
சன் டி.வி சீரியலில் அறிமுகமாகி பிறகு சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி, சண்டை சச்சரவெல்லாம் தீர்ந்து மறுபடியும் ரீ என்ட்ரியானவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா.



ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கிற தொடர் ‘அண்ணா.' மிர்ச்சி செந்தில் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ‘நந்தினி' தொடரில் நடித்த நித்யா ராமும் நடிக்கவிருக்கிறார்கள். இந்தத் தொடருக்கான புரொமோ சமீபத்தில் வெளியானது. சீரியலின் கதைப்படி ஹீரோ முருக பக்தன். எனவே கதையில் திருச்செந்தூருக்கு முக்கிய இடமிருக்கிறதாம். புரொமோவில் இருந்த முருகனுக்குக் காவடி எடுத்து அலகு குத்துவது போன்ற காட்சிகளுக்குத் தயாராவதற்கு முன் நிஜமாகவே சில தினங்கள் கட்டுப்பாடுகள் கடைப்பிடித்து விரதமிருந்து நடித்துக்கொடுத்தாராம் செந்தில். கதைதான் என்றாலும் சீரியலிலும் பக்தி தொடர்பான விஷயங்களை சீரியஸாகவே அணுகி தேவை என்றால் விரதம் உள்ளிட்ட விஷயங்களைக் கடைப்பிடிக்க இருக்கிறாராம்.

சன் டி.வி சீரியலில் அறிமுகமாகி பிறகு சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி, சண்டை சச்சரவெல்லாம் தீர்ந்து மறுபடியும் ரீ என்ட்ரியானவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. இப்போது இவர் நடித்துவரும் ‘அருவி' சீரியல் 500 எபிசோடுகளை நெருங்கியுள்ளதால் உற்சாகமாக இருக்கிறார். இந்தத் தொடர் தனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

சீரியல் படப்பிடிப்புக்காக ஷூட்டிங் ஹவுஸ் வாடகைக்கு விடும் பிசினஸில் இறங்கியிருக்கிறார் ‘அழகு' சஹானா. சீரியல் ஷூட்டிங்கிற்குப் பெயர்போன சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்திருக்கிறது இவரது ஷூட்டிங் ஹவுஸ். ‘எப்படி இந்த ஐடியா' என்றால், ‘‘சீக்கிரத்துல அம்மாவாகப்போகிற எனக்கு இது ஆறாவது மாசம். அதனால சீரியல், சினிமான்னு எதிலும் கமிட் ஆகலை. வீட்டுல சும்மாவே இருக்கவும் பிடிக்கலை. அதனால நடிப்பு தொடர்பான ஏதாவதொரு வேலையைச் செய்யலாமேன்னுதான்'’ என்கிறார்.

‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடரிலிருந்து வெளியேறிய பிறகும் தொடரின் தயாரிப்புத்தரப்பு மற்றும் சேனல் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகச் சொல்கிறார் அர்ச்சனா. ‘‘அவங்க தந்த ஒத்துழைப்பை ஒருநாளும் என்னால் மறக்க முடியாது'’ என்கிறார்.

சமீபத்தில் வெளியான தன்னுடைய ‘லை' (LIE) குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் ‘இனியா' தீபக். இந்தக் குறும்படம் தனக்கு மட்டுமல்லாமல், தன்னோடு பணிபுரிந்த பலருக்கும் சினிமா வாய்ப்புகளுக்கு வழிகாட்டுமென நம்பிக்கை தெரிவிக்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
‘புதிய சீரியலை இயக்கவிருக்கிறார்’ என ‘ஷூட்டிங்கில் ஆபாசமாகத் திட்டுகிற’ இயக்குநர் குறித்துச் செய்தி வெளியானதுமே, நடிகர் நடிகைகள் பலர் கலக்கத்தில் இருந்தனர். தற்போது அந்தத் தொடரிலிருந்து இயக்குநரை மாற்றிவிட்டார்களாம். காரணம் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ‘அப்பாடா’ எனப் பெருமூச்சு விடுகிறார்கள் நடிகர் நடிகைகள் பலர்.