Published:Updated:

``எங்க டைவர்ஸுக்கு இதுதான் காரணம்!'' - 'பொன்மகள் வந்தாள்' சீரியல் விக்கி - மேக்னா பஞ்சாயத்து

`தெய்வம் தந்த வீடு' மேக்னா
`தெய்வம் தந்த வீடு' மேக்னா

தோழியே நாத்தனாராக அமைய, மேக்னா நிச்சயதார்த்தமும் நாத்தனாரின் நிச்சயதார்த்தமும் ஒரே மேடையில் நடந்தது. கல்யாணத்துக்குப் பிறகு ஹனிமூன் கூட ரெண்டு ஜோடிகளுமே சேர்ந்துதான் போனாங்க. நல்லபடியா போயிட்டிருந்த சூழல்ல, மறு வருஷமே மேக்னாவுக்கும் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு!

’தெய்வம் தந்த வீடு’, ‘பொன்மகள் வந்தாள்’ தொடர்களில் நடித்தவர் மேக்னா. கேரளாவைச் சேர்ந்த இவர், தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

மேற்கொண்டு இதுகுறித்துத் தெரிந்துகொள்ளும் முன், இது தொடர்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

’பொன்மகள் வந்தாள்’ விக்கி – மேக்னா நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா?

கடந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி விகடன் தளத்தில் வெளியான கட்டுரை இது.

விஜய் நடித்த ’பிரியமானவளே’ பட பாணியில் அக்ரிமென்ட் திருமணத்தை கருவாகக்கொண்டு விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வந்த தொடர்தான், ‘பொன்மகள் வந்தாள்’. இதில் ஜோடியாக நடித்த விக்கி – மேக்னா இருவரும், தங்களது நிஜ லைஃப் பார்ட்னரை விவாகரத்து செய்துவிட்டு தங்களுக்குள் மாலை மாற்றிக் கொள்ளப்போவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்போது எழுதியிருந்தோம்.

`பொன்மகள் வந்தாள்'  மேக்னா
`பொன்மகள் வந்தாள்' மேக்னா

சின்னத்திரை நடிகையான ஹரிப்ரியாவைத் திருமணம் செய்திருந்தார் விக்கி. இந்த ஜோடிக்கு குழந்தையும் இருக்கிறது. மேக்னாவுக்கு, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி கேரளாவின் திருச்சூரில் தொழிலதிபர் டான் டோனி என்பவருடன் திருமணம் நடந்தது. விக்கி – ஹரிப்ரியா இருவரும் காதலித்துக் கைபிடித்தவர்கள். மேக்னாவினுடையதும் காதல் கல்யாணம்தான்.

இருவருக்குமே திருமண வாழ்க்கை திருப்தியில்லாமல் போகத் தொடங்கிய சூழலில்தான், ‘பொன்மகள் வந்தாள்’ சீரியல் வந்தது. முதலில், இந்தத் தொடரில் விக்கிக்கு ஜோடியாக கமிட் ஆகியிருந்த ஆயிஷாவுக்கும் சீரியல் யூனிட்டுக்குமிடையே பிரச்னை உருவாகி, அவர் சீரியலை விட்டு வெளியேற, அந்த இடத்துக்கு வந்தார் மேக்னா.

அதுமுதல் விக்கி – மேக்னா இருவரையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகத் தொடங்கின. விக்கியின் மனைவி ஹரிப்ரியாவும் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையெல்லாம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கியதுடன், ‘விக்கி தொடர்பாக எதையும் நான் பேச விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

விக்கி-மேக்னா இருவருமே தங்களுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக கட்டுரையை முடித்திருந்தோம்.

இந்தச் சூழலில்தான் தற்போது மேக்னாவுக்கு கேரள குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. கொரோனா தொடங்கும் முன்பிருந்தே நடந்துகொண்டிருந்த வழக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. சீரியல் உலகில் மேக்னாவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

மேக்னா
மேக்னா

''மேக்னா, ’தெய்வம் தந்த வீடு’ மூலமாத்தான் தமிழ் சீரியலுக்கு வந்தாங்க. ‘கயல்’ படத்துலயும் சின்ன ரோல்ல நடிச்சிருக்காங்க. மலையாள சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்ப அவருடன் நடிச்ச அவரோட தோழியின் அண்ணன்தான் டோனி. அதாவது, தோழியே நாத்தனாராக அமைஞ்சாங்க. மேக்னா நிச்சயதார்த்தமும் அந்த நாத்தனாரின் நிச்சயதார்த்தமும் ஒரே மேடையில் நடந்தன. கல்யாணத்துக்குப் பிறகு ஹனிமூன் கூட ரெண்டு ஜோடிகளுமே சேர்ந்துதான் போனாங்க. இப்படி நல்லபடியா போயிட்டிருந்த சூழல்ல, என்னாச்சுனு தெரியல, மறு வருஷமே மேக்னாவுக்கும் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகிருச்சு. அதைச் சரிசெய்ய முடியாமப் போகவே, ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தாங்க.

இந்தச் சூழல்ல, விக்கியுடன் ’பொன்மகள் வந்தாள்’ தொடர்ல கமிட் ஆனாங்க. அந்த சீரியலும் சில மாசங்களுக்கு முன்னாடி முடிஞ்சிட்டதால, இப்ப ’மேக்னா ஸ்டூடியோ பாக்ஸ்’ என்கிற பெயர்ல யூ-டியூப் சேனல் ஒண்ணு தொடங்கி அதுல பிஸியா இருக்காங்க. திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் சட்டப்பூர்வ விடுதலை கிடைச்சுட்டதால, அடுத்த வாழ்க்கையை அவங்க இஷ்டம் போல அதேநேரம், கொஞ்சம் யோசிச்சுதான் எடுப்பாங்கன்னு நினைக்கிறோம்'' என்றார்கள்.

மேக்னா
மேக்னா

டான் டோனியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.'' ஒரு வருஷம்தான் நாங்க சேர்ந்து இருந்தோம். பிறகு எங்களுக்குள்ள செட் ஆகலை. அதுதான் பிரிவுக்குக் காரணம். அதனால்தான் விவாகரத்துக்குப் போனோம். மேக்னா இப்ப சென்னையிலேயே செட்டிலாகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். விவாகரத்து கிடைச்சு ரெண்டு மூணு மாசம் ஆகிடுச்சு'’ என்றார்.

விக்கிக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு