
எதுவும் கிடைக்கலைன்னு சோர்ந்துபோவதை விட, கிடைச்சதை வச்சு திருப்தியா எப்படி வாழலாம்னு நினைப்பேன்.
90 களில் புகழ்பெற்ற பெரும்பாலான டி.வி தொடர்களில் நடித்தவர், விஜய் ஆதிராஜ். முன்னணி தொகுப்பாளராக வலம் வந்தவர் திடீரென சின்னத்திரையிலிருந்து விலகி வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். ஆனாலும், சின்னத்திரை அளவிற்கான வெற்றி, வெள்ளித்திரையில் அவருக்குக் கைகூடவில்லை. ‘புத்தகம்' என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் நம்மிடையே அறிமுகமானார்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாகத் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் அவரை ஒரு அழகிய காலைப் பொழுதில் சந்தித்தேன்.
``முப்பது வருட அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படியிருக்கு..?’’
‘‘1992-ல் கேமரா முன்னாடி வந்தேன். ‘நாம என்ன பண்ணினோம்’னு இத்தனை வருடங்கள் கழிச்சுத் திரும்பிப் பார்க்கும்போது அதில் நிறைய திருப்தியும், சில வருத்தங்களும் இருக்கு. லைஃப்ல எப்பவும் நான் ஒரு விஷயத்தைக் கடைப்பிடிப்பேன். எதுவும் கிடைக்கலைன்னு சோர்ந்துபோவதை விட, கிடைச்சதை வச்சு திருப்தியா எப்படி வாழலாம்னு நினைப்பேன். நெகட்டிவிட்டியை நம்ம கிட்ட நெருங்க விடாமல் பார்த்துக்கிட்டா போதும். லைஃப் சூப்பரா இருக்கும்.’’
``தொடர்ந்து பிரபலமா இருந்துவிட்டு, திடீரென சீரியலிலிருந்து விலகியதற்கு என்ன காரணம்..?’’
‘‘எப்போதும் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கணும். 2011, 12-ல் ‘செல்லமே' தொடரில் கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ணியிருந்தேன். என்னோட வளர்ச்சியில் ஏவிஎம், ராடன், சுஜாதா விஜயகுமார் மேடத்தின் தயாரிப்பு நிறுவனம் மூன்றுக்கும் பெரிய பங்கு உண்டு. அவங்களோட தயாரிப்பில் பல தொடர்களில் நடிச்சிருக்கேன். தொடர்ந்து பல சீரியல்களில் நடிச்சேன். ‘எந்த சேனலைப் பார்த்தாலும் நீங்கதான் இருக்கீங்க... உங்க முகத்தை அடிக்கடி பார்க்கிறோம்’ என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தேன். அதுக்காகவே, சீரியலிலிருந்து ஒதுங்கினேன்.’’
``ஆங்கராகவும் கலக்கிட்டு இருந்தீங்களே..?’’
‘‘ஆரம்பத்தில் இந்தி, கன்னடத்தில் நடிச்சிட்டு தமிழுக்குள் என்ட்ரி கொடுத்தேன். என்னோட தாய்மொழி தெலுங்கு. செகண்ட் லாங்குவேஜ் இந்தி. அதனால, எனக்கு தமிழ் தெரியாது. எதார்த்தமா, ஒரு நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு சோறு போடுற மொழியைப் பிழையில்லாம கத்துக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரி, கத்துக்கிட்டு வெறித்தனமா ஆங்கரிங் பண்ணினேன். ஃபேமஸா இருந்த டைம்ல நிறைய தெலுங்கு ஆஃபர்ஸ் வந்துச்சு. என்னால, சென்னையை விட்டுட்டுப் போக முடியல. நான் வாழ்ந்தது, இப்போ வாழ்ந்துட்டு இருக்கிறது தமிழ் மக்கள் கொடுத்த அன்பாலதான். அதனால தமிழ் மொழி சார்ந்து ஏதாவது பண்ணணும்னு மற்ற இடங்கள்ல வந்த வாய்ப்புகளை விட்டுட்டேன்.’’

``சில படங்களில் நடிச்சீங்க... தொடர்ந்து ஏன் நடிக்கலை?’’
‘‘என்னை ‘பொண்ணு வீட்டுக்காரன்' படத்தில் வாசு சார் நடிக்க வெச்சார். நல்ல கேரக்டர், ரொம்ப ரசிச்சுப் பண்ணினேன். அவருக்கும் என் நடிப்பு பிடிச்சிருந்தது. சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம் ரொம்பவே முக்கியம். நம்மால சினிமாவில் சாதிக்க முடியலையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கு. என்னைப் பொறுத்தவரை நடிகன், நடிகன்தான்! இவன் இந்த இனத்தைச் சார்ந்தவன்னு பிரிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். பெரும்பாலான இயக்குநர்கள், ‘இவர் ரொம்ப டி.வி-யில் வந்துட்டாரு... இவருக்கு எப்படி இந்தக் கேரக்டர் கொடுக்கிறது’ என்கிற தயக்கம் இருக்கோன்னு எனக்குத் தோணுது. டி.வி நடிகர்களை தமிழ்ப் படங்களில் என்கரேஜ் பண்ணலை என்கிற வருத்தம் இருக்கு. படத்தைப் பொறுத்தவரைக்கும் ஒட்டுமொத்தமா அது இயக்குநர்களோட பெர்ஸ்பெக்ட்டிவ்! இங்கேயும் நல்லா நடிக்கிறவங்க இருக்காங்க. ‘ஏற்கெனவே 1000 எபிசோடு நடிச்சிட்டாரு... அடுத்த சீரியலுக்கு அவர் எதுக்கு’ன்னு சீரியல் துறையில் யாரும் நினைக்கிறதில்லை. அங்கே, இயக்குநர்கள் எதிர்பார்க்கிற கேரக்டருக்குள் நாங்க உட்கார்ந்திடுவோம். பிறகு, படத்தில் நடிக்கும்போது மட்டும் எப்படி எங்களை சீரியல் நடிகனாக மக்கள் பார்ப்பாங்க. ராஜமெளலி தெலுங்கில் ஆயிரம் எபிசோடு சீரியல் டைரக்ட் பண்ணுனவர். இன்னைக்கு அவர் எந்த இடத்தில் இருக்கிறார்? சிவகார்த்திகேயனை மக்கள் எங்கேயும் ஆங்கரா பார்க்கலையே! நடிகராகத்தானே பார்த்தாங்க. அதுதானே வேணும்! இப்போ உலகம் மாறிடுச்சு. இன்றைய டிஜிட்டல் உலகம் நடிகர்களை மக்கள்கிட்ட நெருக்கமாகக் கொண்டு போயிடுச்சு. சின்னத்திரை நடிகர்கள், மேடை நாடகக் கலைஞர்கள்னு பிரிக்காதீங்க. அவங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!’’
``அடுத்த திட்டம்..?’’
‘‘எப்பவும் மீடியா சார்ந்த தேடல்கள் எனக்குள்ளே இருந்துட்டே இருக்கு. விளம்பரப் படங்கள் டைரக்ட் பண்ணினேன். என்னோட மனைவி ஈவன்ட் கம்பெனி வச்சிருக்காங்க. அதில், ஈவன்ட் புரொடியூசராகவும் இருக்கிறேன். ஒரு தனியார் சேனலில் கன்டென்ட் ஹெட் ஆக இருந்தேன். கொரோனா டைம்லதான் வேலையை விட்டேன். ‘புத்தகம்'னு ஒரு படம் இயக்கினேன். தப்பான டைம்ல படத்தை ரிலீஸ் பண்ணினதால பெரிய அளவில் ரீச் கிடைக்கலை. ஆனாலும், படத்திற்கு நல்ல விமர்சனங்கள்தான் வந்துச்சு. 2022-ல் என்னோட அடுத்த படத்தை இயக்கவிருக்கிறேன். அதுக்கான எல்லா வேலைகளும் முடிஞ்சது. சந்தோஷமா, எதையும் எதிர்பார்க்காம நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்கேன்!’’