லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

``என் முகம் எனக்கே பிடிக்காமப் போச்சு!’’ - பவித்ர லட்சுமியின் பர்சனல் ஷேரிங்

பவித்ர லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
பவித்ர லட்சுமி

‘`வேலை பார்த்துக்கிட்டே மாடலிங்கும், டான்ஸும் பண்ணிட்டிருந்தேன். மாடலிங், டான்ஸ்னு கொஞ்சம் பிஸியாக ஆரம்பிச்ச நேரத்துலதான் எதிர்பார்க்காத விதமா அந்த விபத்தைச் சந்திச்சேன்.

சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சய முகம் பவித்ர லட்சுமி. மாடலிங்கிலும் தெரிந்த முகம். மீடியா பெண்களின் வாழ்க் கையை வெளியிலிருந்து பார்த்து பெருமூச்சு விடுபவர்களுக்கு, அவர்களது அந்தரங்கம் தெரிய வாய்ப்பில்லை. சாமானியர்களைப் போலத்தான் அவர்களும்... சவால்களையும் சங்கடங்களையும் தாண்டிதான் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில் பவித்ர லட்சுமியும் ஒரு போராளிதான்.

“வெற்றிங்கிறது ஈஸியா கிடைச்சிடாது. எனக்கும் அப்படித்தான். என் வாழ்க்கையின் அத்தனை கஷ்டங்கள்லயும் என் மொத்த நம்பிக்கையா என் அம்மா இருந்தாங்க. ‘பவித்ர லட்சுமி டாட்டர் ஆஃப் லட்சுமி’னு சொல்றதுதான் என் பெருமை....” கம்பீரமாகச் சொல்கிறார். டான்ஸராக கரியரைத் தொடங்கி நடிகையாக வளர்ந்தது வரை தான் கடந்து வந்த பாதைப் பகிர்கிறார் பவித்ரா.

“ சொந்த ஊர் கோயம்புத்தூர். ‘நீ பெரிய வளா ஆனதும் என்ன ஆகப்போறே’ன்னு தெரிஞ்சவங்க என்கிட்ட கேட்டாங்க. ‘நான் மீடியாவுல வேலைக்குப் போவேன். இல் லைனா நடிகை ஆவேன்’னு சொன்னதும், அம்மா என்னை அடிக்க வந்துட்டாங்க. அம்மாவுக்கு டான்ஸ், நடிப்பு, மாடலிங்னு எதிலும் விருப்பம் கிடையாது. நான் நல்லா படிக்கணும், வேலைக்குப் போகணுங்கிறது தான் அவங்க ஆசை. சிங்கிள் மதரா என்னை வளர்க்க அம்மா நிறைய கஷ்டப்பட்டாங்க. கூடுதல் பணம் கிடைக்கும்னு லீவு நாள்லகூட வேலைக்குப் போவாங்க. ஆனா, ஒருநாளும் அவங்க கஷ்டத்தை என்கிட்ட காட்டினதே இல்ல. அம்மாவுக்காக படிச்சு, பத்தாவதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். சின்ன வயசுல நான் ஆசைப்பட்டேன்னு அம்மா என்னை பரத நாட்டியத்துல சேர்த்துவிட்டிருந்தாங்க. ஸ்கூல் படிக்கும்போதே அரங்கேற்றம் பண்ணி, வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச பணத்துல அம்மாவுக்கு ஒரு போன் வாங்கிக் கொடுத்தேன். நான் படிச்சு முடிச்சு காலேஜ் புரொஃபசர் ஆகணும்னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா, நான் படிப்பை முடிச்சிட்டு, சென்னையில ஒரு தனியார் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந் தேன்...’’ சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு, பவித்ராவுக்கு இன்னும் அதிக சவால்கள், பிரச்னைகள்...

பவித்ர லட்சுமி
பவித்ர லட்சுமி

‘`வேலை பார்த்துக்கிட்டே மாடலிங்கும், டான்ஸும் பண்ணிட்டிருந்தேன். மாடலிங், டான்ஸ்னு கொஞ்சம் பிஸியாக ஆரம்பிச்ச நேரத்துலதான் எதிர்பார்க்காத விதமா அந்த விபத்தைச் சந்திச்சேன். முகம், கை கால்ல பயங்கரமான அடி. நானே போய்தான் ஹாஸ் பிட்டல்ல அட்மிட் ஆனேன். எமர்ஜென்சியா ஒரு சர்ஜரி பண்ணாங்க. எப்படியும் சமாளிச்சிர லாம்னு நினைச்சேன். ஆனா, என்னால எழுந்து உட்காரக்கூட முடியாத நிலை. ஆப ரேஷன் முடிஞ்சபோது என் முகத்தை கண்ணாடியில பார்க்க எனக்கே பிடிக்காது. அழுகையா வரும். ஆனா, சோர்ந்து உட்கார்ந் துட்டா இதுவரை போராடினதெல்லாம் வீணாயிடுமே... எந்த இடத்துலயும் நம்பிக் கையை இழந்துடக்கூடாதுன்னு எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டேன். ஃபிரெண்ட்ஸ் உதவியோட மீண்டு வந்தேன். விபத்து நடந்ததையோ, சிகிச்சைக்கு செலவானதையோ அம்மாகிட்டசொல்லவே இல்ல. நான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு வந்த பிறகுதான் அம்மாகிட்ட சொன்னேன். அதிர்ச்சியானாலும் அவங்க கொடுத்த நம்பிக்கையிலதான் மறுபடி ஓட ஆரம்பிச்சேன்’’ என்பவர், மறுபடி மாடலிங், நடிப்பு என பிசியாகியிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘நாய் சேகர்’ படத்தில் டைட்டில் கார்டில் ‘அறிமுகம் பவித்ர லட்சுமி’ என்ற அடையாளம் இவருக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்க, விஜய் டி.வியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியோ உலகெங்கும் இவரைப் பிரபலப் படுத்தியிருக்கிறது.

“ `குக் வித் கோமாளி’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு எபிசோடுக்காகவும் நான் நிறைய டிஷ் சமைக்கக் கத்துக்கிட்டேன். ஜாலி யான அனுபவம் அது” என்றவரிடம், மாடலிங் மற்றும் நடிப்புத்துறைகளில் அடிக்கடி வெளியே வரும் பாலியல் வன்கொடுமை புகார்கள் மற்றும் பாடி ஷேமிங் அனுபவங்கள் போன்றவை குறித்துக் கேட்டோம்.

“ எல்லா துறையிலும் அது இருக்கு. மீடியாவுல இருக்கறதால எங்க நிலைமை வெளியே தெரியுது. நான் உயரம் குறைவான பொண்ணு. என் உயரத்தை வெச்சு நிறைய இடங்கள்ல என்னை கிண்டல் பண்ணிருக்காங்க. உயரம், நிறம் இதை யெல்லாம் தேர்வு பண்ணி நாம பிறக்குறது இல்லையே. அப்புறம் நாம எதுக்கு வருத்தப் படணும். வாழ்க்கை எப்படி இருக்கோ, அதை அப்படியே ஏத்துக்கிறதும் ஒருவகை பக்குவம் தான். பாலியல் வன்கொடுமைகள் பத்தி சொல் லணும்னா ‘நோ மீன்ஸ் நோ... அதுல உறுதியா இருந்தா போதும்... அவ்வளவுதான்” என்கிறார் போல்டு அண்ட் பியூட்டிஃபுல் பவித்ரா.