Published:Updated:

விகடன் TV: “மத்தவங்க தூங்கும்போது வீடியோ எடுப்பேன்!”

திவ்யா கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்யா கணேஷ்

கலகலப்பா வேலையைச் செய்கிற யூனிட் எங்களுடையது. எனக்குப் பொதுவா ஒரு பழக்கம் உண்டு.

‘பாக்யலட்சுமி’ சீரியல்ல கேக் செய்கிற மாதிரி ஒரு சீன். அந்த சீன்ல நடிச்சதுல இருந்தே சோஷியல் மீடியாவுல அப்படியொரு ட்ரோல். இப்பவும் சிலர் ‘என்னங்க, உண்மையிலேயே சமைக்கத் தெரியாதா’ன்னு கேக்கறாங்க. (நிஜத்தில் ஓரளவு நன்றாகவே சமைப்பாராம்) ‘கல்யாணத்துக்குப் பிறகு என்னங்க செய்வீங்க’ன்னு கொஞ்சம் பேர் அக்கறைப்படறாங்க. ‘பரவால்லங்க, நானே கல்யாணம் பண்ணிக்கறேன், எனக்கு நல்லாச் சமைக்கத் தெரியும்’னு சீரியஸாகவே ஒருத்தர் புரொப்போஸ் பண்றார். சீரியல் என்னவெல்லாம் பண்ணுது பாருங்க...”

‘சீரியல் எப்படிப் போயிட்டிருக்கு’ எனக் கேட்டதும், படபடவெனப் பேசத் தொடங்குகிறார் திவ்யா கணேஷ்.

``சட்டம் படிக்கணும்னுதானே சென்னை வந்தீங்க, எப்படி சீரியலுக்குள் வந்தீங்க?’’

‘‘சொந்த ஊர் கமுதி. அப்பா அம்மா இப்ப ராமநாதபுரத்துல இருக்காங்க. கீழக்கரையில இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடிச்சுட்டு லா படிக்கணும்னுதான் சென்னை வந்தேன். அக்கா வீட்டுல தங்கியிருந்து படிக்கறதா ஐடியா. அக்கா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல சில விஸ்காம் ஸ்டூடண்ட்ஸ் தங்கியிருந்து படிச்சாங்க. அவங்க புராஜெக்டுக்காக ஷார்ட் பிலிம் எடுக்கணும். போறப்ப வர்றப்ப என்னைப் பார்த்திருப்பாங்கபோல. நேரா அக்காகிட்ட வந்து, ‘உங்க சிஸ்டர் அழகா இருக்காங்களே, எங்களுக்காக ஷார்ட் பிலிம் நடிச்சுத் தருவாங்களா’ன்னு கேட்டாங்க. எனக்கு எந்த ஐடியாவும் அப்ப இல்லை. ஆனா அக்காதான் ‘வர்ற வாய்ப்பைப் பயன்படுத்தலாமே’ன்னு நடிக்கச் சொன்னாங்க. அந்த ஷார்ட் பிலிம் பார்த்துட்டு உதவி இயக்குநர் ஒருத்தர் கேட்க, அப்படியே சீரியல் பக்கம் வந்துட்டேன். சன், விஜய், ஜீ தமிழ்னு எல்லா முன்னணி சேனல்லயும் ஒரு ரவுண்ட் வந்தாச்சு. செகண்ட் லீடு ரோல், நெகட்டிவ் ரோல்லாம்கூடப் பண்ணியாச்சு. `நாயகி’ தெலுங்குல நான்தான் பண்ணினேன். ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக் கூட நடிச்சிட்டேன். இப்ப ஜெனிஃபர் கேரக்டர் (பாக்யலட்சுமி தொடர்) செமயா ரீச் ஆகிட்டிருக்கு. எப்படியோ, ‘கமுதி’யில இருக்கிற எங்க குலசாமி அருள்ல கரியர் அது பாட்டுக்குப் போயிட்டிருக்கு...’’

விகடன் TV: “மத்தவங்க தூங்கும்போது வீடியோ எடுப்பேன்!”

`` ‘பாக்யலட்சுமி’ ஷூட்டிங் அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘கலகலப்பா வேலையைச் செய்கிற யூனிட் எங்களுடையது. எனக்குப் பொதுவா ஒரு பழக்கம் உண்டு. ஷூட்டிங் பிரேக்ல யாராவது அசந்து தூங்கிட்டிருந்தா, அவங்களுக்குத் தெரியாம அதை வீடியோ எடுத்துடுவேன். திடீர்னு ஒருநாள் அவங்களுக்கே சர்ப்ரைஸா அந்த வீடியோவை வேற யார் மூலமாச்சும் அனுப்பி வச்சிடுவேன். ஜெர்க் ஆவாங்க. என்ன ஒண்ணு... நான்தான் பண்றேன்னு இப்ப கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால நான் ஸ்பாட்ல இருந்தா இப்பெல்லாம் தூங்கவே மாட்டாங்க.

இந்த மாதிரி கலகலன்னு போயிட்டிருந்ததை எல்லாம் ‘அது ஒரு காலம்’னு சொல்ல வச்சிடுச்சு கொரோனா. என்னைக்கு இது வந்ததோ அப்ப இருந்து யூனிட்ல கொண்டாட்டத்துக்குத் திண்டாட்டமாகிடுச்சு. இன்னைக்கு ஒருத்தருக்கொருத்தர் பக்கத்துல நின்னு பேசவே பயப்படுகிற மாதிரி ஆகிடுச்சு. லாக்டௌன், ஷூட்டிங்கிற்குத் தடை, அதனால் லொகேஷனை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்னு இப்ப ஏகப் பிரச்னைகள். எப்படா நிலைமை சரியாகி, பழைய சந்தோஷம் வரும்னு தெரியலை.’’

``சினிமா வாய்ப்புகள்?’’

‘‘இது வழக்கமா பலர் சொன்ன குற்றச்சாட்டுகள்தான். ஆனா நானும் அதைத்தான் சொல்ல வேண்டியிருக்கு. தமிழ்ப் பொண்ணுங்களுக்கு யாருங்க வாய்ப்பு தர்றாங்க? பெங்களூருக்கோ, கேரளாவுக்கோ போய் ஒரு வருஷம் இருந்துட்டுப் பெயரை மாத்திட்டு வந்தா ஒருவேளை வாய்ப்புகள் மளமளன்னு கிடைக்குமோ என்னவோ? யார்மீதும் பொறாமையில இதைச் சொல்லலை. ஆனா இங்க அப்படித்தானே நடக்குது? படங்கள் நிறைய பண்ணணும்னு ஆசை இருக்கு. வாய்ப்புதான் இதுவரை சரியா அமையலை. ‘இந்தியன் 2’-ல் சின்னதா ஒரு ரோல் பண்ணியிருக்கேன்.’’

``கடைசியில அந்தச் சட்டப்படிப்பை முடிச்சீங்களா, இல்லையா?’’

‘‘சில விஸ்காம் பசங்க மூலமே வாழ்க்கை வேற ரூட்டுக்குத் திரும்பிட்ட பிறகு சட்டம் பத்தி யோசிக்க முடியாமப்போயிடுச்சு. ஆனா அது என் கனவா இன்னும் இருக்கு. பிரைவேட்டாக் கூட சட்டம் படிக்க முடியும்னு சிலர் சொல்லக் கேட்டிருக்கேன். அதனால மறுபடியும் அந்த முயற்சியைத் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.’’