சினிமா
பேட்டிகள்
Published:Updated:

விகடன் TV: டபுள் தலை தீபாவளி!

 பிரபா - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபா - சசிகலா

திடீர்னு ஒருநாள் ‘கர்ப்பமா இருக்கேன்’னு என் மனைவி சொன்ன தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் மொமண்ட் ஆக இருந்தது.

தொகுப்பாளினியாக நமக்குப் பரிச்சயமானவர் சசிகலா. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `என்றென்றும் புன்னகை' தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். தலை தீபாவளி செலிபிரேஷன் பிளானிங்கில் பிஸியாக இருந்த சசிகலா - பிரபா தம்பதியினரை பேட்டிக்காகச் சந்தித்தோம். ‘‘இந்த தீபாவளி எங்களுக்கு டபுள் ஸ்பெஷல்’’ என நம்மிடம் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சசிகலா.

‘‘இது நாங்க கணவன் - மனைவியாகக் கொண்டாடப் போகிற முதல் தீபாவளிப் பண்டிகை. அதுமட்டுமல்லாம, இப்போ நான் கர்ப்பமா இருக்கேன். நாங்க மூணு பேரா சேர்ந்து கொண்டாடப் போகிறோம்னு ரொம்பவே ஹேப்பியா இருக்கோம்’’ என்றவர் தன் காதல் திருமணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

விகடன் TV: டபுள் தலை தீபாவளி!

“பிரபா `திருட்டு விசிடி'ன்னு ஒரு படத்தில் நடிச்சிருந்தார். அந்தப் படத்தோட புரொமோஷன் இன்டர்வியூவில்தான் இவரைச் சந்திச்சேன். பார்த்த உடனே என்னை ‘அக்கா’ன்னு கூப்பிட்டார். பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான், எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசுன்னு தெரிஞ்சது. நண்பர்களாக இருக்கும்போது திடீர்னு ஒருநாள் நேரடியா எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா என் அம்மாகிட்ட சொன்னார். ரெண்டு குடும்பமும் பேசி எங்க திருமணத்துக்கு சம்மதம் தெரிவிச்சாங்க. லாக்டௌன் இருந்ததால ரொம்ப சிம்பிளா திருமணம் நடந்துச்சு. ரெண்டு பேரும் மீடியா ஃப்ரெண்ட்ஸ் யாரையுமே திருமணத்துக்குக் கூப்பிட முடியல’’ என்றதும், பிரபா தொடர்ந்தார்.

‘‘திடீர்னு ஒருநாள் ‘கர்ப்பமா இருக்கேன்’னு என் மனைவி சொன்ன தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் மொமண்ட் ஆக இருந்தது. சசி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! என் அக்காவும், அக்கா பொண்ணும் ஒரு விபத்தில் இறந்துட்டாங்க. அவங்களுடைய இழப்பிலிருந்து எங்க குடும்பத்தில் யாரும் மீண்டு வரல. சசி வந்ததுக்கு அப்புறமாதான் எல்லாருடைய முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிஞ்சது. இப்போ அவங்க கர்ப்பமானதும், ‘எங்க அக்காவே மறுபடி பிறப்பாங்க’ன்னு குடும்பமே நம்ப ஆரம்பிச்சிட்டாங்க’’ என உணர்ச்சிக் கொந்தளிப்பால் பேச முடியாமல் தவித்தவரின் கரம் பற்றி சசிகலா தொடர்ந்தார்.

விகடன் TV: டபுள் தலை தீபாவளி!

‘‘எங்க மாமியார் வீட்ல ஐந்தாவது மாசமே வளைகாப்பு வெச்சிடுவாங்க. அந்த சடங்கை இவரோட அக்காதான் செய்யணும். அவங்க இல்லைங்கிற வருத்தம் எல்லார்கிட்டேயும் இருந்துச்சு. எனக்கு சர்ப்ரைஸ் பண்ணணும்னு பிரபாவும், அவருடைய குடும்பமும் எனக்குத் தெரியாமலேயே வளைகாப்பை கிராண்டா பிளான் பண்ணிட்டாங்க. என் அப்பாவை அந்த இடத்துல நான் ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதைப் புரிஞ்சிக்கிட்டு என் கணவர், வளைகாப்பு நடக்கிற ஹாலுக்குள்ளே நான் நுழைஞ்ச உடனேயே என் அப்பா போட்டோ காட்டி ஆசீர்வாதம் வாங்கிக்கச் சொன்னார். அப்பவே அழுதுட்டேன். இது எனக்கான ஃபங்ஷன். இதை என்ஜாய் பண்ணணும்னு எமோஷனை அடக்கிக்கிட்டேன். ஆனாலும், கடைசியா குடும்பமே உடைஞ்சு அழுதுட்டோம்’’ என்றவர், சில நொடி மெளனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

‘‘இது வேணும்னு கேட்கிறதுக்கு முன்னாடியே பிரபா அதை எனக்கு வாங்கிக் கொடுத்திடுவார். என்னை யாரும் இந்த அளவுக்கு கவனிச்சிக்கிட்டதில்லை. எனக்கு என்ன தேவைங்கிறதை அவர் எப்படிக் கண்டுபிடிக்கிறார்னு பல தடவை நான் யோசிச்சிருக்கேன். எனக்குப் பையன் பிறக்கணும்னு ஆசையா இருக்கு. ஏன்னா, பிரபாவுடைய குணத்தை என் மகன்கிட்ட பார்க்கணும்’’ என்றவரின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு, பிரபா தொடர்ந்தார்.

‘‘எங்களை நம்பிப் புது உயிர் வரப்போகுதுங்கிற பொறுப்புணர்வு எங்க ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு. ஜாலியா ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடிட்டு இருக்கோம். அவங்களை முடிஞ்ச அளவுக்கு ஹேப்பியா வச்சிக்கிறேன். எனக்கு எந்தக் குழந்தையா இருந்தாலும் பரவாயில்லை. அம்மாவும் குழந்தையும் ஹெல்த்தியா இருக்கணும். அதற்கான விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்றேன்’’ என்றதும், சசிகலா அவர் தோளில் சாய்ந்துகொள்ள, ‘வாழ்த்துகள்’ கூறி விடைபெற்றோம்.

*****

‘`எங்களுடையது அரேஞ்ச்டு மேரேஜ். இந்த அளவுக்கு எங்களுக்குள்ளே புரிதல் இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல’’ என்கிறார் சஹானா. தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘தாலாட்டு' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். தலைதீபாவளி கொண்டாட இருக்கும் இந்த ஜோடியை ஒரு மாலை நேரத்தில் சந்தித்துப் பேசினோம்.

‘‘கல்யாணம் தள்ளிப்போய்ட்டே இருந்துச்சு. என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்னதும் எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கையே இல்லாம இருந்துச்சு. ஆனா, நான் நினைச்சதைவிட தலைகீழா எல்லாமே நடந்துச்சு. ரெண்டு பேர் குடும்பத்துக்கும் பிடிச்சிருந்தது. நாங்களும் ஈஸியா செட் ஆகிட்டோம். நான் மீடியாவில் இருக்கிறதனால மீடியாவில் இருக்கிறவர் கணவரா வேண்டாம்னு வீட்ல சொன்னேன். ஏன்னா, திடீர்னு ஆறு மாசம் வேலை இல்லாம ரெண்டு பேரும் வீட்ல இருந்தா லைஃப் கொண்டு போகிறது கஷ்டமாகிடும்னு அப்படி முடிவெடுத்திருந்தேன்’’ என்றவர், அவரின் கணவர் அபிஷேக்கை நம்மிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

விகடன் TV: டபுள் தலை தீபாவளி!

‘‘இவர் ஒரு டாக்டர். செம ஜாலி டைப். எப்பவும் கலகலன்னு பேசிச் சிரிக்க வச்சிட்டே இருப்பார். அவசர அவசரமா எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. பெரிய அளவில் யாரையும் கூப்பிட முடியல’’ என்றவரிடம் தலை தீபாவளி பிளான் குறித்துக் கேட்கவும், அபிஷேக் தொடர்ந்தார்.

‘‘இப்போ வரை எந்த பிளானும் பெருசா இல்லை. ஏன்னா, நான் திண்டிவனத்துல ஒரு மருத்துவமனையில் எம்.டியா இருக்கேன். அவங்க ஷூட்டிங்ல பிஸியா இருக்காங்க. ரெண்டு பேரும் எப்போவாச்சும்தான் மீட் பண்ணிக்கிறோம். இப்போ எங்களுக்குத் திருமணமாகி 100வது நாள் வரப்போகுது. அதைக் கொண்டாடுறதுக்கான பிளான்தான் போய்ட்டிருக்கு. இப்போதைக்கு ஒரு ரெசார்ட்ல செலிபிரேட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். அதுக்கு அப்புறம்தான் தீபாவளி பிளான்’’ என்றதும் சஹானா தொடர்ந்தார்.

சஹானா - அபிஷேக்
சஹானா - அபிஷேக்

‘‘நான் தீபாவளி கொண்டாடி ரெண்டு, மூணு வருஷம் ஆகிடுச்சு. மீடியாவில் ஏதாச்சும் சாதிக்கிற வரைக்கும் தீபாவளி கொண்டாட மாட்டேன்னு சொல்லியிருந்தேன். இப்போ என் கரியர்ல பெரிய அளவில் சாதிக்கலைன்னாலும் என் லைஃப்ல நான் ஆசைப்பட்ட மாதிரி 100% ஹேப்பியா இருக்கேன். அதனால என் கணவரோடு சேர்ந்து இந்த தீபாவளியை ரொம்பவே ஜாலியா கொண்டாடப்போறேன்.

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் குழந்தையைப் பார்த்துக்கிறது மாதிரிதான் பார்த்துப்போம். நான் அவருக்கு ஸ்ட்ரிக்ட் அம்மா, அவர் எனக்கு ஜாலியான அப்பா’’ என்றதும் அவரை அணைத்துக்கொண்டார் அபிஷேக்.