விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கொண்டாடப்பட்ட தொடர்களில் ஒன்று `கனா காணும் காலங்கள்'. `கனவுகள் காணும் வயசாச்சு... மனசுல ஆசை முளைச்சாச்சு!' என்கிற பாடலைக் கேட்டாலே 90'ஸ் கிட்ஸ் குதூகலமாகிவிடுவார்கள். அந்தத் தொடர் மீண்டும் வெப் சீரிஸ் வடிவில் வருகிறது என்றதும் `கனா' ரசிகர்கள் அந்த சீரிஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். முதல் சீசனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.
முதல் சீசனில் நடித்த சிலர் ரெண்டாவது சீசனில் நடிக்கவில்லை. அந்த வரிசையில் மலர் டீச்சராக மக்கள் மனதில் இடம் பிடித்த சங்கீதாவும் விலகியிருக்கிறார். இந்த விலகல் குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

"'கனா காணும் காலங்கள்' மலரிலிருந்து (கதாபாத்திரம்) விடைபெறுகிறேன். பல்வேறு வழிகளில் மலர் மீதான அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நானும் உங்களைப் போலவே மலரை மிஸ் செய்கிறேன். சீசன் 2 வெற்றி பெற வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரிடம் இது தொடர்பாகப் பேசினோம்.
"கடந்த மாதம் மார்ச் 15-ல் ஷூட் ஸ்டார்ட் பண்ணினாங்க. அந்த சமயத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாம இருந்துச்சு. அவங்க கேட்கும்போது என்னால ஷூட்டுக்குப் போக முடியல. எனக்காக அவங்களும் வெயிட் பண்ணிப் பார்த்தாங்க. காய்ச்சல் சரியாக டைம் எடுத்துச்சு. அவங்களுக்கும் ஷூட் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால வேற வழியில்லாம கேரக்டர் ரிப்ளேஸ்மென்ட் பண்ணிட்டாங்க. மலரை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த புராஜக்ட் முடிஞ்சாலும் சரி, ரிப்ளேஸ்மென்ட் ஆனாலும் சரி அந்தக் கேரக்டரை பர்சனலா நாம ரொம்பவே மிஸ் பண்ணுவோம். ஏன்னா, அந்தக் கேரக்டர் கூடவே நாம ரொம்ப நாள் பயணிச்சிருப்போம். அப்படிங்கிறப்ப சட்டுன்னு மாத்திக்க முடியாது. அது ரொம்பவே கஷ்டமா இருக்கும்.

முன்னாடி நெகட்டிவ் லீட் கதாபாத்திரம் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கப்புறமா நான் பண்ணின முதல் பாசிட்டிவ் ரோல் மலர் டீச்சர்தான். பாசிட்டிவ் ரோல் பண்ணனுங்கிற ஒரே ஒரு காரணத்தால மட்டும்தான் மலர் டீச்சர் கேரக்டரை செலக்ட் பண்ணினேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமா லவ் அண்ட் சப்போர்ட் இப்ப வரைக்கும் கிடைச்சிட்டு இருக்கு. நிறைய மிஸ்ஸிங் நோட்ஸ் வந்துட்டு இருக்கு. வேற வழியில்லாமதான் அந்தக் கேரக்டரிலிருந்து விலக வேண்டியதாகிடுச்சு. சீசன் 2 நமக்கானது இல்லைங்கிற மைண்ட்செட்டுக்கு வந்துட்டேன். அடுத்து பண்ணப் போகிற புராஜக்ட் கண்டிப்பா நெகட்டிவ் ரோல் கிடையாது. அதை ரொம்ப உறுதியா சொல்லுவேன். சீக்கிரமே அடுத்த புராஜக்ட் பற்றி அப்டேட் பண்றேன்!" என்றார்.
சங்கீதாவிற்குப் பதிலாக பர்வீன் என்பவர் மலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.