சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“எங்களுக்குள்ள ஐ லவ் யூ சொல்லிக்க தேவையில்லாமப் போச்சு!”

ஸ்ரேயா - சித்து
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரேயா - சித்து

அந்த நாள் நல்லா ஞாபகம் இருக்கு. காலை 8:30 மணி இருக்கும். என்னைக் கூட்டிட்டுப் போன கார் நேரா அந்த ஹோட்டலுக்குப் போச்சு.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

``ஸ்ரேயா `மங்களூர்ல் எங்க வீட்டுல தீபாவளியைக் கொண்டாலாம்'னாங்க. `திருவண்ணாமலையில் எங்க வீட்டுல கொண்டாடலாம்'னேன் நான். குழப்பம் வந்தது. கடைசியில `சரி, யாருக்கும் வேண்டாம். ரெண்டு வீட்டுக்காரங்களையும் சென்னைக்கு வரவழைச்சு அங்க கொண்டாடுவோம்'னு முடிவாகியிருக்கு. அதனால எங்க தலை தீபாவளி சென்னையிலதான்'' உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சித்து.

`திருமணம்' சீரியலில் தன்னுடன் ஜோடியாக‌ நடித்த ஸ்ரேயா அஞ்சனையே நிஜ வாழ்க்கையிலும் துணையாக ஏற்றுக் கொண்டவர் சித்து. ``தலை தீபாவளி கொண்டாட இருக்கிற இந்த நல்ல தருணத்தில், முதன்முதலாக ஸ்ரேயாவைப் பார்த்த தருணத்தை நினைவுகூர முடியுமா?' எனக் கேட்டோம்..

``அந்த நிமிடம் அற்புதமான நிமிடம். `பார்த்த நொடியில காதல்'னு சொல்வாங்களே, அதையெல்லாம் என்னால நிச்சயமாக் கேலி, கிண்டல் செய்ய முடியாது. ஏன்னா, நான் அனுபவப்பட்டிருக்கேன்.

`திருமணம்' சீரியலுக்காக நான் தேர்வாகிட்டேன். ஹீரோயினுக்குப் பலபேர்கிட்ட ஆடிஷன் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா யாரும் உறுதியாகலை. இந்த நிலையில ஸ்ரேயாவை போட்டோஸ் பார்த்துட்டு செலக்ட் பண்ணியிருக்காங்க. ஹீரோ, ஹீரோயின் சேர்ந்து டெஸ்ட் ஷூட் பண்ணணும்னு சொல்லி என்னை வரச் சொன்னாங்க. வடபழனி பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரில் ஒரு ஹோட்டல்ல அவங்க தங்கி இருந்தாங்க.

அந்த நாள் நல்லா ஞாபகம் இருக்கு. காலை 8:30 மணி இருக்கும். என்னைக் கூட்டிட்டுப் போன கார் நேரா அந்த ஹோட்டலுக்குப் போச்சு. காரில் நான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்க, ஹோட்டல் முகப்புல முதன்முதலா அந்த முகத்தைப் பார்க்கிறேன். ஹேண்ட் பேக்குடன் கையில் ஒரு பார்சலை வெச்சுக்கிட்டு யூனிட் ஆட்கள், கார் டிரைவர்னு ஒவ்வொருத்தரா பார்த்து `சாப்பிடுறீங்களா'னு கேட்டு பார்சலை நீட்டிக்கிட்டு இருக்காங்க‌.

“எங்களுக்குள்ள ஐ லவ் யூ சொல்லிக்க தேவையில்லாமப் போச்சு!”

அந்த ஒரு செகண்ட் `யார்ரா இந்தப் புள்ளை'ன்னு அந்தக் காட்சியை நான் மெய்ம்மறந்து பார்த்துக்கிட்டிருக்கேன். விசாரிச்சா, அவங்களுக்கு சாப்பிட வாங்கிட்டு வந்திருக்காங்க. அதுக்குள்ள எங்க கார் அங்க போயிட்டதால, `ஸ்பாட்டுல போய் பார்த்துக்கலாம்'னு அந்த டிபன் பார்சலை யாருக்காவது கொடுத்துடலாம்னு கேட்டிருக்காங்க.

சொல்லப்போனா, உண்மையிலேயே அந்தக் காட்சி என்னை என்னவோ பண்ணுச்சுனுதான் சொல்வேன். எங்க காதலுக்கான முதல் விதை அந்த நொடியாக்கூட இருக்கலாம்'' என்றவர், அதே உற்சாகத்துடன் தொடர்ந்தார்...

``டெஸ்ட் ஷூட் முடிஞ்சு, சீரியலும் தொடங்கிடுச்சு. ஆனாலும்கூட மேற்கொண்டு அவங்ககூட ரொம்ப பேசாதவனாகவே இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்ல பிரேக்கில்கூட அவ்வளவா பேசிக்காமத்தான் இருந்தோம்.

அடிப்படையில எனக்குக் கொஞ்சம் கூச்சம் இருந்தது. அவங்களுமே தானா வலிய வந்து பேச யோசிச்சிருக்காங்க. சேனல் தரப்புல அவங்ககிட்டபோய் `இப்படி இருந்தா என்னம்மா அர்த்தம்... ஹீரோ, ஹீரோயின் நல்லாப் பேசி, ஜாலியா இருந்தாத்தான் ஒரு கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகி, அது சீரியல் ரேட்டிங் வாங்க உதவியா இருக்கும்'னு சொல்லியிருக்காங்க. அதுக்கு, `அவர் பேசினாத்தானேங்க என்னால பேச முடியும்'னு சொன்னதா கேள்விப்பட்டேன்'' என்கிறார்.

“எங்களுக்குள்ள ஐ லவ் யூ சொல்லிக்க தேவையில்லாமப் போச்சு!”

``பிறகு எப்பதான் பேசுனீங்க, யார் முதன்முதலில் புரப்போஸ் செய்தது?’’

``யாருமே புரப்போஸ் செய்யலை. பேசத் தொடங்கி கொஞ்ச நாள்லயே ரெண்டு பேருக்குமிடையில நல்ல புரிதல் உண்டாகிடுச்சு. அதனால `ஐ லவ் யூ' சொல்லிக்கணும்னு ஃபார்மாலிட்டி யெல்லாம் தேவையில்லாமப்போச்சு. அதெல்லாம் இல்லாமலேயே ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற மாதிரியே தோண ஆரம்பிச்சிடுச்சு. அதனால மேற்கொண்டு வீட்டுல பெரியவங்ககிட்டப் பேசிடலாம்னு ரெண்டு பேருமே முடிவு செய்துட்டோம்.''

``வேறு வேறு மாநிலம், வேறு வேறு மொழி... எப்படிச் சமாளிக்கறீங்க?’’

``அவங்களுடைய தாய் மொழி துளு. நான் மங்களூரு போயிருந்தப்ப அவங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்பா வந்திருந்தாங்க. அவங்களுக்குள் என்னவோ பேசிக்கிட்டிருந்தாங்க. தோழிகள் கூட்டம் போன பிறகு `என்ன பேசனீங்க'னு கேட்டேன். `நல்ல பையனத்தான் புடிச்சிட்டு வந்திருக்க'னு சொல்லிக் கலாய்ச்சாங்கனு சொன்னாங்க. கேட்டுக்கிட்டேன், அவ்ளோதான். இப்பவும் அவங்க வீட்டுல இருந்து யாராவது வந்தா அவங்க பேசிக்கிட்டிருந்தா வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன். ஏன்னா எனக்கு துளு துளியளவும் தெரியாது. அதேநேரம், ஸ்ரேயா தமிழ் நல்லாவே பேசுவாங்க, புரியும்.''

“எங்களுக்குள்ள ஐ லவ் யூ சொல்லிக்க தேவையில்லாமப் போச்சு!”

``பிரைம் டைமில் ஆளுக்கொரு சீரியல் பண்ணிக்கிட்டிருக்கீங்க. எப்போ படம் பண்ணப் போறீங்க?''

சித்துவை முந்திக் கொண்டு பதிலளித்தார் ஸ்ரேயா... ``தமிழில் நான் ஒரு படத்தில் சின்னதா ஒரு கேரக்டர் பண்ணியிருக்கேன். தொடர்ந்து வாய்ப்பு வந்தா பண்ணணும். ஆனா, சித்து தமிழ் சினிமாவுல ஹீரோவா பண்ணணும்கிறதுதான் என் ஆசை. எங்கோ ஒரு கிராமத்துல இருந்து வந்து டி.வி-யில‌ இவ்வளவு உயரத்துக்கு வந்ததுக்குப் பின்னாடி அவருடைய பெரிய உழைப்பு இருக்கு. அது எனக்குத் தெரியும். அதேபோல தமிழ் சினிமா மீது அவருக்கு எந்த அளவுக்குக் காதல் இருக்குன்னும், அதுக்கு எப்படியெல்லாம் முயற்சி செய்துக்கிட்டிருக்கார்ங்கிறதும் எனக்கு மட்டும்தான் முழுசாத் தெரியும். அவருடைய அந்த ஆசை நிறைவேறணும்'' என்றபடி கணவரைக் காதலுடன் ஸ்ரேயா பார்த்தார்.

அவர்களுக்குத் தொந்தரவாக இருக்க விரும்பாமல், வாழ்த்துச் சொல்லி நகர்ந்தோம்.