சினிமா
பேட்டிகள்
ஆன்மிகம்
கட்டுரைகள்
Published:Updated:

“தீபாவளிக்கு வரும் புது சொந்தம்!” - வினோத் பாபு - சிந்து

வினோத் பாபு - சிந்து
பிரீமியம் ஸ்டோரி
News
வினோத் பாபு - சிந்து

டிவி

‘இந்த தீபாவளி பர்சனலா எங்களுக்கு ரொம்பவே ஃபேவரைட். ஏன்னா, எங்க வீட்டுக்குப் புதுச் சொந்தம் வரப்போகுது!’ என நெகிழ்கிறார், வினோத் பாபு. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ தொடரில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். தீபாவளியைப் புதுச் சொந்தத்துடன் கொண்டாடக் காத்திருக்கும் வினோத் பாபுவைச் சந்தித்தோம்.

‘ஒரு ஈவன்ட்டுக்கு பர்ஃபாம் பண்ணப் போயிருந்தப்போதான் சிந்துவைச் சந்திச்சேன். ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா பழக ஆரம்பிச்சோம். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தாலும் வெளிப்படையா எங்களுக்குள்ளே இருந்த காதலைச் சொல்லிக்கலை. ஒரு கட்டத்துக்கு மேல, வீட்ல எனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. பிறகு வேற வழி இல்லாம, நானே காதலைச் சொல்லிட்டேன்'' என்றதும், சிந்து தொடர்ந்தார்.

``கிட்டத்தட்ட மூணு வருஷம் ஃப்ரெண்ட்ஸா பழகினதால ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிதல் இருந்துச்சு. எப்படி நானே சொல்றதுன்னு பலமுறை யோசிச்ச விஷயத்தை அவர் சொல்லவும் ஹேப்பி ஆகிடுச்சு. வினோத், அவங்க அம்மாகிட்ட எங்க காதலைப் பத்திச் சொன்னப்போ, அவங்களுக்கு `நான் எப்படி இருப்பேன்... என் பேரு என்ன'ன்னுகூடத் தெரியாது. இருந்தாலும், `சரிப்பா, அவங்க வீட்ல வந்து பேசச் சொல்லு'ன்னு சொல்லிட்டாங்க. நான் ஒரு தனியார் கல்லூரியில் புரொபசரா இருக்கேன். எங்க ஃபேமிலியில் யாரும் மீடியா இல்லைங்கிறதால ஆரம்பத்துல சம்மதிக்கலை. அவங்களுக்குப் புரியவைக்க கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் டைம் ஆச்சு. அவங்களுக்கு வினோத்தைப் பிடிச்சிருந்தாலும், மீடியா பத்தின பயம் நிறையவே இருந்துச்சு. வேற வழியில்லாம எனக்காக 50 சதவிகிதம்தான் எங்க திருமணத்துக்கு சம்மதிச்சாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் வினோத் கேரக்டர் தெரிஞ்சதும்

தான் 100 சதவிகிதம் ஹேப்பியானாங்க. போன தலை தீபாவளி ஃபேமிலியோட சந்தோஷமா கொண்டாடினோம்'' என்றவரிடம், `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை சீசன் 2’ டைட்டில் வின்னரான தருணம் குறித்துக் கேட்கவும் வினோத் பாபு, ``அந்தக் கதையை நானே சொல்றேங்க'' என்றார்.

“தீபாவளிக்கு வரும் புது சொந்தம்!” - வினோத் பாபு - சிந்து

``கல்யாணப் பத்திரிகை வெக்கிறதுக்காக ஈ.வி.பி போயிருந்தோம். அங்கே புரொடக்‌ஷன் டீமில் உள்ளவங்க எங்களைப் பார்த்துட்டு, `நீங்க மிஸ்டர் & மிஸஸ் சின்னத்

திரையில் கலந்துக்கிறீங்களா'ன்னு கேட்டாங்க. உடனே ஓகே சொல்லிட்டோம். எங்க ரெண்டு பேருக்குமே கணவன், மனைவியா ஒரு கேம் விளையாடினா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருந்துச்சு. எவ்வளவுக்கு எவ்வளவு ஆசை இருந்துச்சோ, அவ்வளவுக்கு உழைப்பும் இருந்துச்சு. எல்லா ரவுண்டிலும் சீரியஸா விளையாடினோம். அந்தச் சமயத்தில் நாங்க என்ன பேசிக்கிட்டாலும் அது போட்டி சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். கடைசியில் எங்களுக்கு டைட்டில் கிடைக்கவும், பயங்கர ஹேப்பியாகிட்டோம்'' என்றவரை நிறுத்தி, சிந்து தொடர்ந்தார்.

``எனக்கு பர்சனலா அந்த ஷோ ரொம்பப் பிடிச்சிருந்தது. எப்போவாச்சும்தான் வினோத் என்கூட நேரம் செலவழிப்பார். அந்த ஷோ நடந்தப்போ ஷூட்டிங் டைம், பிராக்டீஸ் டைம், டிஸ்கஷன்னு எல்லா நேரமும் அவர் என் கூடவே இருந்தார். அதனால, அந்த ஷோ முடியும்போது எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு. நான் புரொபசர்ங்கிறதால எனக்கு அரசு விடுமுறை நாள்களிலெல்லாம் லீவு இருக்கும். ஆனா, அவருக்கு அப்பவும் ஷூட் இருக்கும். லவ் பண்ணும்போது எப்படி வீடியோ கால், போன் கால்னு பேசிட்டிருந்தோமோ, கல்யாணமாகியும் அப்படித்தான் இருக்கோம்'' என்றவரின் கரங்களை வினோத் பற்றிக்கொள்ள, சிந்து தொடர்ந்து பேசினார்.

``நான் மாசமானதுல இருந்து ஒரு நாளாவது அவர் என்கூட நேரம் செலவழிக்கணுங்கிற ஆசை அதிகமா இருக்கு. லாக்டௌன் டைம்ல அந்த ஆசை கொஞ்சம் நிறைவேறிச்சு. நானும் அவரும் சேர்ந்து பாப்பாவுக்கு முதல் டிரஸ் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். ஏழாவது மாசத்தில்தான் அந்த ஆசை நிறைவேறிச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு வளைகாப்பு நடந்துச்சு. அதுக்குக்கூட ஒரு விருந்தாளி மாதிரிதான் வந்துட்டுப் போனார்.

“தீபாவளிக்கு வரும் புது சொந்தம்!” - வினோத் பாபு - சிந்து

எப்போல்லாம் வீட்ல இருக்காரோ, அப்போ என்னென்ன சர்ப்ரைஸ் பண்ண முடியுமோ, அதைத் தவறாமப் பண்ணுவார். நாங்க மகாபலிபுரத்தில் ஒரு கடையில் கடல் உணவுகள் சாப்பிடுவோம். அந்தக் கடையில் திடீர்னு எனக்கு சாப்பிடணும்னு தோணுச்சு. வினோத் என்னைக் கூட்டிட்டுப் போகிறதுக்காகவே நைட் ஷூட்டிங் முடிச்சுட்டு, டப்பிங்கும் சேர்த்துப் பேசிட்டு, நடுசாமத்தில்தான் வீட்டுக்கே வந்தார். என்கிட்ட `டப்பிங்ல லேட் ஆகிடுச்சு’ன்னு மட்டும் சொன்னார். ஆனா, மறுநாள் சர்ப்ரைஸா என்னைக் கூட்டிட்டுப் போகிறதுக்காகவே அதெல்லாம் பண்ணியிருக்கார்னு தெரிஞ்சப்போ, ரொம்ப எமோஷனலா இருந்துச்சு'' என்றவரை, தனக்கே உரித்தான மிமிக்ரி செய்து சிரிக்கவைத்துவிட்டு, நம்மிடம் `கதைக்கலாமா' எனக் கேட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார் வினோத்.

``இப்போ ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் ஷூட்டிங்கும், ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோவும் போறதால, அதுக்கே நேரம் சரியா இருக்கு. சிந்துகூட இருக்க முடியலைங்கிற கவலை எனக்கும் இருக்கு. ஆனாலும், இப்போ குடும்பம் பெருசாகப்போகுது. என் குடும்பத்துக்காக இப்போ நான் ஓடித்தான் ஆகணும். பிரசவம் பொண்ணுங்களுக்கு மறு ஜென்மம்னு சொல்லுவாங்க. அந்தச் சமயத்தில், கூட நான் இருக்கணும்னு சிந்து ஆசைப்படுறா. டாக்டர்கிட்டகூட `வினோத் வந்தாத்தான் குழந்தை பெத்துப்பேன்'னு இப்போவே சொல்லிவெச்சுருக்கா. கண்டிப்பா அவ ஆசையை நிறைவேத்துவேன்'' எனக் கரம் பற்றிக்கொண்டு சொன்னார்.

“தீபாவளிக்கு வரும் புது சொந்தம்!” - வினோத் பாபு - சிந்து

``இந்த தீபாவளி எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதே மாதிரி உங்க எல்லோருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி அமைய எங்களுடைய வாழ்த்துகள்!''