‘தன் சார்பாகத் தொடர்பு கொள்ள வேண்டியவர்’ எனவும் இவரைத்தான் சேனலுக்கு அடையாளம் காட்டியிருந்தார் ஆயிஷா.


மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடி ஒன்று நிஜ வாழ்வில் இணைந்தது போல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடந்தேவிட்டது. அமீருடனான காதலை முறைப்படி அறிவித்திருக்கிறார் பாவனி. ‘‘முன்னாடியே சொல்லியிருக்கணும், இதுவே தாமதம். அதேநேரம் இரண்டு பேருக்கும் சினிமா உள்ளிட்ட சில கமிட்மென்டுகள் இருக்கு. அதனாலதான் ஒரு வருஷம் போகட்டும்னு சொல்லியிருக்கோம். அடுத்த வருஷம் நிச்சயம் கல்யாணம் இருக்கும்’’ என்கிற பாவனி தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றின் தீவில் இருக்கிறாராம்.

சில மாதங்களுக்கு முன் முடிவடைந்துவிட்ட சீரியல் ‘இதயத்தைத் திருடாதே.’ இருந்தாலும் இந்தத் தொடர் தொடங்கியதன் மூன்றாவது ஆண்டை கேக் வெட்டி நினைவு கூர்ந்திருக்கிறார் நவீன். சின்னத்திரையில் இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்த தொடர் என்பதால் மறக்க முடியாத அனுபவமாம். இந்த சீரியலில் நவீனுடன் ஜோடியாக நடித்தார் ஹீமா பிந்து. இருவருக்கும் காதல் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு கண்மணிக்கும் நவீனுக்கும் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம்.

ரோபோ சங்கரின் வீட்டில் வளர்த்த கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தார்கள் அல்லவா? இந்த விவகாரம் தற்போது ‘ஹோம் டூர்’ என வீட்டைச் சுற்றிக் காட்டிய நடிகைகள் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாம். செல்லப் பிராணிகள், பறவைகள் வளர்த்து வரும் சில நடிகைகள் தங்களது ஹோம் டூர் வீடியோக்களை மீண்டும் ஒரு முறை பார்த்து, வில்லங்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என செக் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' சீரியல் மூலம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அறிமுகமானவர் அஸ்வினி. இந்தத் தொடருக்குப் பிறகு சொந்த ஊரான பெங்களூருக்குச் சென்றவர், அங்கிருந்தபடியே சினிமா, வெப்சீரிஸ் பக்கம் முயற்சி செய்துகொண்டிருந்தார். தற்போது ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விரைவில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலுக்கு இவரிடம் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
உச்ச நடிகர் பெயர் கொண்ட சீரியலில் நடித்துவருகிற நடிகை, கணவரைப் பிரிந்துவிட்டாராம். காரணம் என்ன என்பது தம்பதி இருவருக்குமே வெளிச்சம். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட புதிதில் இருவரும் ஜோடியாகச் சேர்ந்து தந்த பேட்டிகள் இப்போது நடிகைக்குத் தொல்லையாகத் தெரிகிறதாம். சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அந்த வீடியோக்களை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறாராம்.