கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

மதன்-ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
News
மதன்-ரேஷ்மா

உற்சாகத்தில் இருக்கிறார் `செம்பருத்தி' கதிர். இவரின் ரசிகர்கள் சிலர் சேர்ந்து கடந்த ஆண்டு இவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

டி.வி நடிகைகளில் ஷமிதா, ரச்சிதா இருவரும் அனாயாசமாக புல்லட் ஓட்டத் தெரிந்தவர்கள். இந்த புல்லட் காதலிகளின் வரிசையில் லேட்டஸ்ட்டாக காயத்ரி யுவராஜும் சேர்ந்திருக்கிறார். ‘‘ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல சென்னையை ஒரு ரவுண்டு புல்லட்ல வலம் வரணும்னு ஆசை அவருக்கு’’ என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.

சினிமா விமர்சகரான யூடியூபர் ‘புளூ சட்டை' மாறன் மீது சீரியல் நடிகர், நடிகைகள் கடும் கோபத்தில் உள்ளனர். ‘வலிமை' படத்தை மாறன் விமர்சித்த விதத்தைக் கண்டித்த நடிகர் ஆரியை பதிலுக்குக் கலாய்த்தபோது, ‘டி.வி நடிகர்' என மாறன் குறிப்பிட்டதுதான் காரணம். ‘‘சினிமாக்காரங் களுக்குத்தான் நாங்க இளக்காரமா இருந்தோம். இப்ப சினிமாவை விமர்சிச்சே புகழடைஞ்சவங்ககூட எங்களை ஏளனமாப் பார்க்கத் தொடங்கி யிருக்காங்க’' எனக் குமுறுகிற இவர்கள், இதற்குக் கண்டன அறிக்கை விடச் சொல்லி, சின்னத்திரை நடிகர் சங்கத்தை வலியுறுத்தி வருகிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சமீபத்தில் திருமணம் நடந்த மதன்-ரேஷ்மா ஜோடிக்கு தாலி பிரித்துக் கோக்கும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடந்த‌து. இந்த நிகழ்ச்சியில் நடிகை `செம்பருத்தி' ஷபானாவும் கலந்துகொண்டார், நிகழ்ச்சியில் மூவரும் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பார்த்தவர்கள் ‘மதன் புது வீடு வாங்கிட்டார்' என்று கிளப்பிவிட, மதனோ ‘‘ரசிகர்களின் ஆசை சீக்கிரமே நடக்கணும்னுதான் நாங்களும் ஆசைப்படுறோம்’' என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

உற்சாகத்தில் இருக்கிறார் `செம்பருத்தி' கதிர். இவரின் ரசிகர்கள் சிலர் சேர்ந்து கடந்த ஆண்டு இவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார்கள். அந்த மன்றம் ஓராண்டை நிறைவு செய்ததை குழந்தைகளுக்கு இனிப்பு, ஆதரவற்றோருக்கு உதவி, அன்னதானம் எனத் தடபுடலாகக் கொண்டாடி கதிரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர் அந்த ரசிகர்கள். ‘‘ரசிகர் மன்றம்னா நம்மூர்லன்னு நினைச்சிடாதீங்க ப்ரோ. இது கர்நாடகாவின் கோலார் பகுதியில் இயங்கிட்டிருக்கிற மன்றம். உள்ளூர் சேனல்ல ஆங்கரா கரியரைத் தொடக்கிய என்னை ‘செம்பருத்தி' சீரியல் அடுத்த மாநிலம் வரை கொண்டு போய்ச் சேர்த்திருக்கு. ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு’' என நெகிழ்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இந்தக் கோடையில் இயக்குநர் மெட்டி ஒலி திருமுருகனின் சென்னை அலுவலகத்துக்குள் சென்றால் ஊட்டி, கொடைக்கானலில் தொலைந்தது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். மாடியில் தோட்டம் அமைத்து பசுமையாக வைத்திருப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இவரோ அலுவலகத்தையே பசுமையாக வைத்திருக்கிறார். அலுவலகத்தின் முகப்பு தொடங்கி உள்ளே ஒவ்வொரு அறையிலும் கொடிகளைப் பார்க்கலாம். இந்தப் பசுமை அலுவலக ஐடியா அவர் மனைவியின் சிந்தனையில் உதித்ததாம்.

****

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

தமிழ்நாட்டிலிருந்து இரண்டு டி.வி பிரபலங்கள் ராஜ்ய சபாவுக்குள் நுழையலாம் என்கிறார்கள். ஒருவர் ஆளுங்கட்சி சேனலில் முக்கியப் பதவியில் இருக்கிறார். அடுத்த முறை மாநிலங்கள் அவைக்குச் செல்கிற கட்சியின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறலாம் என்கின்றன தகவல்கள். இன்னொருவர் மத்தியில் ஆளும்கட்சிக்கு வேண்டியவர். தமிழ்நாட்டில் தங்களுக்காகப் பேசிவருகிறவர் என்கிற கோணத்தில் இவரது பெயரை கட்சி மேல்மட்டம் பரிசீலிக்கிறதாம்.