Published:Updated:

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை... ஆரிக்கும் பாலாஜிக்கும் சமாதானம்?! பிக்பாஸ் – நாள் 92

பிக்பாஸ் – நாள் 92

அதிக மதிப்பெண்கள் பெறுபவர், மக்கள் வாக்குகள் குறைவாகப் பெற்றாலும் கூட இந்த வார எவிக்ஷன் பிராசஸில் இருந்து விடுவிக்கப்பட்டு இறுதி வாரத்திற்குத் தகுதியாவார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 92

Published:Updated:

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை... ஆரிக்கும் பாலாஜிக்கும் சமாதானம்?! பிக்பாஸ் – நாள் 92

அதிக மதிப்பெண்கள் பெறுபவர், மக்கள் வாக்குகள் குறைவாகப் பெற்றாலும் கூட இந்த வார எவிக்ஷன் பிராசஸில் இருந்து விடுவிக்கப்பட்டு இறுதி வாரத்திற்குத் தகுதியாவார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 92

பிக்பாஸ் – நாள் 92
இறுதிப் போட்டி நெருங்கிக் கொண்டிருப்பதால் போட்டியாளர்களை பிக்பாஸ் உத்வேகப்படுத்துகிறாராம். எனவே ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ பாடலைப் போட்டார். என்ன புண்ணியம்? ஆரிக்கும் பாலாவிற்கும் மாமியார் – மருமகள் போல சண்டை போடவே நேரம் சரியாக இருக்கிறது.

‘நாட்டாமை’ திரைப்படத்தில் தன் தந்தையான செந்திலை, ‘டேய் இங்க வாடா’ என்று கூப்பிடுவார் கவுண்டமணி. செந்தில் அருகே வந்தவுடன் ‘ச்சீ போடா’ என்பார். மறுபடியும் கூப்பிடுவார்.

பாலாஜி, ஆரியை ஹேண்டில் செய்யும் விதம் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறது. முதலில் ஆரியை அழைத்து ‘மன்னிச்சுடுங்க பிரதர்’ என்றுதான் விவாதத்தை தொடங்குகிறார். அப்படியே விவாதம் வளர்கிற போது ‘'அசிங்கமா கேப்பேன். நீயெல்லாம் பெரிய மனுஷனா?'’ என்கிறார். பாவம் ஆரி. செந்தில் மாதிரியே அநாவசியமாக அவ்வப்போது அசிங்கப்படுகிறார்.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

ஆனால், ஆரிக்குத்தான் இதனால் மைலேஜ் கூடும். யாரிடம் உரையாடினாலும் தன் தரப்பு நியாயங்களையும் எதிர் தரப்பு பிழைகளையும் மீண்டும் மீண்டும் பதிவு செய்ய இந்த உரையாடல்களை ஆரி பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் அவருக்குத்தான் ப்ளஸ். இந்த எளிய தர்க்கம் பாலாஜிக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் ஆரியுடன் உரையாடலுக்கு அமர்வது ஆரிக்குத்தான் சாதகத்தை ஏற்படுத்துகிறது.

காலைப் பாடல் முடிந்த கையோடு பாலாஜியை தனியாக ஒதுக்கிய ரியோ, "கமல் சார் வந்த நாள்ல நீ பேசின முறை கொஞ்சம் அராஜகமா இருந்த மாதிரி இருந்தது. பார்த்துக்கோ... அவருக்கு மரியாதைக் குறைவு ஏற்படுற மாதிரி சபைல நீ நடந்துடக் கூடாது” என்று உபதேசித்தார். உண்மைதான். வழக்கமாக ‘கரகாட்டக்காரன்’ செந்தில் முகமூடியை அணியும் பாலாஜி, கடந்த வார விசாரணை சபையில் மட்டும் நம்பியார் மாதிரி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, "தெரியலை... புரியலை" என்று ஆரி மீதான வெறுப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தார். கமலுக்கே சற்று கோபம் வந்து ‘வசூல்ராஜா’ பாஷையை பேச வேண்டியிருந்தது.

“ஆரி கிட்ட வாயைக் கொடுத்து மாட்டிக்காதே” என்பதும் ரியோ சொன்ன இன்னொரு அருமையான உபதேசம். மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைத்தான் ரியோவும் யோசித்திருக்க வேண்டும்.

கிச்சன் ஏரியாவில் ரம்யாவிற்கும் ரியோவிற்கும் ஒரு மினி வாக்குவாதம் நடந்தது. (பாலாஜி – ஆரி உரையாடலை ஒப்பிடும் போது மற்றவர்கள் பேசுவது எல்லாமே ‘மினி’தான்). ரியோவின் புகைப்படம் வந்த சமயத்தில் ரம்யா அதற்கான காரணம் சொல்லும்போது ‘மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் மேலோட்டமாக இன்னொரு காரணம் சொல்வார்’ என்று சொல்லப்பட்டதை இப்போது ரியோ விசாரித்துக் கொண்டிருந்தார்.

“கிச்சன் டீமில் என்னைச் சேர்ப்பதற்கு முன் என்னைக் கலந்தாலோசிக்கவில்லையே?” என்கிற பழைய சம்பவத்தை விளக்கம் தரும் போது தோண்டியெடுத்தார் ரம்யா. (ஆரியின் சகவாசத்தால் ஏற்படும் விபத்து போல). “அனிதாவை ஏன் மாத்தினேன்னா, அங்க உங்க கூட செட் ஆகுமான்னு தெரியல... அவங்க உங்களுக்கு சரியா கத்துக் கொடுக்க மாட்டாங்கன்னு தோணுச்சு” என்று ரியோ விளக்கம் கொடுக்க, "ஓகே... இப்ப சரியா காரணத்தைச் சொன்னீங்கள்ல... அதை அப்பவே சொல்லியிருக்கலாமே? இதைத்தான் சொல்றேன்... வெளில வேற ஒரு காரணம் சொல்றீங்கன்னு... அனிதாவை மாத்தினதால எனக்குத்தானே கிச்சன் டீம்ல சுமை கூடும்?” என்று ரம்யா மடக்க ‘கடவுளே... இதுக்கு ஆரியே தேவலை’ என்று ரியோ குழம்பியிருக்கக்கூடும்.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

இதைப் போல ஆரிக்கான நாமினேட் காரணத்தையும் இருவரும் ஆராய, "நான் எது சொன்னாலும் பிரச்னை வரத்தான் செய்யுது... அப்புறம் என்ன?” என்று நொந்து போனார் ரியோ.

இன்னொரு பக்கம் பாலாவும் ஆரியும் ஒரு நெடும் விவாதத்திற்கு அமர்ந்தார்கள். 'ஆரியை அநாவசியமாக பகைத்துக் கொண்டால் தன் பெயர்தான் கெடுகிறது. ஃபைனல் நேரத்துல இதெல்லாம் வேணாமே. பேசாம மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆயிடுவோம்' என்று பாலாஜியின் புத்தி உள்ளூற எச்சரித்திருக்க வேண்டும். ஆனால் பேச வரும் நேரத்தில் ஆத்திரத்தின் பிடியில் விழுந்து சறுக்கிவிடுகிறார்.

"அண்ணே... மன்னிச்சிடுங்கண்ணே... தம்பி ஏதோ கோபத்துல பேசிட்டேன்" என்றபடி வந்து அமர்ந்தார் பாலாஜி. ‘வா செல்லம். நானும் ஒரு பொசிஷன்ல உக்காந்துக்கறேன்’ என்று தயாரானார் ஆரி. “நீங்க சொன்ன சில வார்த்தைகள் என்னைக் கோபப்படுத்திடுச்சி. அதனால்தான் நானும் பதிலுக்கு ஆத்திரமா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க" என்றார் பாலாஜி.

“முன்னாடி கிச்சன் டீம்ல வேலை அதிகம்னு சொல்லுவீங்க. இப்ப ஹவுஸ் கீப்பிங்லதான் வேலை ஜாஸ்தின்னு மாத்திட்டீங்க... நான் இப்ப ஹவுஸ்கீப்பிங் டீம்ல இருக்கிறதால அப்படி மாத்திட்டீங்களா?” என்று கேட்டு கேபியை உதாரணம் காட்ட "நான் அதுக்கும் இதுக்கும் சொன்ன காரணம் வேற. கேபியை அங்க சும்மா கொஞ்சம் வேலை செய்ய விட்டுட்டு கணக்கு காட்டிட்டு இருந்தாங்க. இப்ப ஆளுங்க குறைஞ்சாலும் வீடு அளவு அப்படியேதான் இருக்கு” என்று பொறுமையாக விளக்க ஆரம்பித்தார் ஆரி. ஆனால் பாலாஜிக்கு அது புரியவில்லை.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

ஆரிக்கும் பாலாஜிக்கும் நடந்த இந்த விவாதத்தை நீங்கள் மீண்டும் பார்த்தீர்கள் என்றால் நன்றாகவே தெரியும். பாலாஜியின் ஒவ்வொரு கேள்விக்கும் அறிவு சார்ந்து தர்க்கப்பூர்வமான பதில்களை ஆரி மிகத் தெளிவாகவே முன்வைக்கிறார். இந்த வீட்டில் யாருக்கு ஐக்யூ அதிகம் இருக்கும் என்று பார்த்தால் அது நிச்சயம் ஆரிக்குத்தான் அதிகம். பாலாஜியும் சாதுர்யம் உள்ளவர் என்றாலும் ஆரியிடன் ஒப்பிடும் போது குறைவு. மேலும் பாலாஜியிடம் உள்ள ஆத்திர உணர்ச்சி அவரின் அறிவை மழுப்பி விடுகிறது.

எந்தவொரு மிருகக்கூட்டத்திலும் சமமான அளவு பலம் கொண்ட இரண்டு மிருகங்கள் இருந்தால் தலைமைப்பதவிக்காக அதிகாரப் போட்டி தொடர்ந்து நடந்தபடியேதான் இருக்கும். இதில் பலமுள்ளதே இறுதியில் வெல்லும். ஆரிக்கும் பாலாஜிக்கும் நிகழ்ந்து கொண்டிருப்பது இதுதான். ‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்கிற பொன்மொழியும் இதைத்தான் குறிக்கிறது. ஆரி அறிவு சார்ந்து இயங்கும் விலங்கு. ஆனால் பாலாஜியோ அவ்வப்போது ஆத்திரத்தினால் சறுக்கி விடும் விலங்கு.

'ஊரே பார்க்குது’ டாப்பிக்கை மறுபடியும் எடுத்தார் பாலாஜி. இதனால் ஷிவானியின் பெயர்தான் மறுபடியும் அடிபடும் என்கிற எளிய லாஜிக் கூட பாலாஜிக்குப் புரியவில்லை. இதற்காக "உங்க பொண்ணா இருந்தா அப்படிச் சொல்வீங்களா?” என்று பாலாஜி கேட்டது அநியாயம். ஆரியின் மகள் வந்த போது பாலாஜி தூக்கிக் கொஞ்சியிருக்கிறார். அந்த சிறிய பெண்ணை மேற்கோள் காட்டி இப்படி கேட்டது முறையானதல்ல.

“என் பொண்ணா ஷிவானியை நெனச்சதாலதான் அப்படிச் சொன்னேன். ஆனா நான் எதுக்கு அந்த வார்த்தையைச் சொன்னேன்ற காரணத்தை ஷிவானி கிட்டயே விளக்கி அவங்க கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். திரும்பத் திரும்ப இதைக் கிளறாதே. முன்னாடியும் நான் உன்னை எச்சரிச்சேன். நீதான் என்னை தூண்டி விட்ட" என்று சரியான வாதத்தை முன்வைத்தார் ஆரி.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

ஆனால் ஆரியும் கோபத்தில் சறுக்கி விழுகிறவர்தான். "உனக்கு முன்னாடியே உலகத்தைப் பார்த்தவன்டா. உன் வயசு என்ன... என் வயசு என்ன... வயசுக்கு மரியாதை கொடுக்க கத்துக்க..." என்று சூடானார் ஆரி. பாலாஜியை ஏகவசனத்தில் பேசுவதின் மூலம் பாலாஜியின் கோபம் அதிகமாவதுதான் நடக்கும். ஒருவேளை ஆரியின் உத்தியே அதுதான் போலிருக்கிறது. 'உங்கள் ஆலோசனையை கனிவாகச் சொல்லுங்கள்’ என்று நேற்று ஆரிக்கு கமல் தந்த உபதேசத்தை அவர் இப்போது காற்றில் பறக்க விட்டுவிட்டார்.

"திரும்பவும் அப்படிப் பேசினா அவன்... இவன்னுதான் பேசுவேன்" என்று பாலாஜி பதிலுக்கு எகிறினார். அப்போது கேபி அங்கு வர, ஆரி கேபியைப் பற்றி சொன்னதை இப்போது போட்டுக் கொடுக்க முயன்றார் பாலாஜி. "லவ் பெட்ல இருந்து நாலு ஓட்டு வரும்னு நீ சொல்லலையா” என்று கோபமான ஆரி, "நீங்க பல விஷயங்களை மறந்துடறீங்க தம்பி... எனக்கு ஞாபகம் இருக்கு” என்று சொல்ல "உங்களுக்கு அதானே வேலை" என்றபடி கிளம்பிச் சென்றார் பாலாஜி.

இன்னொரு பக்கம் ரியோவிடம் ரம்யாவைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார் கேபி. புதிதாக வந்திருக்கும் அண்ணியைப் பற்றி தன் அண்ணனிடம் கோள்மூட்டும் நாத்தனார் மாதிரியே கேபியைப் பார்க்கும் போது அந்தச் சமயத்தில் தெரிந்தது. "ஆரியை நாமினேட் பண்ண நீ சொன்ன காரணங்கள் பற்றி அவளுக்கு என்ன பிரச்னை? இது அவ சம்பந்தப்பட்டது கிடையாது. அவளுக்குப் போய் ஏன் பதில் சொல்லிட்டு இருக்க?” என்று ரியோவிற்கு ஸ்க்ரூ ஏற்றிவிட்டார் கேபி.

நேராக சோமிடம் சென்ற பாலாஜி, ஆரியுடன் நடந்த விவாதத்தைப் பற்றி சொல்லி அனத்த, ரியோ சொன்னதையே சோமுவும் வழிமொழிந்தார். "அவன் கிட்ட போய் வாயைக் கொடுக்காதே... பதில் வராது. தேவையில்லாம போகாதே!”

இந்த சீஸனின் கடைசி நாமினேஷன் பிராசஸ் துவங்கியது. இந்த முறை கேப்டனையும் நாமினேட் செய்யலாமாம். ஆளாளுக்கு யோசித்து கொலைவெறியுடன் காரணங்களைச் சொல்லி நாமினேட் செய்து மூச்சு வாங்க அமர்ந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

“முடிச்சிட்டீங்களா தம்பிங்களா... இது கடைசி நாமினேஷன்றதால எல்லோருமே நாமினேட் ஆகியிருக்கீங்க...” என்று பிக்பாஸ் சொன்னவுடன், ‘'பிக்பாஸ்.. உங்க திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா?'' என்று மக்கள் கதறித் தீர்த்து, "ஆனா... இதை எதிர்பார்த்தோம்’ என்று உள்ளூற முனகினார்கள். இந்த மாற்றத்தால் அதிகம் மகிழ்ச்சியடைந்தவர் ஆரி என்பதாகவே பட்டது. ஃபைனல் நேரத்தில் தன் பெயர் நாமினேட் பட்டியலில் வந்திருக்க வேண்டாமே என்கிற கவலை அவரது முகத்தில் முதலில் தெரிந்தது. இப்போது ஆரி ஹேப்பி அண்ணாச்சி!

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் என்று போட்டியாளர்களின் முழுப்பெயரை பிக்பாஸ் சொன்னது வித்தியாசமாக இருந்தது. கேபியின் முழுப்பெயர் என்ன என்பதே அப்போதுதான் நமக்குத் தெரிந்தது. மக்கள் இதற்காக ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள்.

"அவங்க சம்பந்தமேயில்லாத இடத்துல ஆஜர் ஆகி கருத்து சொல்வாங்க... யார் கூட அப்ப அவங்க க்ளோஸா இருக்காங்களோ. அவங்களுக்கு சாதகமாக பேசுவாங்க. பல சமயங்கள்ல ஆரிக்கு எதிரா பேசியிருக்காங்க" என்பதுதான் ரம்யாவை நாமினேட் செய்த போது கேபி முன்வைத்த காரணம். கேபி இதைச் சொல்லும் போதே ரம்யாவின் முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன.

எனவே நாமினேஷன் ரவுண்ட் முடிந்த பிறகு “இதைப் பற்றி விளக்க முடியுமா?” என்று கேட்க "ஒவ்வொரு சமயத்துலயும் ஒவ்வொருத்தர் கூட க்ளோஸா இருப்பீங்க. இப்ப பாலா” என்று கேபி சொல்ல "என்னது பாலா எனக்கு ஃபிரண்டா?” என்று சர்காஸ்டிக் புன்னகையை வீசினார் ரம்யா.

பாலாஜிக்குப் பொழுது போகவில்லையென்றால் ஆரியைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்பார் போலிருக்கிறது. அரைமணி நேரம் டைம் பாஸ் ஆகும். எனவே இப்போதும் ஆரியை தனியாக அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்க, மறுபடியும் ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா' பாடலை இருவரும் பாடினார்கள். (யப்பா முடியலை. விட்டுருங்கடா!).
பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

'ஆரி ப்ரோ என்னை பயமுறுத்தறாரு... அன்னிக்கு பாத்ரூம் கதவு பின்னாடி ஒளிஞ்சு நின்னு ‘பூச்சி’ன்னு கத்தினாரு... நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?’ என்கிற ரேஞ்சிற்கு கேபியிடம் அனத்திக் கொண்டிருந்தார் ரியோ. அர்ச்சனா சென்று விட்ட பிறகு கேபியைத்தான் மினி அர்ச்சனாவாக ரியோவும் சோமுவும் பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

"மத்தவங்ககூட சிரிச்சு பேசுங்க பாஸ்-ன்னு அவர் நல்லதுக்குத்தான் சொன்னேன். ‘குழந்தை வரும் போது கூட நான் டாஸ்க்ல இருந்து விலகலை. ஆனா என் அர்ப்பணிப்பை யாரும் இங்க கண்டுக்கலை’ன்னு சொல்றாரு. அப்ப என்ன ஆகும்? மக்கள் முன்னாடி என் பேர்தானே கெடும்?. அவர் மேல கோபமா வருது... ஒவ்வொருத்தருக்கும் இப்படித்தான் பண்றாரு...” என்று ரியோவின் புலம்பல் நீண்டது.

TICKET TO FINALE பற்றிய அறிவிப்பு வந்தது. (ஹப்பாடா!) இதில் பல போட்டிகள் நடத்தப்படும். போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாடி மதிப்பெண்கள் பெறுவார்கள். இறுதியில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர், மக்கள் வாக்குகள் குறைவாகப் பெற்றாலும் கூட இந்த வார எவிக்ஷன் பிராசஸில் இருந்து விடுவிக்கப்பட்டு இறுதி வாரத்திற்குத் தகுதியாவார். அடுத்த நிலையில் இருப்பவர்கள் வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்நோக்குவார்கள்.
பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

முதல் போட்டி: தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்றை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதன் கீழே ஆணிகள் பொருத்திய பீடம் இருக்கும். கையை மடக்கக்கூடாது. எடை தாங்காமல் கை கீழே இறங்கினால் ஆணியில் பட்டு பலூன் சிதறி விடும். முதலில் தோற்பவர் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவார்.

இது உடல் பலம் சார்ந்த போட்டி என்பதால் பெண் போட்டியாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். ‘அய்யோ... கை வலிக்குதே’ என்று ரம்யாவும் கேபியும் அனத்தினார்கள். இந்த ரணகளத்திலும் “தும்மல் வந்தா என்ன பண்றது?” என்று மொக்கை ஜோக் போட்டார் ரம்யா. முதலில் தவற விட்டவர் ஷிவானி. ஆரி வழக்கம் போல் பக்கத்திலிருந்த கேபியைக் கண்காணித்து எச்சரித்துக் கொண்டேயிருந்தார். எடை தாங்காமல் பிறகு கேபியும் தோற்று விட்டார்.

கைவலி தாங்காமல் ரம்யாவின் அனத்தல் அதிகரிக்கவே “முடியலைன்னா போட்டுட்டு போ” என்று ரியோ ஜாலியாக கலாய்க்க ‘சரி...’ என்பது போல் பலூனை போட்டு ஆணியில் உடைத்தார் ரம்யா. "அடிப்பாவி... போடுன்னா போட்டுடுவியா?” என்று அலறினார் ரியோ. ரம்யா வலி பொறுக்க முடியாமல்தான் போட்டிருக்க வேண்டும் ‘அவன் போடுன்னா போட்டுடுவாம்மா... டிவியை ஆன் பண்ணுன்னு சொல்லணும்’ என்கிற ‘எந்திரன்’ படத்தின் காட்சிதான் நினைவிற்கு வந்தது.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

சோம் சமாளிக்க முடியாமல் விதம் விதமான கோணங்களில் உடலை வளைக்க மற்றவர்கள் அவரை எச்சரித்தார்கள். "பெண் போட்டியாளர்களே. இதைக் கவனியுங்கள். யாராவது கையை மடக்கினாலோ, இறக்கினாலோ தகுதியற்றவர்களாகி விடுவார்கள்" என்று நினைவுப்படுத்தினார் ரியோ.

இதில் ஆரிதான் ஜெயிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவருடைய பலூனும் உடைந்தது. சோமு நிறைய தவறுகள் செய்து கொண்டிருந்த பிறகு அவரும் பலூனை தவற விட்டார். மிகத்திறமையாக சமாளித்துக் கொண்டிருந்த ரியோவும் ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் தோற்றுப் போக இறுதி வரை ஸ்டெடியாக நின்று கொண்டிருந்த பாலாஜி முதல் இடத்தைப் பெற்றார்.
பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

ஆனால், இதற்கான மதிப்பெண்களை பலகையில் பொருத்தும்போது நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு ஆரியும் சோமுவும் சூடாக விவாதித்தார்கள். ஆரியை விடவும் சோம் அதிக தவறுகள் செய்ததால் அவர்தான் குறைந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பது என் கருத்து. ஆனால், சோம் தன் பிழைகளை ஒப்புக் கொள்ளாமல் சாதித்தார். பதிலுக்கு ஆரியின் கை மடங்கியது என்று விவாதித்தார். இதனால் ஆரி சூடாக, ‘ஓகே நான் ஒப்புக்கறேன்’ என்று பின்னடைந்தார் சோம். பிறகு விதிப்புத்தகத்தையும் படித்துவிட்டு தன் குறைகளை ஒப்புக் கொண்டார்.

ஆரி இத்தோடு விட்டிருக்கலாம். மதிப்பெண் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு தன்மான உணர்ச்சி பொங்க நிலைகளை மீண்டும் மாற்றியமைக்க, பிறகு கேபி அதில் தலையிட... இப்படியாக ‘செத்து செத்து’ விளையாடினார்கள்.

போட்டி 2 தொடங்கியது. இந்தப் போட்டிக்கான ஐடியாக்களை யோசித்தவர் எவரோ, அவர் ‘இம்சை அரசன்’ படத்தின் திரைக்கதையிலும் பங்களித்திருப்பார் போலிருக்கிறது. அத்தனை விநோதமான அயிட்டங்களை யோசித்திருக்கிறார். இதன்படி போட்டியாளர்கள் ஆள் உயர பலகைக்குள் நிற்க வேண்டும். அவரின் தலைக்கும் ஃபிரேமின் உயரத்திற்கும் உள்ள இடைவெளிக்குள் ஒரு மரத்துண்டைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இறுதி வரை மரத்துண்டை தலையால் தாங்குபவரே வெற்றியாளர்.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

தனது உயரத்திற்கும் ஃபிரேமின் எல்லைக்கும் இடையில் கச்சிதமாகப் பொருந்துகிற மரத்துண்டை தேர்ந்தெடுப்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனால் ‘என் ஹைட்டுக்கு எதுவுமே செட் ஆகலை’ என்று புலம்பிக் கொண்டிருந்த ரம்யா இதில் வெற்றி பெற்றது ஆச்சர்யம்.

கேபி, பாலாஜி, சோம், ஆரி, ஷிவானி, ரியோ, ரம்யா என்கிற வரிசையில் பலகைத் துண்டுகள் கீழே விழுந்தன. இதில் அதிகபட்சமாக 38 நிமிடங்கள் 51 விநாடிகள் தாங்கிப்பிடித்து கின்னஸ் சாதனை செய்தார் ரம்யா. உடல்பலம் சார்ந்த போட்டியில் ஒரு பெண் வென்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதற்கு முன்பாக 30 நிமிடங்களுக்கும் மேலாக மரத்துண்டை சமாளித்த ரியோ... இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92

"மரத்துண்டை இப்படி தலையில இடிச்சிட்டுக்கிட்டு நிக்கறமே... அதனால மூளைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாதா?” என்று வழக்கம் போல் ரணகளத்திலும் மொக்கை போட ரம்யா தவறவில்லை. "அதெல்லாம் இருக்கறவங்கதான் கவலைப்படணும்” என்று பதிலுக்கு கலாய்த்தார் ரியோ. ஒருவேளை ரியோ இது போன்ற கொனஷ்டைகளைச் செய்யாமல் இருந்திருந்தால் முதல் இடத்திற்கு வந்திருப்பாரோ… என்னமோ!

ஆக... இரண்டு போட்டிகளின் முடிவில் மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் இடத்தில் இருந்தவர் ரியோ. சிவனும் சக்தியும் சமமான மதிப்பெண்களைப் பெற்று அங்கேயும் போட்டியில் இருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 92
பிக்பாஸ் – நாள் 92
"போட்டியாளர்கள் இனிதான் பல கடுமையான சவால்களை சந்திக்கப் போகிறார்கள். இதில் அவர்களின் தனித்திறமைகள் வெளிப்படும்" என்கிற வாய்ஸ் ஓவரோடு நிகழ்ச்சி முடிவடைந்தது. (அதாவது நாளைக்குத்தான் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை விடறாங்களாம். மறக்காம வந்துடுங்க ஷாமியோவ்..!)