சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திரா

கோடை என்றால் எங்காவது மலைப்பிரதேசங்களுக்கு ஒரு ட்ரிப் போட்டு குடும்பத்துடன் சென்றுவருவது நடிகை நீலிமா ராணியின் வழக்கமாம். ஆனால்...

தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நட்சத்திரா. ஒருகட்டத்தில் சீரியல் நடிகையாகும் வாய்ப்பு கிடைக்க, ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்தார். தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் நாயகியாக நடித்துவரும் சூழலில், சமீபமாக மீண்டும் பழைய தொகுப்பாளர் வேலையிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். ‘‘கடந்த ஆண்டின் இறுதியில் தென்னிந்திய சினிமா விருது விழா, சில தினங்களுக்கு முன் விஜய் டி.வி விருது வழங்கும் விழா... திரும்பவும் மைக் பிடிச்சிட்டீங்களே’’ என்றால் ‘‘மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச வேலைங்க’’ என்கிறார்.

நட்சத்திரா
நட்சத்திரா

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்குக் கடந்த ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘பழைய நிர்வாகத்தில் நிதிமுறைகேடு ஏதும் நடந்திருப்பின், அதுகுறித்து விசாரிக்கக் கமிட்டி அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. தற்போது டாக்டர் ஷர்மிளா, சங்கீதா பாலன் உள்ளிட்ட சிலரை உறுப்பினர்களாகக் கொண்டு அந்தக் கமிட்டியை நியமித்திருக்கிறார்களாம். இதுவரை சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நடந்த நிதி தொடர்பான எல்லாக் குளறுபடிகள் குறித்தும் இந்தக் கமிட்டி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாம். அந்த அறிக்கையை வைத்து சம்பந்தப்பட்டவர்கள்மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என சங்கம் முடிவுசெய்யும் என்கிறார்கள்.

விஜேஷ்
விஜேஷ்

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு சினிமா வாய்ப்புகளில்லாமல் ஒதுங்கியிருந்தபோது, அவருக்குத் தொடர்ந்து சீரியல் வாய்ப்புகளைத் தந்தது விஜய் டி.விதான். தற்போது ஆனந்த் பாபுவின் மகன் விஜேஷையும் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிமூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

நீலிமா ராணி
நீலிமா ராணி

கோடை என்றால் எங்காவது மலைப்பிரதேசங்களுக்கு ஒரு ட்ரிப் போட்டு குடும்பத்துடன் சென்றுவருவது நடிகை நீலிமா ராணியின் வழக்கமாம். ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல் இருப்பதால் அதன் பக்கம் திரும்பிவிட்டார். கிரிக்கெட் ரசிகையான இவர் சென்னையில் நடக்கும் போட்டிகளைக் காண நேரில் வந்துவிடுகிறார்.

சரவணன்
சரவணன்

சென்னை குன்றத்தூர் பகுதியிலுள்ள தனது வீட்டின் கார் பார்க்கிங் பகுதியை ஒருவர் ஆக்கிரமித்து அதில் கடை திறந்துவிட்டார் எனக் காவல்துறையில் புகார் தந்திருக்கிறார் ‘பிக்பாஸ்’ சரவணன். சரவணனுக்கு அந்த ஃபிளாட்டை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிக்கொடுத்தவரும் இப்போது ஆக்கிரமித்திருப்பவரும் ஒரே நபர்தானாம்.

ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டபோது சர்ச்சைகளில் பெயர் அடிபட்ட ‘ஸ்வீட்’ நடிகை அவர். தற்போது நடிப்பு வாய்ப்பு அவ்வளவாக இல்லாததால், சைடு பிசினஸில் இறங்கலாமென முடிவு செய்தார். தோழியான இன்னொரு நடிகை ஃபேஷன், மேக்கப் நிகழ்ச்சிகள் நடத்திவருவது தெரிய, அந்த நிகழ்ச்சியில் ‘ஸ்வீட்’டும் கலந்துகொள்ள நினைத்தார். ‘ஸ்வீட் நடிகை வகுப்பெடுப்பார்’ என அறிவிப்பெல்லாம் வெளியிடப்பட்டு நிகழ்ச்சிக்குத் தயாரானார்கள். நிகழ்ச்சி நடக்கும் நாள்தான் நெருங்கியதே தவிர, கலந்துகொள்ள ஒருவர்கூட வரவில்லை. வேறுவழியின்றி நிகழ்ச்சியை ரத்து செய்தார்களாம்.