
ரிமோட் பட்டன்

ஜீ தமிழ் சேனலில் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் சீரியலுக்கு ‘கார்த்திகை தீபம்’ எனத் தலைப்பு வைத்திருப்பதாகத் தெரிகிறது. சீரியலின் ஷூட்டிங் கும்பகோணம் சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. புரொமோவை அடுத்த சில தினங்களில் எதிர்பார்க்கலாம். ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த புதுமுக நடிகை கமிட் ஆகியிருக்கிறார் என்கிறார்கள். சீனியர் நடிகைகள் விசித்ரா, அஞ்சு அரவிந்த் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அந்த வீட்டுக்குள் இருக்கிற அத்தனை நாள்களும் அவர்களது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள மாட்டார்களா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும். உண்மை என்னவெனில் வாரம் ஒருமுறை போட்டியாளர்களின் வீட்டார் அல்லது நெருக்கமான நண்பர் ஒருவர் மட்டும் பிக் பாஸ் செட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அங்கு அவருக்குப் போட்டியாளரைப் பார்க்க, பேச அனுமதி கிடையாது. செட் முகப்பில் நிகழ்ச்சி தொடர்பானவர்களைச் சந்தித்து, போட்டியாளர் பயன்படுத்திய பழைய உடைகளை வாங்கிக்கொண்டு புதிய உடைகளைக் கொடுப்பது மற்றும் போட்டியாளர்கள் மருந்து மாத்திரை உட்கொள்பவர்களாக இருந்தால் அவற்றைக் கொடுப்பது ஆகியவற்றிற்காகவே இந்தச் சந்திப்பாம்.

தமிழில் ‘தெய்வம் தந்த வீடு’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த மேக்னாவை ஞாபகமிருக்கிறதா? தற்போது ‘ஜீ மலையாளம்’ சேனலில் பிரைம் டைம் சீரியலில் நடித்துவருகிறார். ஷூட்டிங் தேதிகளில் பிரச்னை வந்துகொண்டிருந்ததால் தமிழில் சீரியல் பண்ண முடியவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தவர், தற்போது அந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டாராம். எனவே தன் தமிழ் நட்பு வட்டாரத்தைத் தொடர்புகொண்டு ‘‘மீண்டும் தமிழ் சீரியல் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்’’ எனக் கேட்டுவருகிறாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து தொடர்ந்து பார்த்து வந்தவர் ரச்சிதா. கடந்த ஐந்து சீசன்களிலும் சேர்த்து அவரைக் கவர்ந்த ஒரே போட்டியாளர் என்றால் அது மும்தாஜ்தானாம். மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியில் வந்த அடுத்த சில தினங்களில் அவரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைத்துள்ளார் ரச்சிதா. இந்த சீசனுக்குத் தேர்வாகி நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன் மும்தாஜிடம் நிறைய டிப்ஸ் வாங்கி விட்டுத்தான் சென்றுள்ளாராம்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க!
வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் கைப்பிடித்தார் அந்த நடிகை. திருமணம் முடிந்தவுடன் கணவர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாகச் சொன்னார்கள். சமீபமாக கணவர் குறித்த எந்தவொரு தகவலையும் யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. அதேநேரம், சீரியலில் உடன் நடிக்கிற நடிகருடன் சேர்ந்து வீடியோ, ரீல்ஸ் என சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். ‘‘இவ்ளோ ஏன், தீபாவளி வாழ்த்தைக்கூட அந்த நடிகருடன் சேர்ந்துதான் தெரிவித்தார்’’ என்கிறார்கள். என்ன விவகாரம் என்பது நடிகைக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியவில்லையாம்.