Published:Updated:

''தீபக்கை மறுபடியும் பார்த்ததும் பயமும் தயக்கமும் வந்துடுச்சு'' - 'தென்றல்' தீபக் - ஸ்ருதி கலாட்டா!

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

விகடன் யூ-டியூப் சேனலில் இப்போது `தென்றல்' சீரியல் மறு ஒளிபரப்பாகி வருகிறது. `தென்றல்' சீரியல் வாயிலாக மக்கள் மனதைக் கொள்ளையடித்த தமிழ் - குட்டிமா கேரக்டர்களைச் சந்திக்க வைத்தோம்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அழகு' சீரியலில் ரேவதியின் மூத்த மருமகளாக சுதா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார், ஸ்ருதி. தொகுப்பாளர் தீபக் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

விகடன் யூ-டியூப் சேனலில் இப்போது 'தென்றல்' சீரியல் மறு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மூலமாக மக்கள் மனதைக் கொள்ளையடித்த தமிழ் - குட்டிமா கேரக்டர்களை மீண்டும் சந்திக்க வைத்தால் எப்படி இருக்கும் என்கிற ஐடியாவை நடைமுறைப்படுத்தினோம்.

ஏழ்மையில் இருந்தாலும், படிப்பின் மூலம் தனக்கு மதிப்பு கிடைக்கும் என்பதற்காகப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் பெண். சித்தி கொடுமை ஒருபக்கம் இருந்தாலும், குடும்பத்திற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிற பெண். அவளின் குணம் பிடித்துப்போய் பல பிரச்னைகளுக்கிடையில் அவரைத் திருமணம் செய்யும் ஹீரோ.

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

எந்த அளவுக்கு பிறந்த வீட்டில் கஷ்டப்பட்டாளோ, அதே அளவுக்கு சந்தோஷத்தை இரட்டிப்பாகக் கொடுக்கும் கணவன். ஐந்து வருடத்திற்குப் பிறகு சந்தோஷமாக தாய்மை அடைவதோடு, 'தென்றல்' சீரியல் சுபம் சுபம் சுபம். இடையிடையே சித்தி கொடுமைகள், வயதானவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் வீட்டார்... இப்படிப் பல ட்விஸ்டுகளைக் கொண்டதாக இருந்தது, 'தென்றல்'. இந்த சீரியலில் தமிழ் - குட்டிமா கேரக்டரில் நடித்த தீபக், ஸ்ருதி இருவரையும் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள 'டான்ஸ் கஃபே'வில் சந்திக்க வைத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''முதல் நாள் போட்டோ ஷூட்டிற்காக இரண்டு பேரையும் நெருக்கமா நிற்கச் சொன்னார் டைரக்டர், குமரன் சார். அப்போ தயங்கித் தயங்கி நின்னேன். அந்த சீரியல் முடிந்து நான்கு வருடம் கழித்து, இப்போதான் நேரில் சந்திக்கிறோம்.

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

இப்போ போட்டோவுக்கு நிற்கும்போது அதே தயக்கம் வருது. பழைய விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போச்சு. பல வருடங்களுக்குப் பிறகு எங்களை சந்திக்க வைத்த உங்களுக்கு என் நன்றிகளும், பேரன்புகளும்!'' என தீபக்கைப் பார்த்து சிரித்தவாரே ஆரம்பிக்கிறார், ஸ்ருதி.

'' 'தென்றல்' சீரியல் க்ளைமாக்ஸ் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோரும் உட்காந்து அழுதுட்டோம். ஏன்னா, அத்தனை வருடமும் ஒரு ஃபேமிலி மாதிரிதான் இருந்தோம். எப்போவுமே ஷூட்டிங் முடிந்து ஜாலியா வீட்டுக்குப் போவோம். ஆனால், அன்று அப்படி இல்லை.

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

நாளை முதல் 'தென்றல்' ஷூட்டிங் இல்லைனு நினைக்கும்போது மனசு பாரமா இருந்தது. தினமும், இரவு 9 மணிக்கு 'தென்றல்' இசை ஒலிக்கும். அடுத்த வாரம் திங்கள் கிழமையிலிருந்து மியூசிக் கேட்காதே... என நினைக்கும்போது, கஷ்டமா இருந்தது. எல்லோருமே அப்செட்டா இருந்தோம். இரண்டு முறை 'சிறந்த ஜோடி'யா நானும், இவரும் விருது வாங்கினோம். சன் டிவி சார்பாக 'சிறந்த தேவதை' விருது நான் வாங்கினேன்.

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

தீபக் ஆரம்பத்தில் கடகடன்னு பேசுவார். ஒரு தடவை, இரண்டு தடவை ஸ்கிரிப்டைப் படிச்சாலே போதும். அப்படியே பேசி நடிப்பார். அதேநேரம் எனக்கும் சொல்லிக்கொடுப்பார். என்னை எப்போவும் 'வா, போ, லூசு'னுதான் கூப்பிடுவார். அவருடைய மனைவிகிட்டேயும் போன்ல பேசுவேன். அடிக்கடி நேரில் பார்த்துப் பேசுவோம். எப்போ மறுபடியும் 'தென்றல் 2' எடுப்பீங்கன்னு பலபேர் கேட்கிறாங்க. நானும் அதுக்காகத்தான் வெயிட்டிங்!'' என ஸ்ருதி சிரிக்க, தீபக் தொடர்கிறார்.

''தென்றல்' சீரியலுக்குப் பிறகு பொண்ணுங்ககிட்ட பொறுமையா இருக்கணும். பொண்டாட்டிக்கிட்ட அணுசரித்துப் போகணும்னு நினைச்சேன்''
தீபக்

''எனக்கு 2008-ஆம் ஆண்டு கல்யாணம் ஆச்சு. 2009 டிசம்பர்ல 'தென்றல்' சீரியலை ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ஸ்பாட் கலகலப்பா இருக்கும். அந்த சீரியல் வெற்றிக்குக் காரணம், இயக்குநர் குமரன் சார்தான். எந்த ஒரு சீனும், பிரேமும் ரிப்பீட் ஆகக்கூடாதுனு கவனமா இருப்பார். ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமா எடுப்பார். 'நீ எப்போவும் கடகடன்னு வேகமாதானே பேசுவ...

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

அது நடிப்பிலும் இருக்கணும். ஏன்னா, நேர்ல நீ எப்படி இருக்கியோ, அதுதான் சீரியல்ல தெரியணும்'னு சொல்வார், குமரன் சார். அந்த சீரியல்ல என்னோட ஓப்பனிங் சீனை என்னால மறக்கவே முடியாது. அசோக் பில்லர் ரோட்டோரமா எடுத்த காட்சி அது. எதைப் பற்றியும் கவலைப்படாத கேரக்டர். பைக்ல போய்க்கிட்டு இருக்கும்போது, போலீஸ்கிட்ட மாட்டிப்பேன். என் ஃப்ரெண்ட்டுக்கு போன் பண்ணிப் பேசுவேன். `பிளாட்ஃபார்மோட முனையில நின்னுக்கிட்டு போன்ல பேசணும்'னு அந்தக் காட்சியை விளக்கினார். ஏன்னு யோசிச்சேன். எதிலும் கேர்லெஸா இருக்கிற ஒருத்தன் எப்படி இருப்பானோ, அப்படி இருந்தது அந்தக் காட்சியை டிவியில பார்க்கும்போது.

''சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது என் அப்பா தவறிட்டார். குமரன் சார் உட்பட பலரும் அப்பாவுடைய இறுதி சடங்கிற்கு வந்திருந்தாங்க.''
ஸ்ருதி

அதேபோல, ஸ்ருதியை காலேஜ்ல வந்து தூக்கிட்டுப் போறது செம்ம சீன். அதில் சண்டை போடுறவங்க என் பைக் சாவியை எடுத்திடுவாங்க. காரில் போகும்போது அந்தச் சாவியை ஸ்ருதி தூக்கி வீசுவாங்க. ஓடி வந்து நான் பிடிக்கணும். அதுக்கு நிறைய டேக் தேவைப்பட்டது.

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

கிட்டத்தட்ட ஒரு சினிமாவுக்கு மெனக்கெடுற அளவுக்கு மெனக்கெட்டார். அந்தக் காட்சியை இயக்குநர் பாக்யராஜ் சார் பாராட்டியிருந்தார். படத்துல வர்ற மாதிரி, சீரியலுக்கும் ஃபைட் சீன் வெச்சவர், குமரன் சார். `தென்றல்' சீரியலுக்குப் பிறகு பொண்ணுங்ககிட்ட பொறுமையா இருக்கணும். பொண்டாட்டியிடம் அனுசரித்துப் போகணும்னு தோணுச்சு.'' என்றவரைத் தொடர்கிறார், ஸ்ருதி.

தீபக் - ஸ்ருதி
தீபக் - ஸ்ருதி

''நான் அவருடைய பிறந்த நாளுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லுவேன். ஆனா அவரு என் பிறந்த நாளை மறந்துடுவார்' என செல்லக் கோபம் காட்டுகிறார் ஸ்ருதி. குமரன் சார்கிட்ட அடிக்கடிப் பேசுவேன்.

சாதனா, சூசன், ஹேமா என அதில் நடித்தவர்கள் எப்பவாவது மீட் பண்ணுவோம். மறுபடியும், கெட்டூ கெதர் வைக்கலாம்னு இருக்கோம். ஒவ்வொருத்தருடைய ஷூட்டிங் டைமும் சரிபட்டு வருதானு பார்ப்போம். குட்டிம்மா, தமிழ் அவ்வளவு பேமஸ் ஆச்சு. ஷூட்டிங் போகும்போது எதிரில் வருபவர்களில் சிலர், 'என் கணவர் இப்போ மாறிட்டார். என்னை நல்லாப் பார்த்துக்கிறார்னு சொல்லுவாங்க. என்னை ஒவ்வொரு இடத்திலும் குமரன் சார்தான் மாற்றினார். நான் ரொம்ப கேஷூவலாக நடந்துப் போனேன். 'பொண்ணு மாதிரி நடந்து வா'னு சொல்லுவார். இப்போது வரைக்கும் அவருடைய கைடன்ஸ் தான் எனக்கு கைக்கொடுக்குது''. என்றார் ஸ்ருதி.

பேட்டி முடியும்போது இரண்டு பேரும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி, சின்ன சின்ன குறும்புகளை செய்தனர். மீண்டும் தென்றல் சீரியலின் ஒரு எபிசோட் பார்த்த மாதிரி இருந்தது அன்று.

அடுத்த கட்டுரைக்கு