
ஜோடிப் பொருத்தம்
காதல் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மயங்காதவர்கள் குறைவே... சின்னத்திரையில் ரசிகர்கள் மனத்தை அள்ளும் நட்சத்திரங்களின் ரீல் & ரியல் காதல் அனுபவங்களைக் கேட்டோம்.
ஜனனி (`செம்பருத்தி' நாயகி ஐஸ்வர்யா)
`செம்பருத்தி' சீரியலில் கதிர் ரொம்ப விளையாட்டுத்தனமான கணவரா இருப்பார். நான் ரொம்ப பொறுப்பான பொண்ணா நடிச்சிருப்பேன். கதிருக்குக் காதல் காட்சிகளில் நடிக்க வராது. இந்த சீரியல்ல முகத்தைச் சுளிக்கிற மாதிரியான காதல் காட்சிகள் கிடையாது. சும்மா சிரிக்கணும், வெட்கப்படணும், ஐ லவ் யூ சொல்லணும். அவ்வளவுதான். ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கறதுக்கு முன்னாடி நானும் கதிரும் டிஸ்கஸ் பண்ணிப்போம். அவருக்கு ஐடியா கொடுப்பேன். காதல் காட்சிகள்ல நடிக்க இதுவரைக்கும் நாங்க அதிக டேக் வாங்கினது கிடையாது. ஆனா, கொஞ்சம் சொதப்பி இருக்கோம். கண் பார்த்து, காதல் வசனங்கள் பேசுறப்ப நான் சட்டுன்னு சிரிச்சுடுவேன். கதிரைப் பார்த்தாலே எனக்குச் சிரிப்பு வருது. என்ன செய்யறது, சொல்லுங்க!

உண்மையான வாழ்க்கையில எனக்கு ‘மௌன ராகம்’ படத்துல கார்த்திக், ரேவதி கிட்ட காதலைச் சொல்ற மாதிரியான புர போஸல் ரொம்பப் பிடிக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு அன்பை வெளிப்படுத்தும் காட்சி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்!
கதிர் (`செம்பருத்தி' நாயகன் அருண்)
`செம்பருத்தி'தான் என் முதல் சீரியல். அதுக்கு முன்னாடி டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன். அப்போ காதல் பாடல்களுக்கு ஆடும்போது ரொம்ப கூச்சப்படுவேன். முதல் ரெண்டு எபிஸோட் ரொம்ப சொதப்பி, கம்மியா மார்க் வாங்கினேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழகிடுச்சு.

பொதுவா எனக்குச் சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸ் வராது. ஆனா, சீரியல்ல எனக்குப் பிளே பாய் கேரக்டர். அய்யய்யோ... சீரியல் முழுக்க ரொமான்ஸ் பண்ணணுமான்னு பயந்துட்டே இருந்தேன். நல்லவேளையா, அந்தப் பயத்தைப் போக்கினது சீரியல்ல என் மனைவியா நடிக்கும் ஜனனிதான். அவங்கதான் காதல் காட்சிகள்ல எப்படிப் பார்க்கணும், ரொமான்ஸ் பண்றப்ப உடல்மொழி எப்படி இருக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. சீரியலில் அவங்களைச் செல்லமா ‘ஐஸ்'ஸுன்னு கூப்பிடுவேன். அது என் ஐடியாதான். அதை ரசிகர்கள் ரொம்ப ரசிக்க ஆரம்பிச்சாங்க.
நிஜ வாழ்க்கையைப் பொறுத்தவரை காதலுக்கு உடல்மொழியோ, பரிசுகளோ தேவையில்லைனு நினைக்கிறேன். உதாரணத்துக்கு நான் இப்போ ஒரு பொண்ணை லவ் பண்ணி, புரபோஸ் பண்ணும்போது பிரமாண்டமா 10 கிலோ கேக் வெட்டி அவங்களை குஷிப்படுத்துறேன்னு வெச்சிக்கோங்க. வருஷாவருஷம் அதே மாதிரி பண்ண முடியாதில்லையா... அப்படி நடக்காட்டி, `நீ ரொம்ப மாறிட்ட கதிர்'னு கோவிச்சிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க!
அதுக்குத்தான் காதலை இயல்பா சொல்லணும். காதல்ல புரிந்துணர்வுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். நாம கொடுக்குற பரிசுகள், கடைசி வரைக்கும் நம்ம கூடவே பயணிக்கிற பார்ட்னர்கிட்ட இருக்காதில்லையா? அன்பும் அக்கறையும்தான் கடைசி வரைக்கும் அவங்க மனசுல நிலைச்சு நிற்கும்!
நான் எட்டாவது படிக்கும்போது வந்த இங்கிலீஷ் டீச்சரை, 'ரொம்ப அழகா இருக்காங்களே'னு நினைச்சு ரசிச்சிருக்கேன். 11-ம் வகுப்பில் வந்த ஒரு டீச்சரை பார்த்து ரொம்பப் பிடிச்சது. அவங்களை ஈர்க்கிறதுக்காகவே டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு ஆடுவேன். ‘நல்லா டான்ஸ் ஆடினே’ன்னு அவங்க சொன்னப்ப வானத்துல மிதந்திருக்கேன். இப்படி பப்பி லவ்வுக்காக பர்ஃபார்மென்ஸ் பண்ண ஆரம்பிச்சு, சின்னத்திரையில் பர்ஃபார்ம் பண்ணிட்டிருக்கேன்!
வித்யா பிரதீப் (`நாயகி'யின் நாயகி ஆனந்தி)
``என்னைப் பொறுத்தவரைக்கும் காதல் காட்சிகளில் நடிக்கும்போது ரொம்ப மெனக்கிட மாட்டேன். காமெடி, அழுகை போன்ற காட்சிகளில் நடிக்கிற மாதிரிதான் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பேன். நிறைய சொதப்பல்கள் இருக்கும். ஆனாலும், நாயகி சீரியலில் எனக்கும் திலீப்புக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கேன். அதற்குக் காரணம், எங்க இருவருக்கும் நடிப்பில் இருக்கும் ஈடுபாடுதான்.

காதல் காட்சியைவிட, எமோஷனல் காட்சிகளில் ரொம்ப இன்வால்வ் ஆவேன். சீரியல்ல என் கணவர் திருமுருகன் மருத்துவமனையில் இருக்கறப்ப நான் அழணும். அந்தக் காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாவே அழுதுட்டேன். அந்தக் காட்சி ரொம்ப தத்ரூபமா வந்திருக்கிறதா செட்ல எல்லோரும் பாராட்டினாங்க.
ரியல் வாழ்க்கையில நான் ரொம்ப ரொமான்டிக்கான ஆளுதான். ஆனால், ஃபேன்டசியான லவ் புரபோஸல்கள் எனக்குப் பிடிக்காது. பார்த்ததும் காதல், கையில் பூங்கொத்து, நிறைய விளக்குகள், பலூன்கள் பறக்கணும்னு எல்லாம் நான் நினைச்சதே இல்லை. என்னைப் புரிஞ்சுக்கிட்டு, அன்பை அக்கறை மூலமா வெளிப்படுத்தினாலே போதும்.
எனக்கு ‘டைட்டானிக்’ திரைப்படம் ரொம்பப் பிடிக்கும். நான் ரொம்ப ரசிச்ச, என்னைப் பாதிச்ச முதல் படம் அது. அந்தப் படத்தில் காட்டப்பட்டதைவிட அதிகமான காதலை எனக்கு பார்ட்னரா வரப்போகிறவர் வெளிப் படுத்தணும்!

திலீப் ராயன் (`நாயகி'யின் நாயகன் திருமுருகன்)
`நாயகி' சீரியலில் திரு - ஆனந்தி ஜோடியின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக முக்கிய காரணம் இயக்குநர்தான். பொதுவா அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நாயகன் - நாயகி இருவரின் கண்கள்தான் பேசணும். இதுவரைக்கும் காதல் காட்சிகள்ல சொதப்பினது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் ஆனந்தியாக நடிக்கும் வித்யாதான். ரொம்ப நல்லா சப்போர்ட் பண்ணி நடிப்பாங்க.