சினிமா
Published:Updated:

தமிழும் சரஸ்வதியும் - சீரியல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

நட்சத்திரா - தீபக்
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திரா - தீபக்

மெகா சீரியலைப் பொறுத்தவரைக்கும் கதையின் போக்கை ஒன்லைன்ல சொல்லிட முடியாது

“கொரோனா மற்றும் ஊரடங்கு பாதிப்புகளால ஒன்றரை வருஷம் கடந்தும், பலரும் இன்னும் அழுத்தம் அகலாத மனநிலையில இருக்கிறோம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா தளர்வுகள் வந்திட்டிருந்தாலும், எப்ப வேணும்னாலும் ‘மூணாவது அலை வரும்’ங்கிற பேச்சையும் புறந்தள்ள முடியலை. பள்ளிக்கூடம் மூடிக் கிடக்க, ஆன்லைன்ல பசங்களுக்குப் புரிஞ்சும் புரியாமலும் படிப்புங்கிற ஒரு விஷயம் மனசை அழுத்திட்டிருக்கு. இந்தச் சூழலைக் கடக்கறதுக்குக் கொஞ்சம் பயன்படுகிற மாதிரியான என்டர்டெயின்மென்டா இது நிச்சயம் இருக்கும்.’’

வே.கி.அமிர்தராஜ், எஸ்.குமரன்
வே.கி.அமிர்தராஜ், எஸ்.குமரன்

விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்க, விஜய் டிவியில் வரும் திங்கள் (ஜூலை 12) முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக விருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் குறித்து சிம்பிளாக விளக்கிய தொடரின் இயக்குநர் எஸ்.குமரனிடம் தொடர்ந்து பேசினேன்.

`` ‘தமிழும் சரஸ்வதியும்’ பெயரில் சரஸ்வதி, கல்விக்கான குறியீடுதானா?’’

‘‘ஹீரோ, ஹீரோயினுடைய கேரக்டர் பெயர்கள் அவை. புரொமோ பார்த்திருப்பீங்க. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே படிப்புல பிரச்னைங்கிற மாதிரி இருக்கும். கல்விக்கான கடவுள் சரஸ்வதிதானே? அதேநேரம், எமோஷனல், ரொமான்ஸ்னு விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்களுக்கே உண்டான எல்லா அம்சங்களுமே இந்த சீரியலிலும் இருக்கு.’’

தமிழும் சரஸ்வதியும் டீம்
தமிழும் சரஸ்வதியும் டீம்

``ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே படிப்பு ஏறலைங்கிற மாதிரி இருக்கே? அவங்க அடுத்தடுத்த பயணம் எப்படியிருக்கும்?’’

‘‘மெகா சீரியலைப் பொறுத்தவரைக்கும் கதையின் போக்கை ஒன்லைன்ல சொல்லிட முடியாது. ஆனா ‘தமிழும் சரஸ்வதியும்’ ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி கல்வி தொடர்பா இன்னைக்கு இருக்கிற அழுத்தத்துல இருந்து விடுவிக்கிறதோடு, முன்னேறணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு உந்துதலா நிச்சயம் இருக்கும். சீரியல் பார்க்கிறப்ப அந்த பாசிட்டிவிட்டியை மனசுல உணரலாம்.’’

``ஷூட்டிங் செட் எப்படி இருக்கு?’’

‘‘ஹீரோ தீபக் எங்களுடைய ‘தென்றல்’ சீரியல் மூலமாத்தான் சின்னத்திரையில் ஹீரோவா புரமோட் ஆனார். அதேபோல நட்சத்திராவும் விகடனுக்கும் எனக்கும் பரிச்சயமானவங்கதான். ரெண்டு பேரும் துறுதுறுன்னு இருக்கிறதால ஷூட்டிங் ஸ்பாட் கலகலப்பா, விறுவிறுப்பா போயிட்டிருக்கு. இவங்களைத் தாண்டி வில்லி கேரக்டர்ல ‘தெய்வ மகள்’ அண்ணியார் ரேகா குமார் பண்றாங்க. வே.கி.அமிர்தராஜ் திரைக்கதை, கிரண் மியூசிக், கேமரா எஸ்.டி. மாட்ஸ், வசனம் நந்தன் தர், சந்துரு எடிட்டர்னு பெரும்பாலான டெக்னீஷியன்களும் ஆர்ட்டிஸ்டுகளும் விகடன் டெலிவிஸ்டாஸ்ல என்னுடன் பணிபுரிஞ்சவங்களா இருக்கிறது எங்களுக்குப் பெரிய பலம். ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிதல் இருக்குங்கிறதால ஷூட்டிங் இன்ட்ரஸ்டிங்கா போயிட்டிருக்கு.’’

தமிழும் சரஸ்வதியும் -  சீரியல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

``டி.ஆர்.பி ரேட்டிங் கிடைப்பதற்கான அம்சங்கள் இருக்கா?

‘‘டி.ஆர்.பி. பத்தி பொதுவா ஒரு விஷயம் சொல்லணும்னா, இன்ஸ்டண்டா சில விஷயங்களைச் செய்து ரேட்டிங் கிடைக்க வச்சா அது ஒரு சில வாரங் களுக்கு வேணும்னா கைகொடுக்க லாம்கிறது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்படிச் செய்யறது ரசிகர்களை ஏமாத்தறதுன்னுகூடச் சொல்லலாம். என்னுடைய கரியர் ஆரம்பத்துல இருந்தே விகடன் டெலிவிஸ்டாஸ் உடன்தான். நாங்க இன்ஸ்டண்டா ரேட்டிங் கிடைக்க எதையும் செய்யாம, கதைக்கு நியாயம் செய்தே திரைக்கதையை நகர்த்திட்டுப் போறோம். அப்படிப் போறதால மட்டுமே இப்ப வரைக்கும் ரசிகர்களின் மதிப்பை சம்பாதிச்சு, நிலைச்சு நிக்கறோம்னு கூடச் சொல்வேன்.’’

தமிழும் சரஸ்வதியும் -  சீரியல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

``உங்க சீரியல் பயணம் பத்தி...’’

‘‘முதல்முதலா ஷூட்டிங் போன நாளேகூட இப்ப என் ஞாபகத்துல இல்லை. மத்த ஃபீல்டைப் போலவே என்னுடைய துறை இது. அதுல என் வேலையை அந்த முதல் நாள் எந்த வேகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தேனோ, அதே மாதிரிதான் இன்னைக்கும் செய்திட்டிருக்கேன். திருப்தியாப் போயிட்டிருக்கு இந்த வேலை. சீரியல்ங்கிறது அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஏரியா. இங்க அழுத்தமான தொடர்களைத் தரணும்னு நினைக்கிற விகடன் டெல்விஸ்டாஸ்ல என் வேலையில் எனக்கு முழுச் சுதந்திரம் கிடைக்குது. என்னைச் சுத்தி நல்ல யூனிட்டும் இருக்கு. திரும்பியெல்லாம் பார்க்க வேண்டாம் சார். அப்படித் திரும்பிப் பார்த்துட்டா ஒரு தேக்கம் வரலாம். அல்லது இளைப்பாறத் தோணிடலாம்.’’

தமிழும் சரஸ்வதியும் -  சீரியல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

``விகடன் டெலிவிஸ்டாஸும் விஜய் டிவியும் முதன்முதலாகக் கைகோத்திருக்கின்றன. நீங்களுமே விஜய் டிவிக்குப் புதுமுகம்தானே?’’

‘‘ஆமா. விகடன் மூலம்தான் அந்த வாய்ப்பும் வந்திருக்கு. அதனால விகடனுக்கும் விஜய் டிவிக்கும் இந்த நேரத்துல என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். விகடன் சீரியல்களுடைய ஆடியன்ஸ் எப்பவும் எங்க பக்கபலம். விஜய் டிவி ரசிகர்களுக்கும் பிடித்த விதத்தில், ‘தமிழும் சரஸ்வதியும்’ இருக்கும். மொத்தத்துல எல்லா சீரியல் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல ட்ரீட்டா ‘தமிழும் சரஸ்வதியும்’ இருக்கும். ரசிகர்களிடமிருந்து வெற்றிச் செய்தி வரும்னு நம்புறோம்.’’