
ஒருபுறம் ‘சந்திரமுகி 2’, ‘லால் சலாம்’ என முக்கியப் படங்களில் நடித்துவந்தாலும் சின்னத்திரையிலும் நல்ல கேரக்டர்கள் என்றால், உடனே நடிக்கச் சம்மதித்துவிடுகிறார் விக்னேஷ்.


விவாகரத்து கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக போட்டோஷூட் செய்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினியை நோக்கிப் ‘பரபரப்புக்காகச் செய்தீர்களா’ என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ‘புதுக்கவிதை’ உள்ளிட்ட சில சீரியல்கள், ‘ஜோடி’ முதலான சில ரியாலிட்டி ஷோக்கள் என சின்னத்திரையில் பரபரப்பாக இருந்த சமயத்தில்தான் ரியாஸ் என்பவரைத் திருமணம் செய்தார் ஷாலினி. ரியாஸ் ஷாலினி இருவருக்குமே அது முதல் திருமணம் இல்லை. அன்பால் இணைந்தபோதும் அடுத்த சில மாதங்களிலேயே இந்தத் திருமண உறவில் பிரச்னை வந்தது. சுமார் ஐந்தாண்டுகள் கணவருக்காக நடிப்பை விட்டு விலகியிருந்தார் ஷாலினி. மகள் பிறந்த பிறகாவது கணவர் திருந்துவார் என நினைத்துப் பொறுமை காத்தாராம். அதன் பிறகும் அடி, சித்திரவதை என ரியாஸ் தொடர்ந்ததால்தான் வேறு வழியில்லாமல் விவாகரத்தைத் தேர்ந்தெடுத்தாராம். போட்டோஷூட் திட்டமிட்ட ஒன்றுதானாம். ‘தன் தரப்பிலிருந்து எந்தப் பிரச்னையுமில்லை என நினைக்கிறவர்கள் விவாகரத்தைக் கொண்டாடுவதில் எந்தத் தவறுமில்லை’ என்கிறார் ஷாலினி.

பிக் பாஸ் சீசன் 6-ல் டைட்டில் வென்ற பிறகு தொடர்ச்சியாக வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்துவருகிறார் அஸீம். இடையில் திரைப்பட வாய்ப்புகளும் வந்து, அவற்றில் ஓரிரு படங்கள் உறுதியாகி இருக்கின்றனவாம். சில தினங்களில் முறைப்படியான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

ஒருபுறம் ‘சந்திரமுகி 2’, ‘லால் சலாம்’ என முக்கியப் படங்களில் நடித்துவந்தாலும் சின்னத்திரையிலும் நல்ல கேரக்டர்கள் என்றால், உடனே நடிக்கச் சம்மதித்துவிடுகிறார் விக்னேஷ். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் ‘சபாஷ் மீனா’ என்கிற தொடரில் தற்போது கமிட் ஆகியிருக்கிறார். கடந்த வாரம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஜூன் மாத இறுதியிலோ ஜூலை முதல் வாரத்திலிருந்தோ ஒளிபரப்பாகத் தொடங்கலாம் என்கிறார்கள்.

சங்கவியை நினைவிருக்கிறதா? திருமுருகன் சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர், கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ தொடரில் நடித்தார். கோவிட் காலத்தில் இலங்கையில் வசிக்கும் தன் உறவுக்காரரையே திருமணம் செய்துகொண்டவர், நடிப்புக்கு விடைகொடுத்து, கொழும்பிலேயே செட்டில் ஆனார். தற்போது விடுமுறையைக் கழிக்க கைக்குழந்தையுடன் சென்னையிலுள்ள அம்மா வீட்டுக்கு வந்துள்ளார். குழந்தையைப் பார்த்துக்கொண்டே நடிக்கும்படியான வாய்ப்பு கிடைத்தால் ரீஎன்ட்ரி சாத்தியம் என்கிறார்.
வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்ததுடன் நில்லாமல், முன்னாள் மனைவி குறித்துப் பொதுவெளியில் குற்றம் சாட்டிவரும் நடிகர்மீது அந்த முன்னாள் மனைவி கடும் கோபத்தில் இருக்கிறாராம். ‘‘பேச்சு இப்படியே நீண்டா சட்ட நடவடிக்கை மட்டுமல்ல, இந்தப் பிரச்னையை வேற மாதிரி அணுக வேண்டி வரும்னு யாராவது அவருக்குச் சொல்லுங்க’’ என்கிற குரல் அவர் தரப்பிலிருந்து கேட்கிறது.