Published:Updated:

``ஏர்போர்ட்டுக்குப் போனா விஜய் சேதுபதி இல்ல... டாக்ஸிக்கு காசும் இல்ல!" - மலேசியாவில் நடந்தது என்ன?

Vijay Sethupathi, Raj Kamal

சின்னத்திரை நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கலைநிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள் என நடிகர், நடிகைகள் குமுறல்!

``ஏர்போர்ட்டுக்குப் போனா விஜய் சேதுபதி இல்ல... டாக்ஸிக்கு காசும் இல்ல!" - மலேசியாவில் நடந்தது என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கலைநிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள் என நடிகர், நடிகைகள் குமுறல்!

Published:Updated:
Vijay Sethupathi, Raj Kamal

விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட `சின்னத்திரை நட்சத்திரக் கலைவிழா' மலேசியாவில் நேற்று முன் தினம் (28/9/19) நடைபெற்றது. இதில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் கலந்துகொண்டனர். சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் தேர்வான ரவிவர்மா, ``15 ஆண்டுகளுக்குப் பிறகு டிவி கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சி; இதிலிருந்து கிடைக்கும் வருவாய் சங்க நலனுக்குப் பயன்படுத்தப்படும்'’ எனச் சொல்லியிருந்த நிலையில், ஷோவில் கலந்து கொண்டு திரும்பிய பெரும்பாலான நடிகர், நடிகைகள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tamil television actors
Tamil television actors

``சோறு தண்ணிக்கு கஷ்டப்பட்டு, ரூம் கிடைக்காம, என்ன ஏதுனு கேட்க ஆளில்லாம மணிக்கணக்குல துயரத்தை அனுபவிச்சோம். ‘பேமென்ட்’ வாங்கிக்காம கலந்துகிட்ட ஆர்ட்டிஸ்ட்டுகளை நடத்துன விதம் ரொம்பவே மோசமா இருந்தது. ஷோவை வெச்சு ஒரு சிலர் பர்சனலா லாபம் அடைஞ்ச மாதிரி தெரியுது. மத்தபடி சங்கத்துக்கு அஞ்சு பைசா கூட வர வாய்ப்பில்லை’' எனக் குமுறுகிறார்கள் சிலர்.

``என்ன நடந்தது?'’ என நடிகர், நடிகைகள் சிலரிடம் கேட்டோம்.

``அத்தனையும் சொதப்பல்ங்க. இந்த மாதிரி ஒரு ஷோ நடக்கப் போகுதுனு பத்து நாளுக்கு முன்னாடி மலேசியாவுல ஒரு பிரஸ் மீட் நடத்தினாங்க. அதுல கலந்துகிட்ட குஷ்பு, ஷோ அன்னைக்கு வரவேயில்ல. இங்க இருந்து கிளம்பறதுக்கு டிக்கெட் புக் பண்ணினதுலயே தொடங்கிடுச்சு பிரச்னை. டிக்கெட் பிரச்னையால சென்னை ஏர்போர்ட் வரைக்கும் கிளம்பி வந்துட்டு கோபிச்சுட்டு வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டாங்க அம்பிகா. சங்கமே நலிவடைஞ்சு கிடக்குற இந்த நிலையில், சின்னி ஜெயந்த் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்தான் வேணும்; அதுவும் தன்னோடு இன்னொருத்தரையும் கூட்டிட்டு வருவேன்னு அடம் பிடிச்சு வந்தார்.

Ambika
Ambika

இப்படியான சில டென்ஷன்களோட மலேசியா போய் இறங்கினா, பிக்கப் பண்ண கார் இல்லை. தங்குறதுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யலை. நிர்வாகிகளுக்கு போன் போட்டா, `டாக்ஸி பிடிச்சு வந்திடுங்க’னு சொல்றாங்க. டாக்ஸி புக் பண்ண `ஆப்’ இல்லை. கையில் மலேசிய கரன்சி இல்லை. ஏர்போர்ட்லயே தேவுடு காத்திட்டிருந்தோம். நடிகர் சஞ்சீவுக்கு அன்னைக்குப் பிறந்த நாள். வீட்டுல மனைவி குழந்தைகளை விட்டுட்டு வந்தவர், ரூமுக்காக அஞ்சு மணி நேரத்துக்கும் மேல காக்க வைக்கப்பட, டென்ஷனாகி, சொந்தச் செலவுல ஒரு ஹோட்டல்ல போய் தங்கினார். அந்தக் கோபத்துல ஷோ நடந்த அரங்கத்துக்குக் கடைசி வரை அவர் வரவே இல்ல.

ரோகிணி, மனோபாலான்னு சீனியர்களும் ரொம்பவே அப்செட். ஷோ ஏற்பாட்டாளர்களைக் கேட்டா, ’எழுபது லட்சம் பட்ஜெட். (ஆர்ட்டிஸ்டுகள் பேமென்ட் இல்லாமலேயே) ஆனால், 2 கோடி வரைக்கும் செலவு பண்ணிட்டோம். அதனால எங்களை எதுவும் கேட்காதீங்க'னு சொல்றாங்க. அதேநேரம் நிர்வாகிகள்ல சிலர் குடும்பத்தோட டூர் மாதிரி வந்து என்ஜாய் பண்ணிட்டிருந்ததும் நடந்தது.

இதையெல்லாம் விடப் பெரிய வேடிக்கை என்னன்னா, டிவி நடிகர் சங்கச் செயலாளர் நரேனே ஷோவுல கலந்துக்கவே இல்ல. ‘ஷோ தொடர்பான வரவு செலவைக் கையாண்ட விதத்துல அவருக்கு அதிருப்தின்னும், அதனாலேயே ஒதுங்கிட்டார்னும் பேசிக்கிட்டாங்க’ என ஒரு பெரிய லிஸ்ட்டையே பட்டியலிட்டார், பெயர் குறிப்பிட விரும்பாத சீனியர் நடிகை.

''சாப்பாட்டுக்குத்தான் ரொம்பவே கஷ்டமாயிடுச்சு. 'சாப்பிட்டீங்களா'னு நிர்வாகிகள் பேச்சுக்குக் கேட்டிருந்தாகூட ஆறுதலா இருந்திருக்கும். அதுகூட யாரும் பண்ணலை’ என்றார் ஆர்த்தி கணேஷ்.

விஜய் சேதுபதியை வைத்து இன்னொரு வேடிக்கையும் அரங்கேறியுள்ளது. மலேசிய ஏர்போர்ட்டில் வந்திறங்கும் விஜய் சேதுபதியை, ஷோ ஏற்பாட்டாளர்கள் வந்து வரவேற்பதாகத்தான் ஏற்பாடாம். அதன்படி வரவேற்புக் குழுவுடன் மாலை மரியாதை செலுத்தி அழைத்துச் செல்ல ஷோ ஏற்பாட்டாளர்கள் விமான நிலையம் செல்ல, அங்கு விஜய் சேதுபதி இல்லை. ‘ஒரு கேங் வந்து இப்பதான கூட்டிட்டுப் போனாங்க’ என அங்கு சொல்லப்பட, அடுத்த சில நிமிடங்களில் ‘விஜய் சேதுபதி கடத்தப்பட்டாரா?' என்கிற பேச்சுகள் கிளம்பி ஒருவித பரபரப்பு அந்த இடத்தில் சூழ்ந்திருக்கிறது. கடைசியில்தான், ஷோ ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியாமலேயே ரவிவர்மா ஒருசிலருடன் வந்து விஜய் சேதுபதியை அழைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

sinni jayanth
sinni jayanth

சின்னி ஜெயந்திடம் பேசினோம். ''நான் கமிட்டி மெம்பர். பேமென்ட் இல்லாமத்தான் மிமிக்ரி செய்றேன். அதனால பிசினஸ் கிளாஸ் கேட்டேன். கல்யாண வீடுன்னா சலசலப்பு இல்லாமலா? ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகிட்ட பொறுப்பை விட்டிருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காது'’ என்றார்.

அம்பிகாவிடம் பேசிய போது, ''ரொம்பவே நொந்து போயிட்டேன். அதைப் பத்திப் பேசினாலே கோபமா வருது. ஷூட்டிங்கையெல்லாம் கேன்சல் பண்ணிட்டு கலந்துக்கலாம்னு ஆர்வமா இருந்தேன். அவங்க சொதப்புன சொதப்பல்ல கலந்துக்க முடியாமப் போயிடுச்சு. விடுங்க, அதைப் பத்திப் பேசவே விரும்பலை’ என்றார்.

ரவிவர்மா, சஞ்சீவ் ஆகியோர் இன்னும் மலேசியாவிலிருந்து திரும்பாததால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

டிவி நடிகர் சங்கச் செயலாளர் ‘ஆடுகளம்’ நரேன் என்ன சொல்கிறார்?

Aadukalam Naren
Aadukalam Naren

``வெளிநாட்டுல ஷூட்டிங் இருந்ததால என்னால கலந்துக்க முடியலை. ஷோவுல சில கசப்பான சம்பவங்கள் நடந்துட்டதா என் காதுக்கும் தகவல் வந்தது. உறுப்பினர்களை வேறு வேறு ஹோட்டல்கள்ல தங்க வச்சதால கம்யூனிகேஷன் பிரச்னை உண்டாகியிருக்கு. செலிபிரிட்டிகள் திரளா கலந்துக்குற இடங்கள்ல, சமயங்கள்ல நம்மை மீறி சில சம்பவங்கள் நடந்துடுது. உறுப்பினர்கள் இதைப் பெரிசு பண்ண வேண்டாம்கிறதுதான் என்னோட வேண்டுகோள்’’ என்றார்.