சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

வைஷு சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
வைஷு சுந்தர்

விளம்பரப்படங்கள், மாடலிங் என ஒவ்வொரு அடியாகப் பயணித்து வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷு சுந்தருக்கு ‘ராஜா ராணி 2' தொடரின் பார்வதி கதாபாத்திரம் ஓரளவு அறிமுகத்தைத் தந்தது.

சபானா
சபானா

ஒரு சீரியலுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையென்றால் ஹிட் சீரியல் ஒன்றுடன் அதை இணைத்து ‘சங்கமம்' என ஒளிபரப்புவது சேனல்களில் நடக்கிற விஷயம்தான். இப்போது பெரிய எதிர்பார்ப்புடன் சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் மனைவி' சீரியலை ‘வானத்தைப் போல' தொடருடன் சேர்த்து ஒளிபரப்பிவருகிறார்கள். ‘மிஸ்டர் மனைவி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதே காரணம்’ என்கிற பேச்சு டி.வி வட்டாரத்தில் கேட்கிறது. ‘செம்பருத்தி' மூலம் புகழ்பெற்ற சபானாவுமே இந்த சீரியலைப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் தற்போதைய சூழல் அவரையும் அப்செட் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள்.

வைஷு சுந்தர்
வைஷு சுந்தர்

விளம்பரப்படங்கள், மாடலிங் என ஒவ்வொரு அடியாகப் பயணித்து வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷு சுந்தருக்கு ‘ராஜா ராணி 2' தொடரின் பார்வதி கதாபாத்திரம் ஓரளவு அறிமுகத்தைத் தந்தது. இப்போது ‘பொன்னி' தொடர் மூலம் நீண்ட நாள் ஆசையான கதாநாயகி கேரக்டரும் கிடைத்துவிட்டது. வாழ்த்துச் சொன்னால், ‘‘வெப் சீரிஸ், சினிமான்னு இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருக்கே'’ என்கிறார்.

கார்த்திக் ராஜ்
கார்த்திக் ராஜ்

தன் ரசிகர்களிடம் பணம் திரட்டிப் படம் எடுத்த ‘செம்பருத்தி' கார்த்திக் ராஜ், அந்தப் படத்தை நேரடியாகத் தொலைக்காட்சிக்கு விற்று, படமும் ஒளிபரப்பாகிவிட்டது. ஆனால் இப்போது வரை அந்த ரசிகர்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லவில்லையாம். சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிகர் பக்கம் உருவாக்கிப் புகழ் சேர்த்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.

ஷெரின்
ஷெரின்

ராடானின் ‘பொன்னி c/o ராணி’ தொடரில் நடித்துவரும் ஷெரின், ஏற்கெனவே ‘திருமணம்', ‘லட்சுமி ஸ்டோர்ஸ்', ‘பாரதி கண்ணம்மா' எனப் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இதுவரை கதாநாயகியாக எந்தவொரு சீரியலிலும் நடிக்கவில்லை என்கிற வருத்தம் ரொம்பவே இருக்கிறது. ‘‘நான் சென்னைப் பொண்ணு. ஆனா இங்கிருந்து கேரளா, பெங்களூருன்னு போய் ஹீரோயின்களைக் கூட்டிட்டு வர்றாங்க. அதுக்கான காரணம்தான் எனக்கு இப்ப வரை புரிய மாட்டேங்குது. நீங்க நம்பறீங்களோ இல்லையோ, சமயங்கள்ல ‘பேசாம ரெண்டு வருஷம் பெங்களூருக்கோ, கேரளாவுக்கோ போய் இருப்போமா, அப்பவாவது கூப்பிடுறாங்களான்னு பார்க்கலாம்'னுகூட நினைச்சிருக்கேன்'’ என ஆதங்கப்படுகிறார்.

சம்யுக்தா 
 - விஷ்ணுகாந்த்
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்

விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஜோடி திருமணமான ஒரே மாதத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுப் பிரிந்த பின்னணியில் விஷ்ணுகாந்த் மீதே அதிகமான குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றனவாம். விஷ்ணுகாந்தை நன்கு தெரிந்த அவர் நண்பர்கள் சிலரே, ‘‘திருமணத்துக்கு முன்னாடியே ரெண்டு பேருக்கும் பிரச்னை தொடங்கி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போச்சு. விட்டுக்கொடுத்துப் போக சம்யுக்தா தயாராக இருப்பவர்தான். இவன் கொஞ்சம் அடம்பிடிக்காம இருந்திருக்கலாம்'’ என்கின்றனர்.

விருது கிடைக்குமென அதிகமான எதிர்பார்ப்பில் இருந்திருக்கிறது அந்த ஜோடி. ஆனால் அந்த ஜோடிக்கு இல்லாமல் அதே தொடரில் இருக்கும் இன்னொரு ஜோடிக்குப் போய்விட்டது விருது. ‘‘இதுக்கெல்லாம் கண்ணை ‘ஈரமா'க்கிட்டிருக்கலாமா'’ என நடிகர் கேஷுவலாகக் கடந்து போய்விட்டாராம். நடிகையோ பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தவிக்கிறார். கூடவே, ‘‘இந்த மாத இறுதியில் ஒரு சம்பவம் இருக்கு'’ எனவும் சொல்லிவருகிறாராம். கிளி மரம் மாறினாலும் மாறலாம் என்கிறார்கள், அவரைத் தெரிந்தவர்கள்.