Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

சீரியல் ஹீரோயின்களான ‘பாரதி கண்ணம்மா’ வினுஷா மற்றும் ‘சுந்தரி’ கேப்ரில்லா இருவரும் ஒரே படத்தில் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள்

பிரஜின்
பிரஜின்

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வரப் பெரிதும் போராடியவர் பிரஜின். ஆயினும் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் அமையாததால் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு வந்தார். ஆனால் சினிமா விட்டபாடில்லை. மறுபடியும் புதிய இயக்குநர், புதிய தயாரிப்பு நிறுவனம் என இவரை அணுகி ‘டி 3' படத்தை எடுத்தார்கள். படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. எனினும் படத்துக்குப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யவில்லை என்கிற வருத்தம் பிரஜினுக்கு இருக்கிறது. ‘‘ஒரு ஹீரோவா என்னுடைய பங்கை நூறு சதவிகிதம் திருப்தியா முடிச்சுக் கொடுத்தேன். ஆனா என்ன பிரச்னையோ, தேவையான அளவுக்குப் புரமோஷன் பண்ணாம விட்டுட்டாங்க. எது வேணுமோ அதைச் செய்யாம, படத்தின் நிகழ்ச்சியில் அவசியமில்லாத ஒருத்தரைக் கூட்டி வந்து, அவர் அரசியலெல்லாம் பேசி, சர்ச்சை உருவானதுதான் மிச்சம்'’ என நொந்துபோய்ப் பேசுகிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, சீமான் குறித்துச் சில கருத்துகளைச் சொல்ல, நிகழ்ச்சி மேடையிலேயே அதற்கு எதிர்ப்பு எழுந்து சர்ச்சையானதையே பிரஜின் இப்படிக் குறிப்பிடுகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் ஹீரோயின்களான ‘பாரதி கண்ணம்மா’ வினுஷா மற்றும் ‘சுந்தரி’ கேப்ரில்லா இருவரும் ஒரே படத்தில் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். சென்னைக் காசிமேட்டுப் பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட ‘N4’ என்ற அந்தப் படம் கடந்த வாரமே ரிலீசாகியிருக்க வேண்டியதாம். என்ன காரணமோ தெரியவில்லை, தள்ளிப் போயிருக்கிறது. இரண்டு பேருமே இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘எதிர் நீச்சல்’ சீரியல் மூலம் சின்னத்திரை முழுக்கப் பிரபலமாகிவிட்ட மாரிமுத்து, சீரியலில் நடிக்கக் கேட்டு அணுகியபோது ஒரேயொரு நிபந்தனை மட்டும் விதித்தாராம். ‘‘வசனத்தை அப்படியே இருக்கிற மாதிரி பேசணும்னு என்னை நீங்க கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்பதே அந்த நிபந்தனையாம். அதற்கு சீரியல் யூனிட் தரப்பும் ஒப்புக்கொண்டதாம்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ஷூட்டிங் இல்லாத சமயங்களில் சென்னை, தி.நகரில் தன்னுடைய சகோதரி நடத்தும் ஃபேஷன் ஜுவல்லரிக் கடைக்கு வந்து பிசினஸில் உதவுவதைப் பொழுதுபோக்காகச் செய்துவருகிறாராம் ரம்யா பாண்டியன்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜீ தமிழ் சேனலுக்கு நல்ல ரேட்டிங்கைத் தந்த சீரியல் ‘செம்பருத்தி.' தொடரின் ஹீரோவான கார்த்திக்கின் ரசிகர் கூட்டமே தொடர் ஹிட் ஆனதற்கு முக்கியமான ஒரு காரணம் என்றும் சொல்லலாம். எனவேதான் சேனலைவிட்டு வெளியில் போன அவரை மீண்டும் உள்ளே இழுத்து வந்தார்கள். தற்போது சேனல் எதிர்பார்த்தது நடக்கத் தொடங்கி யிருக்கிறதாம். ‘கார்த்திகை தீபங்கள்' தொடருக்கு தொடர்ந்து நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இன்றைய தேதிக்கு சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முதலிடத்தில் இருப்பதும் இந்த சீரியல்தான்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சமையல் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட அந்த யூடியூப் பிரபலத்தைப் பேட்டி காண அழைத்துள்ளது இன்னொரு யூடியூப் சேனல். அவரும் சேனல் அலுவலகத்துக்குச் செல்ல, நேர்காணலும் நடந்து முடிந்ததாம். ‘‘ஓகே ப்ரோ, நீங்க கிளம்பலாம்'’ என சேனல் ஆட்கள் சொல்ல, ‘‘சரிங்க, பேமென்ட்'’ எனக் கேட்டாராம். சேனல் ஆட்களோ, ‘‘அப்படியெல்லாம் எதுவும் கொடுக்கற வழக்கம் இல்லையே'’ எனச் சொல்ல, யூடியூபரோ ‘ஆத்தா வையும் காசு கொடு, சந்தைக்குப் போகணும்' என்கிற ரீதியில் அடம் பிடித்து அந்த அலுவலகத்திலேயே உட்கார்ந்து விட்டாராம். ஒருவழியாகச் சமாதானம் செய்து பணம் எதுவும் கொடுக்காமல் அனுப்பி விட்டார்களாம். பார்க்கிறவர்களிடமெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கிறார் யூடியூபர்.