Published:Updated:

"டாப் 5 ஹீரோயின்ஸ் இவங்கதான்!" - `டாப் 10' சுரேஷ் குமார்

சுரேஷ் குமார்
சுரேஷ் குமார்

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் எனக்கு பிடித்தமாதிரி எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. ''

சன் தொலைக்காட்சியில் டாப் 10 நிகழ்ச்சியை 22 வருடங்களாகத் தொகுத்து வழங்கி வருகிறார் சுரேஷ் குமார். ஒரு நிகழ்ச்சியை ஒரே தொகுப்பாளர் 1000 எபிஸோட்டுகளுக்கு மேல் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருவதெல்லாம் அசாத்தியமான ஒன்று. 90ஸ் கிட்ஸ்களின் ஹீரோ, கோட்டு சூட்டுடன் திரையில் தோன்றிய முதல் தமிழ் தொகுப்பாளர்... இப்படி நிறைய தனித்துவம் இருக்கிறது இவருக்கு.

மருத்துவத்துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ள சுரேஷ், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கல்லூரி, ஷூட் என பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும் டாக்டர் சுரேஷ் குமார் விகடன் வாசகர்களுடன் ஃபேஸ்புக் லைவ்வில் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

சன் டிவி வாய்ப்பு பற்றிச் சொல்லுங்க?

சன் டிவி வாய்ப்பு என்று சொல்ல முடியாது. அது தற்செயலாக நடந்த விஷயம். நான் தூர்தர்ஷனில் இரண்டு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். அந்தச் சமயம் சன் டிவி-யில் ஒரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் நடப்பதாக நண்பர் வாயிலாகத் தெரிய வந்தது. அந்த ஆடிஷனில் கலந்துகொண்டேன். தேர்வும் ஆனேன். அது செய்தி வாசிப்பாளருக்கான ஆடிஷன். சன் டிவி-யில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தேன். இரண்டு மாதங்கள் கடந்தது. ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு ஆடிஷன் நடப்பதாக என்னிடம் சொன்னார்கள். அதிலும் பங்குபெற்றேன். டாப் 10 நிகழ்ச்சிக்கான ஆடிஷன் அது. இயக்குநர் என்னைத் தேர்வு செய்தார். அதன் பின்னர் செய்தி வாசிப்பாளர் பணியோடு ஒவ்வொரு வாரமும் டாப் 10 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினேன். என்னைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கவிடுவார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால் இரண்டு வாரங்கள் கடந்ததும் என் பர்ஃபாமென்ஸ் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை மனநிறைவோடு இந்தப் பணியைச் செய்து வருகிறேன்.

சின்னத்திரையில் தொகுப்பாளர், கல்லூரியில் பேராசிரியர் எப்படி டைம் மேனேஜ் பண்றீங்க?

எனக்கு இது கடினமாக இல்லை. இது ஒரு சின்ன வேலைதான். 24 மணி நேரம் எனக்கு போதுமானதா இருக்கு. ஒரு நாள் முழுவதும் கால்ஷீட் கொடுத்துவிட்டு பிஸியாகவே இருக்கும் வேலை கிடையாது இது. வார இறுதி நாள்களில்தான் பெரும்பாலும் ஷூட்டிங் இருக்கும்.

உங்க ஸ்டைல், தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் நீங்களாக உருவாக்கிக் கொண்டதா? அல்லது தயாரிப்பாளர் சொல்லிக் கொடுத்ததா?

எனக்கு டாப் 10 மூவீஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தபோது, எனக்கு முன்னால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் எப்படி கையாண்டார் என்பதை எல்லாம் நான் பார்க்கவேயில்லை. அப்படி அந்த நிகழ்ச்சிகளை பார்த்திருந்தால் அவரின் சாயல் எனக்கு வந்திருக்கும். ஆனால் என்னிடம் ஸ்கிரிப்ட் கொடுத்தவுடன் என் ஸ்டைலில் நான் தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சியில் `சோஃபாவில் அமரும்போது கால்மீது கால்போட்டு உட்காருங்க’ என்று மட்டும் தயாரிப்பாளர் சொன்னார். மற்றவை நானாக உருவாக்கிக் கொண்டதுதான்.

சுரேஷ் குமார்
சுரேஷ் குமார்

உங்க ஃபிட்னஸ் ரகசியம்?

தினமும் ஒன்றரை மணி நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வேன். சில மணி நேரம் பூஜையில் அமர்ந்து தியானம் செய்வேன். காபி டீ போன்றவற்றைத் தொடமாட்டேன். இவ்வளவுதான்.

சமீபத்தில் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் எனக்குப் பிடித்தமாதிரி எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. வெளியாகும் படங்களுக்கு ரேட்டிங் கொடுக்கிறோம். ஆனால், என் மனதுக்கு நெருக்கமான திரைப்படங்கள் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

படங்களில் பணத்தை போட்டு, திரும்பவும் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கியுள்ளது. மக்களுக்குத் தேவையான திரைப்படங்கள் பெரிதாக வருவதில்லை.
சுரேஷ் குமார்

இந்த 22 வருடங்களில் சினிமா எப்படி மாறியிருக்கு?

நான் சினிமா பார்க்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து கணக்கிட்டால் 30 வருடங்கள் வரும். அதாவது மூன்று தசாப்தங்கள். சிறிய வயதில் இருந்தே திரைப்படங்களை ரசித்துப் பார்ப்பேன். கறுப்பு வெள்ளை காலகட்டத்திலிருந்து இன்று தொழில்நுட்பம் எங்கோ சென்றுவிட்டது. நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயங்களை இன்றைய தொழில்நுட்பம் சாத்தியப்படுத்துகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் திரைத்துறைக்கு நிறையா பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், கன்டென்ட் பஞ்சம் வந்துவிட்டது. புதிதாக யோசித்துப் படமெடுக்க யாருக்கும் தைரியம் இல்லை. படங்களில் பணத்தை போட்டு, திரும்பவும் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கியுள்ளது. மக்களுக்குத் தவையான திரைப்படங்கள் பெரிதாக வருவதில்லை.

இப்போது இருக்கும் யூடியூப் ரிவியூவர்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

யூடியூபில் விமர்சனம் செய்பவர்கள் என்று தனியாகச் சொல்ல விரும்பவில்லை. டாப் 10 நிகழ்ச்சிக்கு முன்பில் இருந்தே நிறையா பத்திரிகைகள் திரைவிமர்சனம் எழுதி வருகின்றன. நான் அனைவருக்குமே சொல்வது என்னவென்றால். ஒரு படத்தை விமர்சனம் செய்வதற்கு முன்பு தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். விமர்சனம் செய்வது நம் ஜனநாயக கடமை. ஆனால் அப்படி விமர்சனம் செய்வதற்கு முன்பு நாம் நம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் விமர்சகர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் நெகட்டிவ் விஷயங்களைப் பெரிதாகப் பேசுவதைத் தவிர்க்கலாம். எல்லா திரைப்படங்களிலும் பிளஸ் மைனஸ் இருக்கும். அதைக் கொஞ்சம் நாசுக்காகச் சொல்ல வேண்டும்.

சுரேஷ் குமார்
சுரேஷ் குமார்
டாப் 10 நிகழ்ச்சி, சன் டிவி

மறக்க முடியாத டாப் 10 நிகழ்ச்சி?

இரண்டு மூன்று எபிஸோட் என்னால் மறக்கவே முடியாது. 500வது எபிஸோட் நிறையவே கொண்டாட்டமா பண்ணினோம். செட்டே கலகலத்தது. அதற்கு அடுத்தபடியா சீனியர் ஆர்டிஸ்ட், தலைவர்கள் இறந்துபோகும் போது அந்த வாரத்துக்கான எபிஸோடில் நான் கால் மீது கால் போட்டு உட்காரமாட்டேன். ஜெய்சங்கர், மனோரமா ஆகியோர் இறந்தபோனபோது அந்த வாரத்துக்கான எபிஸோடில் உள்ளுக்குள் அவ்வளவு சோகத்தை வைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் வணக்கம் சொன்னது மறக்க முடியாது.

ப்ளூசட்டை மாறன் போன்றவர்களின் விமர்சனம் பார்த்திருக்கிறீர்களா?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் பார்த்தது இல்லை. அவர்களுக்கென்று தனி ஸ்டைல் இருக்கும். அவர்களின் தாக்கம் எனக்கு வந்துவிடக் கூடாது.

உங்களால் மறக்க முடியாத ரசிகர்?

நிறைய பேர் இருக்காங்க. நிறையா நினைவுகள் இருக்கு. நான் ஒரு விஷயத்தில் ரொம்ப லக்கி. தினமும் ஒரு ரசிகர் கூட்டத்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. அவர்கள்தான் என் மாணவர்கள்.

எனக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் பிடிக்கும்.
சுரேஷ் குமார்

பிடித்த இசையமைப்பாளர்?

இளையராஜா சார் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் இசையை தேன் சொட்டச் சொட்ட காதுகளில் கேட்டுத்தான் வளர்ந்தேன். அதன் பின்னர் டி.இமான் பாடல்கள் அனைத்துமே பிடிக்கும். திறமையான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மிகவும் பிடிக்கும்.

சினிமா வாய்ப்புகள் வந்திருக்குமே?

நிறையா வந்தது. ஆனால் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் வரவில்லை. எனக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் பிடிக்கும். இப்போதெல்லாம் ஹீரோவை விட வில்லன்கள்தான் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். எனவே அப்படி ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

ரோல் மாடல்?

நான் என்னுடைய நெருக்கடியான சூழல்களில் சிவாஜி கணேசனை நினைத்துக் கொள்வேன். அதே போன்று கலைஞரும் எனக்கு ரோல் மாடல். இருவரின் நினைவுகளும் எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். கலைஞரின் தமிழ்ப் புலமை மீது அதீத பிரியம். சின்னத்திரையில் எனக்கு மிகவும் பிடித்தவர் விஜய் ஆதிராஜ். அவருடைய ஸ்டைல், தன்னம்பிக்கை எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

டாப் 5 தமிழ் வில்லன்ஸ்?

நம்பியார்தான் என்றுமே டாப்; ரொம்ப டெரரான வில்லன்ஸ் சத்யராஜ், பிரகாஷ்ராஜ்; தனக்கென தனி ஸ்டைலோடு அலட்டல் இல்லாமல் மிரட்டும் ரகுவரன்; அழகான வில்லன் அரவிந்த் சாமி.

டாப் 10 நிகழ்ச்சியில் திரைப்படங்களை ஒரே வார்த்தையில் அழகாக விமர்சிப்பீர்கள். அது உங்களின் சொந்த கற்பனையா?

திரைப்படங்களை பட்டியலிடவும் விமர்சிக்கவும் விமர்சனக் குழு என்று தனியாக இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் தரவுகள் வைத்துத்தான் நான் நிகழ்ச்சியில் பேசுவேன்.

சுரேஷ் குமார்
சுரேஷ் குமார்
"என்ன என் படத்தை இப்படி பண்ணிட்டியே’’ என்று கேட்பார்கள்.
சுரேஷ் குமார்

பிடித்த அரசியல்வாதி?

மு.க.ஸ்டாலின் பிடிக்கும். நல்ல மனிதர் அவர்.

பிடித்த நடிகர்?

அன்றும் கமல்ஹாசன் இன்றும் கமல்ஹாசன். என்றும் கமல்ஹாசன்!

டாப் 10 நிகழ்ச்சிக்கு மிரட்டல்கள் வந்திருக்கா?

நிறையா வந்திருக்கு. அன்பாகத் தோள் மீது கைபோட்டு கொண்டு மிரட்டுவார்கள். ``என்ன என் படத்தை இப்படி பண்ணிட்டியே’’ என்று கேட்பார்கள். சில ஹீரோ, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அப்படிக் கேட்பார்கள். நானும் அவர்களுக்கு நட்பாகவே பதில் சொல்லி அனுப்பிவிடுவேன்.

அரசியலுக்கு வருவீங்களா?

கண்டிப்பா வருவேன். நல்ல கொள்கைகள் இருக்கக்கூடிய ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பேன்.

டாப் 5 நடிகைகள்?

அமலா, ராதா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், அமலா பால்.

அடுத்த கட்டுரைக்கு