Published:Updated:

“நீங்க பெஸ்ட் அம்மாங்கிறதை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை!” - நடிகை ப்ரியதர்ஷினி

நடிகை ப்ரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
நடிகை ப்ரியதர்ஷினி

படம்: ச.பரத்வாஜ்

“நீங்க பெஸ்ட் அம்மாங்கிறதை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை!” - நடிகை ப்ரியதர்ஷினி

படம்: ச.பரத்வாஜ்

Published:Updated:
நடிகை ப்ரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
நடிகை ப்ரியதர்ஷினி

திவ்யதர்ஷினி (டி.டி) – ப்ரியதர்ஷினி (பி.டி)... சின்னத்திரையில் நீண்டகாலமாகக் கோலோச்சிக்கொண்டிருக்கும் நட்சத்திர சகோதரிகள். டி.டி, வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்திக்கொண்டிருக்க, சின்னத் திரையில் சத்தமின்றி 28 ஆண்டுகளைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறார் ப்ரியதர்ஷினி.

‘தாவணிக் கனவுகள்’ படத்தில் பாக்யராஜின் கடைக்குட்டி தங்கையாகப் பால்யத்திலேயே அரிதாரம் பூசி, ஏராளமான படங்களில் நடித்த ப்ரியதர்ஷினி, நடிகை, தொகுப்பாளர், நடனக் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர்.

“ரொம்ப ஆசைப்பட்டுத்தான் சின்னத் திரையை என் கரியரா தேர்ந்தெடுத்தேன். ‘நீ ஏன் குழந்தையை விட்டுட்டு வேலைக்குப் போறே; உன் ஆசைதான் முக்கியம்னா குழந்தையை யார் பார்த்துப்பா?’ - பெண்களை நோக்கி மட்டுமே கேட்கப்படுற இது மாதிரியான கேள்விகளையெல்லாம் நானும் எதிர்கொண்டிருக்கேன். ஒரு அம்மாவா நம் பொறுப்பைச் சரியா பண்ண முடியாதோங்கிற ‘மாம் கில்ட் ஃபீலிங்ஸ்’ எனக்கும் வந்திருக்கு. ஒவ்வோர் அம்மாவும் பெஸ்ட்டுதான். அதை யாருக்கும் நாம நிரூபிக்க வேண்டியதில்லை. எதுக்காகவும் மீடியாவிலேருந்து பிரேக் எடுத்துடக்கூடாதுனு உறுதியா இருந்தேன். என் கணவரும் மீடியா துறையில வேலை செய்யுறதால ஒருத்தருக்கொருத்தர் அனு சரணையா இருந்தோம். எங்க ஒரே பையன் இப்போ ஏவியேஷன் கோர்ஸ் முடிக்கப் போறான். ஃபேமிலி, கரியர் ரெண்டையும் நல்லபடியா கொண்டுபோயிட்டிருக்கேன்” பாசிட்டிவ் ஓப்பனிங்குடன் ஆரம்பிக்கும் ப்ரியதர்ஷினி, சன் டிவி ‘எதிர்நீச்சல்’ சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

நடிகை ப்ரியதர்ஷினி
நடிகை ப்ரியதர்ஷினி

ஆன்லைனில் நடனம் கற்றுக்கொடுப்பவர், அந்த அனுபவத்திலிருந்து சொல்ல அழுத்த மான மெசேஜ் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

“என்கிட்ட 20-க்கும் அதிகமான பெண்கள் டான்ஸ் கத்துக்கிறாங்க. அதுல சிலர் 50 வயதைக் கடந்தவங்க. மத்தவங்களோட உணர்வுகளையும் சூழலையும் புரிஞ்சுக்காம, சட்டுனு ஜட்ஜ் பண்றது பலருக்கும் புரை யோடிப்போன விஷயமாகிடுச்சு. ‘இந்த வயசுல உனக்கு டான்ஸ் தேவையா?’னு என்னையும் கேட்டிருக்காங்க. ‘இதெல்லாம் அப்படிக் கேட்கிறவங்களோட மனப் பிரச்னை. எதுக்காகவும் நம்மை வருத்திக்கவோ அல்லது ஆரம்பிச்ச காரியத்துலேருந்து பின்வாங்கவோ கூடாது. அதனாலதான், சின்ன வயசுல ஆரம்பிச்ச டான்ஸை இப்ப வரை தொடர்கிறேன். சிலம்பம், ஏரியல் யோகா, ஹுலா ஹூப்ங்கிற (Hula Hoop) வளையப் பயிற்சினு புதுப்புது கலைகளையும் ஆர்வமா கத்துக்கிறேன். இதனால, என் உடல் எடையையும் கட்டுக்குள் வெச்சுக்க முடியுது.”

“தொகுப்பாளரா மறக்க முடியாத அனுபவம் பற்றி...”

“ஒருமுறை இளையராஜா சாரின் பேட்டிக் காக ராத்திரி முழுக்க யோசிச்சு கேள்வி களைத் தயார் பண்ணிட்டுப் போனேன். ஆனா, பேட்டியில அவர்கிட்ட மொக்கை வாங்கிட்டேன். அவமான மாகிடுச்சேன்னு அழுதேன். ‘சண்டை யில கிழியாத சட்டையா?’ன்னு என்னைச் சமாதானப்படுத்திக்கிட்ட தோடு, அப்புறமா பல மேடைகள்ல அவருடன் வேலை செஞ்சிருக்கேன். தொகுப்பாளர் வேலையாலதான் மனிதர்களைப் புரிஞ்சுக்கிற பக்குவம் கிடைச்சது.

எனக்குப் பழக்கமானவரா இருந் தாலும்கூட அவ்வளவு சீக்கிரத்துல நானா போய் யார்கிட்டயும் சகஜமா பேச மாட்டேன். நிறைய மேடைகளைப் பார்த்திருந்தாலும், இப்பவரைக்கும் கூட்டம்னா எனக்கு அலர்ஜிதான். கம்ஃபர்ட் ஸோனுக்குள்ளேருந்து விடுபட முடியாம தவிக்கிற நானே தொகுப்பாளரா ஆகிட்டேன்னா, என்னைவிட நல்லா பேசுறவங்கள்லாம் பெரிய தொகுப்பாளரா பெயர் எடுக்கலாம்.”

தங்கையுடன்
தங்கையுடன்

“தங்கச்சி டி.டி-யின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?”

“சின்னத்திரையில பிரபலமாகிறதும், கிடைச்ச பிரபல்யத்தைத் தக்கவெச்சுக் கிறதும் ரொம்பவே கஷ்டம். அந்தப் புகழை டி.டி இத்தனை வருஷங்களா தக்க வெச்சுகிட்டிருக்கிறது பெரிய விஷயம். ‘நீங்க டி.டி அக்காதானே?’ன்னு அவளால எனக்கும் அடையாளம் கிடைக்குது.

சின்ன வயசுல டி.டி ரொம்பவே அமைதியான கேரக்டர். இன்னிக்கு தான் இருக்கிற இடத்தை கலகலப்பா வெச்சுக்கிற அளவுக்கு அவகிட்ட நிறையவே மாற்றம் வந்திருக்கு. தன்னைச் சுத்தியிருக்கிற யாரையுமே காயப் படுத்திடக் கூடாதுங்கிறதுல அவ ரொம்பவே கவனமா இருப்பா.

பர்சனல் லைஃப் சம்பந்தமா அவ எதிர்கொண்ட நெகட்டிவிட்டி ரொம் பவே அதிகம். டி.டி இடத்துல நான் இருந்திருந்தா, என்ன ஆகியிருப்பேன்னு நினைக்கவே பயமா இருக்கு. ஆனா, தன் கஷ்டங்களை யார்கிட்டயும் காட்டிக் காம, தான் இருக்கிற இடத்தை சந்தோ ஷமா வெச்சுக்கணும்னு நினைப்பா.”

கதை சொல்லும் கம்மல்!

ஃபேஷன் விஷயத்தில் அப்டேட்டடாக இருக்கும் ப்ரியதர்ஷினியின் காதுகளில் மின்னும் கம்மல் ஒவ்வொன்றின் பின்னணி யிலும் சுவாரஸ்யமான கதை ஒளிந்திருக்கிறது. அதுகுறித்து சொன்னவர், “ ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில போட்டியாளரா இருந்தப்போ பல எபிசோடுகள்ல பெஸ்ட் டான்ஸரா தேர்வானேன். அந்த ஒவ்வொரு வெற்றியையும் குறிக்கிற வகையில காது குத்தி புதுப்புது கம்மல் மாட்டிகிட்டேன். தலா ஆறு கம்மல் வீதம் ரெண்டு காதுலயும் மொத்தமா 12 கம்மல் குத்தியிருக்கேன். நிறைய கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கேன். 40 வயசுல மூக்கு குத்திக்க ஆசைப்பட்டேன். ‘இந்த வயசுல மூக்குத்தியா...உன் முகத்துக்கு செட் ஆகாது’னு பலவித கமென்ட்ஸ் வந்துச்சு. ஆனா, என் உடல், என் விருப்பம்னு மூக்கு குத்திக்கிட்டேன்” என்று புன்னகைப்பவரின் இயல்பான வார்த்தைகளும் ஜொலிக்கின்றன.