Published:Updated:

`நான் ஏமாத்தறவனா இருந்தா சிவகார்த்திகேயன் உதவுவாரா?' - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன்

சச்சின் சிவா

``மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்ன்னு சொன்னாலே இப்ப, `நீங்க, அந்த நாச்சியப்பன் பாத்திரக்கடைக் கோப்பையா'ன்னு எங்க எல்லோரையும் கேலி செய்றாங்க." - சச்சின் சிவா

Published:Updated:

`நான் ஏமாத்தறவனா இருந்தா சிவகார்த்திகேயன் உதவுவாரா?' - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன்

``மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்ன்னு சொன்னாலே இப்ப, `நீங்க, அந்த நாச்சியப்பன் பாத்திரக்கடைக் கோப்பையா'ன்னு எங்க எல்லோரையும் கேலி செய்றாங்க." - சச்சின் சிவா

சச்சின் சிவா
`மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் எனது தலைமையிலான டீம் பாகிஸ்தானை வென்றது' எனச் சொல்லி, அமைச்சரிலிருந்து முதலமைச்சர் வரை அத்தனை பேரையும் ஏமாற்றி பல்பு வாங்க வைத்த ராமநாதபுரம் வினோத் பாபு விவகாரம்தான் கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்.

மீம் கிரியேட்டர்கள் ஒருபுறம் வினோத்குமாரை வச்சுச் செய்ய, சமூக ஊடகமோ அரசு இவ்வளவு கவனக்குறைவாகவா இருக்குமென ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 12 மணி நேர வேலை, திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி என ஏகப்பட்ட பிரச்னைகளைக் கைவசம் வைத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்த விவகாரம் மேலும் வெல்லமாக ஆனது. அதேநேரம் 'இந்த விவகாரத்தால், உண்மையிலேயே கிரிக்கெட் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட  எண்ணற்ற மாற்றுத் திறனாளிகள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்கிறார், சின்னத்திரை நடிகரும் இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக, சமீபத்தில் நடந்த இலங்கை-இந்திய அணிகள் கலந்துகொண்ட போட்டிக்காக அட்வைசரி கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டவருமான நவீந்தர் மூர்த்தி. அவரிடம் பேசினோம்.

''மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில் ஒரு கால் ஊனமானவங்க, ஒரு கை ஊனமானவங்க, ரெண்டு கால்களுமே பாதிக்கப்பட்டவங்கன்னு தனித்தனி வகை இருக்கு. வினோத் பாபு மாதிரியான ஆட்கள் விளையாடறதை வீல் சேர் கிரிக்கெட்னு சொல்றாங்க.

மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டுக்குன்னே தமிழ்நாட்டுல நிறைய சங்கங்கள் இருக்கு. தங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஆதரிச்சு அங்கீகரிக்கணும்னு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இவங்க பலமுறை முறையிட்டுப் பார்த்தாங்க. ஆனா இதுவரை வாரியம் இவங்களை அங்கீகரிக்கலை. அதனால இந்தச் சங்கங்கள் இஷ்டத்துக்கு போட்டிகள் நடத்தறதும், வெளிநாடுகள்ல இருக்கிற இதே மாதிரியான அணிகளுடன் தொடர்பு கொண்டு அதன் மூலம் சர்வதேசப் போட்டிகள்ல ஆடறதும் தொடர்ந்திட்டிருக்கு.

நவீந்தர்
நவீந்தர்

இன்னைக்குத் தேதிக்கு ஆக்ராவைத் தலைமையிடமாகக் கொண்டு 'திவ்யாங் கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டு ஆஃப் இந்தியா'ன்னு ஒரு அமைப்பு இயங்கிட்டு வருது. இந்தியா முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்கான  கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிவது, போட்டிகளை நடத்துறதுன்னு இயங்கிட்டிருக்காங்க. இந்த அமைப்பு சார்பா இந்திய அணின்னு உருவாக்கப்பட்டிருக்கிற அணியின் கேப்டனாக தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா இருக்கிறார்.

சமீபத்துல இந்த அணி இலங்கையுடன் மோதிய போட்டி நடந்தது. அந்தப் போட்டிக்காக சென்னை வந்திருந்த இந்திய அணி, இங்க தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட சில அமைச்சர்களைச் சந்திச்சாங்க.

அந்தச் சமயத்துல இவங்க அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளையும் வச்சாங்க. ஆனா அது தொடர்பான செய்திகள் மீடியாக்கள்ல வருவதற்கு முன்னரே வினோத்குமார் அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலமா முதல்வரைச் சந்திச்சது, அவர் கொடுத்த பேட்டிகள்னு  வெளியாக, அந்தக் களேபரத்துல உண்மையாகவே இந்தக் கிரிக்கெட் தொடர்பா பல உதவிகள் தேவைப்படுகிற பல மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் காணாமப்போயிடுச்சு. இது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம்'' என்கிறார் நவீந்தர்.

சச்சின் சிவாவிடமும் நாம் பேசினோம்.

''வினோத் பாபு ஒரு ஏமாற்றுப்பேர்வழிங்கிற தகவலையே நாங்கதான் அரசுக்குத் தெரிவிச்சோம். ஆனா இப்ப என்னன்னா, 'மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்'னு சொன்னாலே, ''நீங்க, அந்த நாச்சியப்பன் பாத்திரக்கடைக் கோப்பையா'ன்னு எங்க எல்லோரையும் கேலி செய்றாங்க. யாரோ ஒருத்தர் செய்த தப்பால நிறைய பேர் பாதிக்கப்படறாங்க.

முதலமைச்சரை சந்தித்த வினோத் பாபு
முதலமைச்சரை சந்தித்த வினோத் பாபு

என்னை மாதிரி நிறைய பேர் இந்த விளையாட்டை முழுசா நேசிச்சிட்டிருக்கோம். என்னுடைய கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்துட்டு நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துட்டு வர்றார். நான் ஏமாத்தறவனா இருந்தா சிவகார்த்திகேயன் எனக்கு தொடர்ந்து உதவி செய்வாரா?'' என்கிற சச்சின் சிவா எங்களுடைய ஒரே கோரிக்கை ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனியா இருக்கற மாதிரி கிரிக்கெட்டிலும் கொண்டு வரணும்கிறதுதான். மத்திய மாநில அரசுகள். விளையாட்டு ஆர்வலர்கள், மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் இதுகுறித்துச் சிந்திச்சா நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார்.