தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

 கணேஷ் வெங்கட்ராம் - நிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

காதல் டிவி

காதல்... இவ்வுலகை உயிர்ப்போடு இயக்கும் கண்ணுக்குத் தெரியாத ஓர் உணர்வு. அதுவே திருமணம், குழந்தை என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்பின் வெவ்வேறு பரிமாணங்களை அடையும். அப்படி தங்கள் வாழ்வில் உணர்ந்த காதலை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் சின்னத்திரை ஜோடிகள்.

ஐ லவ் யூ... ஐ மிஸ் யூ!

கயல் `சந்திரமெளலி’ - அஞ்சனா

``மெளலியை முதன்முதலா பார்த்த நாள் ஞாபகம் இல்லை. ஆனா, ஸ்பெஷலான அந்த நேரத்தை மட்டும் மறக்கலை. அவர்தான் முதலில் காதலை வெளிப்படுத்தினார். ஆனா, அப்போ நாங்க `ஐ லவ் யூ' சொல்லிக்கவே இல்லை. அப்படி யொரு முதிர்ச்சியான அழகிய காதல் எங்களுடையது.

கல்யாணத்துக்கு முன்னாடி வரை என் விருப்பம்தான் முக்கியம்னு நினைச்சிருந்தேன். மெளலி வந்ததுக்கு அப்புறம்தான் குடும்பத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்தேன். இப்பல்லாம் வெற்றியோ தோல்வியோ... அதை ஒரே குடும்பமா சேர்ந்து எதிர் கொள்கிறோம்.

கயல் `சந்திரமெளலி’ - அஞ்சனா
கயல் `சந்திரமெளலி’ - அஞ்சனா

எங்க மகன் ருத்ராக்ஷுக்கு ஒன்றரை வயசாகுது. மெளலிக்கு மகனைப் பள்ளிக்கு அனுப்பவே விருப்பமில்லை. அவர் ரொம்ப முற்போக்கா யோசிப்பார். ஆனா, இந்த சமூகம் அதையெல்லாம் ஏத்துக்காது. அதனால, அவன் டிகிரி வரையாவது படிச்சிடணும்'' என்று அஞ்சனா சொல்ல, மௌலி தொடர்கிறார்.

``நம்ம நாட்டில் மனைவிக்குப் பிரசவம் நடக்கும் லேபர் ரூமில் கணவன் கண்டிப்பா இருக்கணும்னு உத்தரவு பிறப்பிக்கணும். காதல், காமம் எல்லாம் தாண்டி மனைவி மேல் ஒரு அதீத மரியாதை உண்டாகும் உயர்ந்த தருணம் அது. எனக்கு அஞ்சனாமீது இருக்கும் காதலும் மரியாதையும் இப்போ பல மடங்கு அதிகமாகியிருக்கு’’ என்று மெளலி நிறுத்த, புன்னகையுடன் அஞ்சனா தொடர்கிறார்.

``இப்படியெல்லாம் எமோஷனலா பேசினாலும் எங்களுக்குள்ள அடிதடி சண்டையும் அடிக்கடி நடக்கும். சண்டை முடிவுல ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ எல்லாம் பறக்கும்” என்று கணவர் கைகளைப் பற்றிக் கொள்கிறார் அஞ்சனா.

லைஃப் எப்போதுமே ரோஜா இதழ்கள் மாதிரி இருக்காது, சில நேரம் முள் குத்தத்தான் செய்யும். ஆனா, அந்த முள் உன்னைக் குத்தாத மாதிரி நான் பார்த்துக்கிறேன்!

குப்பி பாட்டு செம லவ்வு!

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

“நாங்க ரெண்டு பேரும் `வேந்தர் வீட்டு கல்யாணம்’கிற டி.வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னோம். அப்போ மலர்ந்த நட்பு காதலா மாறுச்சு. ஒரு டிசம்பர் 20-ம் தேதி, கணேஷ்தான் முதல்ல புரொபோஸ் பண்ணினார். யோசிக்கவே இல்லை... உடனே ஓகே சொல்லிட்டேன். இப்போ காதல் பரிசா பாப்பாவும் வந்தாச்சு!

என் பிறந்த நாளான ஜூன் 28 அன்னிக்கே டெலிவரி டேட்டும் கொடுத்திருந்தாங்க. பிறந்த நாளுக்காக சாக்லேட் கேக்் ஆர்டர் பண்ணியிருந்தோம். கேக் சாப்பிட்ட பிறகுதான் லேபர் வலி வரணும்னு வயித்துக்குள்ள இருந்த பாப்பாகிட்ட, நாங்க இரண்டு பேரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதேமாதிரி கேக் சாப்பிட்ட பிறகுதான் வலி வந்தது. அசந்துட்டோம். லேபர் ரூம்ல கணேஷ் தான் எப்படி புஷ் பண்ணணும், சுவாசிக்கணும்னு சொல்லிட்டே இருந்தார்'' என்று நிஷா நிதானிக்க, கணேஷ் தொடர்ந்தார்...

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா
கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

``ஜூன் 29 அன்னிக்கு பாப்பா பொறந்தா. நான் தான் முதல்ல தூக்கினேன். பாப்பா அப்படியே அப்பா பிள்ளை. என்னை மாதிரியே செம சமர்த்தும்கூட. பாப்பா வயித்துல இருக்கிறப்பவே `சமைரா'ங்கிற பெயரைத் தேர்ந்தெடுத்துட்டோம். பாப்பா வந்தபிறகும் எங்க ரெண்டு பேருக்கு இடையேயான காதல் அப்படியேதான் இருக்கு. பாப்பாமேல எங்க கூடுதல் காதல் திரும்பியிருக்கு. ஒரே லவ்வாங்கிதான்!

நிஷா முன்னெல்லாம் சரியான நேரத்துக்குச் சாப்பிட மாட்டாங்க. குழந்தை பிறந்த பிறகு சரியான நேரத்துக்கு சாப்பிடறாங்க. பாப்பாவுக்காக என்றாலும் அவங்க செல்ஃப் கேர் அதிகரிச்சிருக்கறது ரொம்பவே பிடிச்சிருக்கு.

சமீபத்தில் நிஷா எனக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. மியூசிக் மாஸ்டர் உதவியோடு, நாங்க முதன்முதலா எப்போ பார்த்தோம், என்ன பேசினோம்கிறதை வரிகளாக்கி, நிஷாவே மியூசிக் கம்போஸ் பண்ணி, பாட்டு பாடியிருந்தாங்க. என் பிறந்தநாளுக்கு அதைத்தான் பரிசாகக் கொடுத்தாங்க. ரொம்ப நெகிழ்ந்துட்டேன். நிஷா கூச்ச சுபாவம் கொண்டவங்க. இதுவரைக்கும் பாட்டெல்லாம் பாடினதே கிடையாது. கல்யாண நலங்கு நிகழ்ச்சிலகூட பாடச் சொன்னதுக்கு அழுதுட்டாங்க. எனக்காக அவங்க பாடின அந்தப் பாட்டு என் லைஃப் டைம் கிஃப்ட். லவ் யூ குப்பி!’’ என்றபடியே செல்லப் பெயரில் நிஷாவை அழைத்து அணைக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

வாம்மா அழகம்மா!

ஷியாம் - பாமா ருக்மணி

`லட்சுமி ஸ்டோர்ஸ்', `மின்னலே' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஷியாமின் காதல் கதை அத்தனை சுவாரஸ்யம்.

“ `மெளனராகம்' பட ஹீரோ மோகன் ஸ்டைல்ல பொண்ணு பார்க்கும் படலத்தில் பொண்ணுகிட்டயே `எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை'னு சொல்லப்போய், `உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு'ன்னு சொல்லிட்டு வந்தவன் நான். அவங்களைப் பார்த்த நொடியிலேயே நான் அவுட். அப்போ இருந்து அவங்க எனக்கு அழகம்மா. யெஸ்... அப்படித்தான் எப்பவும் கூப்பிடுவேன்'' என ஷியாம் சிரிக்க, வெட்கத்தைப் பதிலாக்கிவிட்டு தொடர்கிறார் ஷியாமின் மனைவி பாமா.

“அவரை முதல்ல பார்த்தப்போ பிடிச்சதை விடவும் இப்போ இன்னும் அதிகமா பிடிக்குது. நான் ஐ.டி-யில வேலை பார்க்கிறேன். ஷூட்டிங் முடிஞ்சு அவர் வர்ற வரைக்கும் சாப்பிடாமல் காத்திருப்பேன். அந்த ஃபீலிங்ஸெல்லாம் சாருக்கு இருக்காது. வந்ததும், 'ஏன் சாப்பிடலை'னு திட்டுவார். அவர் இல்லாம எனக்குத் தூக்கமே வராது” என பாமா பேசிக்கொண்டிருக்கையில் இடைமறிக்கிறார் ஷியாம்.

ஷியாம் - பாமா ருக்மணி
ஷியாம் - பாமா ருக்மணி

“நிறைமாதக் கர்ப்பிணியா இருந்தப்போகூட நான் வர்ற வரைக்கும் தூங்காமதான் இருப்பாங்க. வளைகாப்பு முடிஞ்சதும் அம்மா வீட்டுக்குப் போகணும்னுதானே ஆசைப்படுவாங்க. ஆனா, இவங்க என்னை விட்டுட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் மேல இவ்வளவு அன்பு வெச்சிட்டிருக்கறவங்களுக்கு அவங்க விரும்பின நேரத்துல பக்கத்துல இல்லாம போயிட்டேன். போன வருஷம் அக்டோபர் 30 நள்ளிரவு வந்த பிரசவ வலி காலை வரைக்கும் தொடர்ந்தது.

அன்னிக்குப் பார்த்து `உடனே வாங்க'னு லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநர் போன் பண்றார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பலன் இல்லை. பாமாவை அவங்க அம்மாகிட்ட விட்டுட்டு மனசே இல்லாம ஷூட்டிங் போனேன். சிசேரியன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டதா போன் பண்ணி ஒரே அழுகை. `நீங்க வராம ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போகமாட்டேன்னு அடம்பிடிக்க றாங்க'னு எனக்கு போன் மேல போன் வருது.

ஷூட்டிங் இடைவேளைல பார்த்தா 10 மிஸ்டு கால். பயந்துட்டே போனை எடுத்தா `உனக்கு பொண்ணு பொறந்திருக்கா'ன்னு அம்மா சொன்னாங்க. என் பொண்ணு முகத்தை முதன்முதலா பார்த்தப்போ சந்தோஷத்தில் அழுதுட்டேன்'' என்று நினைவுகளால் கலங்குகிறார் ஷியாம்.

``அப்போ நாங்க ஐ லவ் யூ எல்லாம் சொல்லிக்கிட்டதே இல்லை. இப்போல்லாம் தினமும் ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ சொல்லிக்கிறோம். என்னதான் பாப்பா வந்தாலும், அவர்தான் என் உலகம். அவருக்கு பாப்பாதான் உலகமே. பிரசவத்தன்னிக்கு எனக்காக லீவ் போடாதவர், பாப்பாக்காக ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வந்திருந்தார். இந்த அப்பாக்களே இப்படித்தான்!'' என்று செல்லமாக பாமா கோபிக்க, ``நீ என் அழகம்மா, பாப்பா சின்ன அழகம்மா'' என்று கொஞ்சி, காதலை மேலும் பரவவிடுகிறார் ஷியாம்!

தனிப்பெருந்துணையே!

மானஸ் - நீரஜா

பத்து ஆண்டுகள் திகட்டத் திகட்டக் காதலித்து, 2019-ல் திருமண பந்தத்தில் இணைந்து தங்கள் காதலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது மானஸ் - நீரஜா ஜோடி. பள்ளிப்பருவ காதலின் உற்சாகம் சற்றும் குறையாமல் தங்கள் காதல் கதையைப் பகிர்கின்றனர்.

``நீரஜாவை ஒரு ஸ்கூல் கல்ச்சுரல் நிகழ்ச்சியில் சந்திச்சு என் காதலைச் சொன்னேன். எப்படி மறக்க முடியும் அந்த நாளை? அவங்க இப்ப என் வாழ்க்கைத்துணையாகி என்னை அன்பால் நிறைச்சுட்டிருக்காங்க'' என்று மானஸ் தொடங்கி வைக்க, தொடர்கிறார் நீரஜா.

மானஸ் - நீரஜா
மானஸ் - நீரஜா

``எங்க வீட்டுக்கிட்டதான் அவர் படிச்ச ஸ்கூல். அவர் வீட்டுக்கிட்டதான் நான் படிச்ச ஸ்கூல். ஸ்கூல் போகும்போது யதேச்சையா பார்க்க ஆரம்பிச்சோம். அப்புறம் அடிக்கடி பார்த்துப்போம். பத்து வருஷத்துக்கு முன்னாடி, வாலன்டைன்'ஸ் டே அன்னிக்கு என்னைச் சந்திச்சு, காதலை வெளிப்படுத்தினார். நான் உடனே ஏத்துக்கலை. நாலு வருஷம் காக்க வெச்சிட்டேன். என்னை இம்ப்ரெஸ் பண்றதுக்காக நான் ஸ்கூல் போய்ட்டு வர்ற வழியில் நிற்பார். அங்கிருக்கும் ஒரு பர்கர் கடையில நின்னு பர்கர் சாப்பிடற சாக்குல என்னையே பார்ப்பார். நான் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிடுவேன். அவருக்கு பர்கரே பிடிக்காதுன்னு அப்புறமாதான் தெரிஞ்சது. இப்படியெல்லாம் சேட்டை பண்ணி என் மனசுல பச்சக்னு ஒட்டிக்கிட்டார்’’ என்று நீரஜா சிரிக்க, மானஸ் தன் சிங்கிள் ஸ்டேட்டஸ் மாறியது பற்றிச் சொல்கிறார்.

``நாலு வருஷம் கழிச்சு அவங்க பிறந்த நாள் அன்னிக்குத்தான் அவங்க ஒளிச்சு வெச்சிருந்த காதலை வெளிப்படுத்தினாங்க. இன்னிக்கு வரைக்கும் அந்த மொமன்ட் என் கண்ணுல அப்படியே நிக்குது. அவங்களுக்கு முதன்முதலில் வைர கம்மல் கிஃப்ட் பண்ணினேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கு... அவங்களுக்கு ஏதாச்சும் வாங்கிக்கொடுத்துட்டே இருப்பேன். அவங்களை சந்தோஷப்படுத்திட்டே இருக்கிறது எனக்குப் பிடிக்கும்’’ என்று மானஸ் சொல்லும்போதே குறுக்கிடுகிறார் நீரஜா.

``நான் சும்மா ஒரு பொருள் நல்லா இருக்குன்னு சொன்னாகூட, உடனே அவர் அதை கிஃப்ட் பண்ணிடுவார். கிஃப்ட் கொடுக்க நாள் கிழமையெல்லாம் பார்க்கமாட்டார். ஒருமுறை சம்பந்தமே இல்லாம தந்தையர் தினம் அன்னிக்கு கிஃப்ட் கொடுத்தார். `ஏன் இப்படி பண்றீங்க'ன்னு கேட்டதுக்கு... `நீ இந்தப் பொருள் பிடிச்சிருக்குன்னு சொன்னதாலதான் கொடுத்தேன்'னு டயலாக் பேசினார். என்கிட்ட இருக்கிற முக்கால்வாசி பொருள்கள் அவர் கொடுத்த கிஃப்ட்தான். திருமணத்துக்குப் பிறகும் இது தொடருது. எங்க திருமணம் ஏப்ரல் 22-ம் தேதி நடந்தது. அதனால ஒவ்வொரு மாதமும் 22-ம் தேதி அன்னிக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுப்பார்’’ - மகிழ்ச்சியோடு சொல்கிறார் நீரஜா.

``நீரஜாவும் எனக்கு அடிக்கடி கிஃப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. கல்யாணத்தில எனக்கு ஐபோன் 10 கிஃப்ட் பண்ணாங்க. மறக்கவே முடியாத தருணம் அது.

எனக்கு அவங்களைச் சிரிக்க வெச்சுட்டே இருக்கணும்... அவ்வளவுதான். நான் கிஃப்ட் கொடுக்கிறப்ப அவங்க சொல்ற ஒரே விஷயம் கோபத்தைக் குறைக்கணும்கிறதுதான். அவங்களுக்காக இப்போ என் கோபத்தைக் குறைச்சுக்கிட்டேன். இந்த வாழ்க்கையோட பெஸ்ட் கிஃப்ட் நீரஜாதான். எங்க திருமண வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் ரசிச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்’’ என்று மானஸ் பூரிக்க, எமோஷனல் ஆகிறார் நீரஜா.

``அவர் முதன்முதலா புரொபோஸ் பண்ணும்போது, `லைஃப் எப்போதுமே ரோஜா இதழ்கள் மாதிரி இருக்காது. சில நேரம் முள் குத்தத்தான் செய்யும். ஆனா, அந்த முள் உன்னைக் குத்தாத மாதிரி நான் பார்த்துக்கிறேன்'னு கவிதையா சொல்லி `ஐ லவ் யூ' சொன்னார். அப்போ அந்த டயலாக்கின் அர்த்தம் புரியலை. ஆனா, இப்ப உணர முடியுது. அதை அவர் எப்பவும் காப்பாத்திட்டு இருக்கார்'' என்று காதலாகி கசிந்துருகுகிறார் நீரஜா.

காதல் அத்தியாயம் தொடங்கிடுச்சு!

ஸ்ரீத்திகா - சனீஷ்

``எங்க ரெண்டு பேர் வீட்லேயும் பேசி முடிவு பண்ணின பிறகு, 2019 ஜூன்ல நாங்க பேச ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் என் கணவர் சனீஷுக்கு என் படம், சீரியல் பத்தியெல்லாம் தெரியாது. போன்ல பேச ஆரம்பிச்சதும் என்னைப் பத்தி கூகுள் பண்ணி பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டாராம். `நல்லா நடிக்கிறேன்'னு பாராட்டினார். வாட்ஸ்அப், போன் கால்னு ஆரம்பிச்ச எங்க பேச்சுல மெதுவா காதல் கலக்க ஆரம்பிச்சதை ரெண்டு பேரும் மெது மெதுவா உணர ஆரம்பிச்சோம்.

ஸ்ரீத்திகா - சனீஷ்
ஸ்ரீத்திகா - சனீஷ்

எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருச்சு. ஒருதடவை பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு `ஐ லவ் யூ'னு சொன்னார். ஒரு நிமிடம் திணறி அதுக்கப்புறம் வானத்துல குதிக்கிற மாதிரி ஆகிட்டேன். மறக்க முடியாத அழகான மொமன்ட் அது. நானும் திரும்ப `லவ் யூ' சொன்னேன். எங்க காதல் அத்தியாயம் அந்த மொமன்ட்லதான் தொடங்குச்சு.

அதுவரைக்கும் சனீஷ், ஸ்ரீத்திகாவா இருந்த நாங்க பேபியாகவும் சன்னியாகவும் மாறி கொஞ்சல்ஸ்ல இறங்கிட்டோம்.

அக்டோபர் முதல் வாரம் அவரை நேரில் சந்திச்சேன். முதன்முதலா அவரைப் பார்த்தப்போ இனம் புரியாத ஒரு சந்தோஷம் ஏற்பட்டுச்சு. அந்த உணர்வுகளை வார்த்தைகளால விவரிக்க முடியாது. அப்போ அவருக்கு டீ-ஷர்ட்ஸ் கிஃப்ட் பண்ணேன். அவர் எனக்கு மோதிரம் கிஃப்ட் பண்ணினார்.

அவரோட பொறுமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கோபப்படவே மாட்டார். நானும் பெருசா கோபப்பட மாட்டேன். ரெண்டு பேருமே பொறுமைசாலி என்பதால இப்போ வரை சண்டை வந்தது கிடையாது. ஒரே ஒரு சின்ன வருத்தம்தான். இதோ... திருமணமாகி 10 நாள்களில் வேலை விஷயமா அவர் துபாய் போய்ட்டார். அவரை ரொம்பவே மிஸ் பண்றேன். திரும்ப வந்ததும் எல்லா வேலைகளையும் தள்ளி வெச்சிட்டு காதலிக்க ஆரம்பிக்கணும்’’ என்கிற ஸ்ரீத்திகாவுக்கு அதற்குமேல் பேச முடியாத அளவுக்கு வெட்கம் அப்புகிறது!