
மகிழ்ச்சியாகக் கற்க வேண்டிய கல்வி, பிள்ளைகளுக்கு அழுத்தம் தரும் விஷயமாக இன்றைக்கு மாறிவிட்டது. படிப்பின்மீது குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு ஆர்வம் குறைவாக இருக்கக் கூடும்.
பெண்களின் உணர்வுகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்தும் கதைகள் மூலம், தமிழ்க் குடும்பங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ நிறுவனத்தின் புதிய படைப்பு, ‘தமிழும் சரஸ்வதி’யும் நெடுந்தொடர். ஸ்டார் விஜய் சேனலில் ஜூலை 12-ம் தேதி முதல் திங்கள் - சனி வரை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நெடுந்தொடர் பற்றி பேசும்போது, ‘`இன்றைய சூழலில் பெண்களை மையப்படுத்திய உணர்வுப் போராட்டக் கதையுடன், கால மாற்றத்துக்கு ஏற்ப ஜனரஞ்சகமாகவும் பிரதிபலிக்கப் போகிறது’’ என்று உற்சாகமாகிறார் கதாசிரியர் அமிர்தராஜ்.
``விகடன் தயாரிப்பில் குமரன் இயக்கத்தில் திருமதி செல்வம், தெய்வ மகள், நாயகி என்று பெரிய தொடர்கள் தாண்டி `தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் என்ன புதுமையை எதிர்பார்க்கலாம்?’’ என்று அவரிடம் கேட்டோம்.
“மகிழ்ச்சியாகக் கற்க வேண்டிய கல்வி, பிள்ளைகளுக்கு அழுத்தம் தரும் விஷயமாக இன்றைக்கு மாறிவிட்டது. படிப்பின்மீது குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு ஆர்வம் குறைவாக இருக்கக் கூடும். அவர்களுக்குப் படிப்பைத் தாண்டிய மற்ற துறைகள்மீதும் ஆர்வமும் ஈடுபாடும் இருக்கலாம். அதைப் பெற்றோர்கள் சரியாகக் கணித்து பிள்ளைகளை ஊக்கப்படுத்தவும், சீர்தூக்கிப் பார்க்கவும் தவறிவிடுகின்றனர். அந்த வகையில், மற்ற சில துறைகளில் ஆர்வம்கொண்ட கதையின் நாயகிக்கு, கற்றல் குறைபாட்டால் படிப்பின்மீது பெரிதாக நாட்டம் இருக்காது. அவர் குடும்பத்தில் எல்லோரும் நன்றாகப் படித்தவர்களாக இருப்பார்கள். அதனால், அப்பாவின் பாசத்தை இழந்து, பல்வேறு அழுத்தங்களையும் புறக்கணிப்புகளையும் மனதில் சுமக்கும் நாயகி, வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுகிறார், எல்லோருக்கும் பெருமை சேர்க்கப்போகிறார் என்பதுதான் கதை.
தொடர் தோல்விகளை எதிர்கொள்ளும் நாயகி, பன்னிரண்டாம் வகுப்பில் வெற்றிபெற்று, டிகிரி முடித்து, அப்பாவின் அன்பைப் பெற வேண்டும் என நினைப்பார். யதேச்சையாக நாயகனைச் சந்தித்து காதல் வயப்படும் நாயகி, திடீர் திருப்பமாகப் படிப்பில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் நுழைந்து பல்வேறு திருப்பங்களைச் சந்திக்கிறாள். எல்லோருக்கும் படிப்பு அவசியமானதுதான். ஆனால், அது மட்டுமே ஒருவரின் வாழ்க்கையையும் வெற்றியையும் தீர்மானித்துவிடாது என்பதை மிக அழுத்தமாக இந்தத் தொடர் உணர்த்தும். அழுது வடியும், சோகமே உருவான கதாபாத்திரங்களாக கதையின் நாயகி உட்பட இந்தத் தொடரில் யாரையுமே காட்டப்போவதில்லை. நேர்மறை அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். மற்றவர்களிடம் அன்பையும் மகிழ்ச்சியையும் மட்டுமே பகிரும் துள்ளல் மற்றும் குறும்புத்தனம் கொண்ட நாயகி ‘சரஸ்வதி’யாக நட்சத்திரா அசத்தப் போகிறார். காதல் நாயகன் ‘தமிழா’க, பெண்களின் மனதில் இடம்பெறப் போகிறார் தீபக்.
படித்த மருமகளை எதிர்பார்க்கும் படிக்காத மாமியார். அவரது வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நாயகி, சூழ்நிலை காரணமாகக் கூறிய ஒரு பொய்யால் மாமியாரின் வெறுப்புக்கு ஆளானாலும், அனைவரின் மனதையும் அன்பால் வெல்வார். அதிகாரம் மற்றும் பணபலம் படைத்த வில்லியாகப் புதிய பரிமாணத்தில் மீண்டும் மிரட்ட வருகிறார் ‘தெய்வ மகள்’ காயத்ரி. இந்த மூன்று பெண்கள்தான் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் தூண்கள். இவர்களுக்குள் நடக்கும் குடும்ப உரசல்களுக்கு இடையே, நாயகனும் நாயகியும் ஒற்றுமையுடன் பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி பெறு கிறார்கள் என்பதை, திருப்பங்கள் நிறைந்த கலகலப்பான காதல் கதையாக திரைக்கதையை வடிவமைத்துள்ளோம்”
- சஸ்பென்ஸ் உடைத்து, ஆவலைக் கூட்டுபவர், இந்தத் கதையின் வழியே சொல்ல வரும் மெசேஜ் குறித்தும் விவரிக்கிறார்.
“படிப்பு இல்லை என்பதாலேயே அவர்களுக்கு வெளியுலகம் தெரியாது என்று அர்த்தமில்லை என்ற கருத்தை அடிப் படையாக வைத்து கதை நகரும். இதில், கற்றல் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என்பதைப் பெற்றோர்களுக்கும், கல்வியில் நாட்டம் இல்லாத பட்சத்தில் சோர்வடையாமல் தங்களுக்குள் இருக்கும் மற்ற திறமையைக் கண்டறிந்து ஜெயிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கும், மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பவன் பொண்டாட்டி தாசன் அல்லன், வாழ்க்கையில் முன்னேறக்கூடியவன்.
கணவனும் மனைவியும் இணைந்து விவாதித்து முடிவெடுத்தால், தங்கள் துறைகளிலும் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் என்பதை சமூகத்துக்கும் உணர்த்தப் போகிறோம். எங்களுக்குப் புதிதாக பந்தம் ஏற்பட்டுள்ள விஜய் டிவியில், காதலர்கள் மற்றும் தம்பதியருக்குள்ளான உணர்வுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இதற்கு முன்பு சன் டிவியில் நாங்கள் பணியாற்றிய பாணியைப் போலவே, கதை உருவாக்கம் மற்றும் படைப்புத்திறனை வெளிப்படுத்துவது உட்பட எல்லா வகையிலும் விஜய் டிவியிலும் எங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. எனவே, இரு தரப்பு ரசிகர்களுக்கும், இந்தப் படைப்பு புதுமையான உணர்வையும் நிறைவையும் கொடுக்கும்.

படைப்புத்திறனுக்கான ஊக்கத்தையும், சுதந்திரமாக பணியாற்றும் நம்பிக்கையையும் எங்கள் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வழங்கிவருகிறது. எனவேதான், இயக்குநர் குமரனும் நானும் இணையும் இந்த ஐந்தாவது நெடுந்தொடரில், எல்லாக் கலைஞர்களின் கூட்டு முயற்சியுடன் புதுப்பாய்ச்சலைத் தொடங்கி உள்ளோம்.
சமூகத்தில் நடக்கும் விஷயங்களில் இருந்துதான், ஒவ்வொரு தொடருக்கான கதைக்கருவையும் எங்களுடைய தயாரிப்பு நிறுவனம் கையில் எடுக்கும். அதன்படி, இந்தக் கதையும் பலரிடமும் பெரிய தாக்கத்தையும் ஆரோக்கியமான கண்ணோட்டத்துக்கான மாற்றத்தையும் விதைக்கும்” என்று புன்னகையுடன் முடித்தார்.