சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது!”

ராதிகா ப்ரீத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராதிகா ப்ரீத்தி

அப்பா மிலிட்டரி ஆபீசர். அம்மா ஹவுஸ்வைஃப். ஒரு கிரிக்கெட்டர் அண்ணன், நான். இப்படியான சின்னக் குடும்பம்தான்

ராதிகா ப்ரீத்தி, சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘பூவே உனக்காக’ தொடரின் நாயகி. கோலார் தங்க வயலில் இருந்து தமிழ்த் தொலைக்காட்சிக்கு வந்திருக்கும் புதுவரவு.

‘‘முதல் சீரியலே முன்னணி சேனலில், அதுவும் பிரைம் டைம்... யாருக்குக் கிடைக்கும்’’ என்றபடி உரையாடலைத் தொடங்கினேன்.

‘‘ஆமா சார், சீரியலுக்குள் வந்த பிறகுதான் இதனுடைய ரீச் புரியுது. இந்த சீரியல் ஆடிஷனுக்கு நான் இஷ்டமில்லாமதான் வந்தேன். அம்மாதான் கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தாங்க. அன்னைக்கு மட்டும் அம்மா ‘சரி வரலைன்னா விடு’ன்னு சொல்லியிருந்தாங்கன்னா ‘பூவரசி’ இப்ப இங்க இல்லை. தேங்க்ஸ் டு மை மம்மி’’ என்றவர், சீரியலுக்குள் வந்த கதையை விவரிக்கத் தொடங்கினார்.

விகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது!”

‘‘அப்பா மிலிட்டரி ஆபீசர். அம்மா ஹவுஸ்வைஃப். ஒரு கிரிக்கெட்டர் அண்ணன், நான். இப்படியான சின்னக் குடும்பம்தான். வீட்டுலயும் எந்நேரமும் ராணுவக் கட்டுப்பாடுதான். அப்பாவுக்கு சினிமா மாதிரியான பொழுதுபோக்குகள் சுத்தமாப் பிடிக்காது. பள்ளி நாள்கள இருந்து சினிமாவுக்கு வர்ற வரைக்கும் நான் தியேட்டர்ல போய்ப் பார்த்தது ரெண்டே படம்தான். அண்ணனைப் போலவே நானும் விளையாட்டுல ஈடுபடணும்ங்கிறது அப்பாவின் விருப்பம். அவர் ஆசைக்காக நானும் கொஞ்ச நாள் ‘த்ரோ பால்’ ஆடினேன். அதுல மாவட்ட அளவுல தங்கமெல்லாம் கூட வாங்கியிருக்கேன். ஆனாலும் சினிமாக் கனவு எனக்குள்ள எப்படி வந்ததுன்னே தெரியலை. காலேஜ் படிக்கிறப்ப முதன்முறையா போட்டோஷூட் பண்ணி, அது மூலமா முதல் வாய்ப்பு கன்னடத்துல வந்தது.

ஆனா அப்பா சம்மதம் தரவே இல்லை. அவருக்குத் தெரியாம ஷூட்டிங் போறேன்னு கிளம்பிப் போனா, அது சரியான கம்பெனியின் நல்ல படமா இல்லை. ஏமாற்றம் ஒருபுறம், வீட்டுல கழுவி ஊத்திட்டாங்க. ‘சினிமாக்குப் போறேன்னு கிளம்பிப் போனாயே என்னாச்சு’ன்னு சொந்தக்காரங்க, கூடப் படிச்சவங்க கேலி பண்ணியதுல காலேஜ் போறதும் நின்னுடுச்சு.

இந்த இடத்துலதான் ஒரு வைராக்கியம் வந்தது. ‘கேலி பேசுனவங்க முகத்துல கரியைப் பூசணும்னா, நடிப்பு ப்ளஸ் படிப்பு ரெண்டையும் விடக் கூடாது’ன்னு முடிவு பண்ணினேன். மறுபடியும் அதே முயற்சி. ஒருவழியா கன்னடத்துல முக்கிய இயக்குநரான எஸ்.நாராயண் சார் படத்துல ஹீரோயினா சான்ஸ் கிடைச்சது. அந்தப் படம் ரிலீசான பிறகே வீட்டுல என் அப்பா எங்கிட்ட முகம் கொடுத்துப் பேசினார். தொடர்ந்து கன்னடத்துல இன்னும் ரெண்டு படங்கள் பண்ணினேன். கூடவே கரஸ்ல பி.காம் படிப்பும் முடிஞ்சது’’ என்றவரிடம் தமிழுக்கு வந்தது குறித்துக் கேட்டேன்.

‘‘கர்நாடகாவுல இருந்தாலும் எங்களுடையது தமிழ்க் குடும்பம். அதனால சினிமா ஆசை வந்தப்பவே கோலிவுட்டும் மனசுக்குள் வந்திடுச்சு. ரெண்டு கன்னடப் படம் முடிச்சதும் தமிழ்ப்பட வாய்ப்பு வந்தது. ஆனா முதல் தமிழ்ப் படமும் முதல் கன்னடப் படம் மாதிரியே அமைஞ்சிடுச்சு. அதைப் பத்தி வெளியில பேசறதே இல்லை.

சரி, இங்கேயும் அடுத்த வாய்ப்பு வரும்னு நினைச்சிட்டிருந்தப்பதான் இந்த சீரியலுக்குக் கேட்டாங்க. சினிமாக் கனவுல இருந்ததால சீரியலை மனசு ஏத்துக்க மறுத்துச்சு. அதனாலதான் ‘வர மாட்டேன்’னு அடம் பிடிச்சேன். ஆடிஷன்லயும் எடக்கு மடக்கா பதில் சொன்னா ரிஜக்ட் பண்ணிடுவாங்கன்னு வேண்டாத கேள்வியெல்லாம் கேட்டேன். ஆனா பாருங்க, செலக்ட் ஆகிட்டேன்’’ என்கிறார்.

விகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது!”

``சரி, இப்போ செட் ஆகிட்டீங்கதானே?’’

‘‘எனக்கு ‘பூவரசி’ கேரக்டர் ரொம்பவே பிடிச்சிருக்கு. அன்னைக்கெல்லாம் சீரியல்கள்ல கணவன் சந்தேகப்பட்டா, மூலையில உட்கார்ந்து அழுதுட்டிருந்த ஹீரோயின்களைத்தானே பார்த்திருப்பீங்க? ‘பூவரசி’ அந்த டைப் இல்லை. தன்னை நிரூபிக்கப் போராடுறா. தன்னை நிரூபிச்சிட்ட பிறகு கணவனை எப்படி டீல் பண்ணப் போறாங்கிறது ரொம்பவே எதிர்பார்ப்பா இருக்கும். இந்தக் கேரக்டருக்கு சீரியல் ரசிகர்கள்கிட்ட கிடைச்சிருக்கிற வரவேற்பு என்னை ரொம்பவே பிரமிக்க வச்சிருக்கு. ஒருவேளை தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தேன்னாலும் இந்தப் புகழ் கிடைச்சிருக்குமா தெரியலை. அதனால இப்போதைக்கு சீரியல்ல நல்லாவே செட்டில் ஆகிட்டேன்.’’

விகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது!”

``ஊரடங்கிலும் மும்முரமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்டீங்க போல?’’

‘‘ஆமாங்க. ஷூட் போயிட்டுதான் இருக்கு. எங்க சீரியல்ல இப்ப புது ஹீரோ வந்திருக்கார்’’ என்றவர், ‘‘போதும், போதும், இது மாதிரிக் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னா வில்லங்கமாகிடலாம். அதனால இத்தோட முடிச்சுக்கலாமே’’ என்றபடி உஷாராக எஸ்கேப்.