சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“கண் டாட்டூ பார்த்து கண் கலங்கிடுச்சு!”

ஸ்ருதி சண்முகப்பிரியா - அரவிந்த் சேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ருதி சண்முகப்பிரியா - அரவிந்த் சேகர்

இவங்களுக்கு எப்ப ஷாப்பிங் போகணும்னு தோணுதோ அப்ப போயிடணும். லாஸ்ட் டைம் போனப்ப ஆறு சேலை வாங்கினாங்க.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

``என் கணவர்தான் ஃபிட்னெஸ் ஃப்ரீக்... நான் இல்லைங்க... அதனால, எங்க தல தீபாவளிக்கு மறக்காம ஸ்வீட்ஸ் கொண்டு வந்துருங்க'' என்ற அன்புக் கட்டளையுடன் தன் வீட்டு முகவரியை நமக்கு அனுப்பிவைத்தார், ஸ்ருதி சண்முகப்பிரியா.

`நாதஸ்வரம்' சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர், ஸ்ருதி. தொடர்ந்து பல தொடர்களில் நடித்தவருக்கு சமீபத்தில் அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தல தீபாவளி கொண்டாடவிருக்கும் இந்தத் தம்பதியை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தோம்.

``அரவிந்த், நீங்க பேசிட்டு இருங்க... நான் இவங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்'' என்றார் ஸ்ருதி. கண்ஜாடையில் சம்மதம் சொல்லிவிட்டு அரவிந்த் பேசத் தொடங்கினார்.

``பலரும் எங்களுடையது லவ் மேரேஜ்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, இது பக்கா அரேஞ்டு மேரேஜ். எங்களைப் பார்க்கிறவங்க நீங்க கூட்டுக் குடும்பமா இருக்குறீங்களான்னு கேட்குறாங்க. இப்பல்லாம் அம்மா, அப்பாகூட இருக்கிறதே பெரிய விஷயமாகிடுச்சு. அந்த வகையில் நான் ரொம்ப லக்கி. ஸ்ருதி, என்னையும் என் பெற்றோரையும் நல்லா கவனிச்சுக்கிறாங்க. `வீட்டு வேலையில இப்ப 40% குறைஞ்சிருக்கு... என் மருமக மீதியைப் பார்த்துக்குறா’ன்னு அம்மா பெருமையா சொல்லுவாங்க. அந்த அளவுக்கு குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்றதும், ``நான் வந்துட்டேங்க... முகத்துக்கு நேரா புகழாதீங்க'' என தன்னடக்கமாகச் சொல்லிவிட்டு, நம்மிடம் டீ கப்பை நீட்டினார் ஸ்ருதி.

“கண் டாட்டூ பார்த்து கண் கலங்கிடுச்சு!”

``என் மனைவியோட டீக்கு நான் அடிமை. (`வேற வழியில்லை, இப்படி சொல்லித்தான் ஆகணும்' என்றதும், செல்லமாய் ஸ்ருதி கோபித்துக்கொண்டார்) ரொம்ப சூப்பரா டீ போடுவாங்க'' என்று இஞ்சி, ஏலக்காய் சேர்ந்து மணக்கும் டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தார் அரவிந்த். புன்னகைத்தவாறு ஸ்ருதி தொடர்ந்தார்.

``பொதுவா, கல்யாணம் ஆன பிறகு பொண்ணுங்களோட லைஃப்ஸ்டைலே வேற மாதிரி மாறும். புகுந்த வீட்டில் எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டு, அதை ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுக்கும். அதுவரைக்கும் சில தடுமாற்றங்கள் நிகழலாம். எனக்கும் நிகழ்ந்தது. அப்படி நான் தடுமாறும்போதெல்லாம் `இந்த விஷயத்தை இப்படி எடுத்துட்டு போகலாம்'னு அரவிந்த் புரியவைப்பார். எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வராதுன்னுல்லாம் சொல்ல மாட்டேன். வரும்... ஆனா, அதை நீண்டு போக ரெண்டு பேரும் விட மாட்டோம். கணவன், மனைவிக்குள்ள புரிதல் ரொம்பவே முக்கியம். அது எங்ககிட்ட நிறையவே இருக்கு'' என்றவரிடம் தீபாவளி ஷாப்பிங் குறித்துக் கேட்டதும், ``அதை என்கிட்டதான் நீங்க கேட்கணும்'' (இவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்போல!)என அரவிந்த் பேச ஆரம்பித்தார்.

``இவங்களுக்கு எப்ப ஷாப்பிங் போகணும்னு தோணுதோ அப்ப போயிடணும். லாஸ்ட் டைம் போனப்ப ஆறு சேலை வாங்கினாங்க. ஏதோ நல்ல மனநிலையில் இருந்திருப்பாங்க போல, அதுல ஒண்ணை `தல தீபாவளிக்கு யூஸ் பண்ணிக்கிறேன்’னு சொல்லிட்டாங்க. நானும் தப்பிச்சுட்டேன். எத்தனை தடவை மாறி மாறி பல டிசைன்களைப் பார்த்தாலும், கடைசியா முதலில் பார்த்த டிரெஸ்ஸைத்தான் செலக்ட் பண்ணுவாங்க. அதுக்கு எதுக்கு அவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணணும்னு கேட்டா கோபம் மட்டும் வந்துடும்'' என்றவரை நிறுத்தி, ``ஏங்க... இவர் மொத்தமே ஷாப்பிங் பண்ண எனக்கு 15 நிமிஷம்தான் டைம் கொடுப்பார். அதுக்குள்ள எப்படி நாம முடிவெடுக்க முடியும்?'' என ஆவேசமாகத் தொடர்ந்தார் ஸ்ருதி.

“கண் டாட்டூ பார்த்து கண் கலங்கிடுச்சு!”

``கடைக்குள்ள போகும்போதே டைம் சொல்லிடுவாரு. அதுக்குள்ள எடுத்துடணும். அதுவும் செலக்ட் பண்ணின டிரெஸ் நல்லா இருக்கா, இல்லையான்னு அவருடைய புருவ ரியாக்‌ஷனை வெச்சுத்தான் கண்டுபிடிக்கணும். புருவம் லைட்டா தூக்குனா சுமார். நல்லா வில் மாதிரி புருவத்தைத் தூக்கினாருன்னா சூப்பர்னு புரிஞ்சுக்கணும்.'' `இதெல்லாம் டூ மச்தான். ஆனா, இவங்க வேகமா செலக்ட் பண்ண வேற வழியில்லையே' என்கிற மைண்ட் செட்டுடன் அமர்ந்திருந்த அரவிந்திடம், ``உங்களுக்குள் அதிகமா எதற்காகச் சண்டை வரும்?'' என்று கேட்கவும் சிரிக்கிறார்.

``நான் ஃபிட்னஸில் ரொம்ப கவனமா இருப்பேன். ஜிம், வொர்க்அவுட், டயட் எல்லாம் சரியா ஃபாலோ பண்ண நினைப்பேன். இன்னைக்குக் காலையில்கூட சாப்பாடு விஷயத்துக்காகச் சண்டை போட்டோம். ஆறு முட்டை கேட்டிருந்தேன். இவங்க மூணு முட்டைதான் வெச்சிருந்தாங்க. அதனால சண்டை'' (இவர் முட்டை பிரபலம் `பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமையும் மிஞ்சிடுவார் போலயே!) என்றவரின் கரம் பற்றி ஸ்ருதி தொடர்ந்தார்.

“கண் டாட்டூ பார்த்து கண் கலங்கிடுச்சு!”

``சாதாரணமா பேசுற மாதிரி இல்லாம சத்தமா கத்தி பேசுனா எனக்குப் பிடிக்காது. அதனாலேயே அடிக்கடி சண்டை போடுவேன். அதே மாதிரி, நான் ரொம்ப டைமிங் ஃபாலோ பண்ணுவேன். இவர் ஜிம், ஃபிட்னஸ் நேரம் மட்டும் சரியா டைமிங் ஃபாலோ பண்ணுவார். மத்த நேரம் அதைப் பண்ண மாட்டாரு. அதனால கோபம் வரும். ஏற்கெனவே சொன்ன மாதிரிதான், எவ்வளவு சண்டை வந்தாலும் உடனே சமாதானமாகிடுவோம். எங்களால ஒருத்தருக்கொருத்தர் பேசாம ரொம்ப நேரமெல்லாம் இருக்க முடியாது.

ரெண்டு பேரும் ஒவ்வொரு நாள் நைட்டும் அன்னைக்கு எங்க லைஃப்ல என்ன நடந்ததுன்னு எல்லா கதையும் பேசிட்டுதான் தூங்குவோம். எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. என் அம்மாவும் சரி, அப்பாவும் சரி இவரை அவங்க சொந்தப் பையனாகத்தான் நடத்துவாங்க. என் மாமியார், மாமனாரும் என்னை அவங்க பொண்ணு மாதிரியே பார்த்துக்கிறாங்க. சமைக்கும்போதும், வீட்டு வேலைகள் பண்ணும்போதும் நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேன்னா என் மாமியார் அதைப் பக்குவமா சொல்லி புரியவைப்பாங்க. அவங்ககிட்ட இன்னும் பல நுணுக்கங்கள் கத்துக்கிட்டு இருக்கேன்'' என்றவரிடம், மறக்க முடியாத காதல் பரிசு என்னவெனக் கேட்டோம்.

``கல்யாணத்துக்கு முன்னாடி அரவிந்த் சர்ப்ரைஸா என் கண்ணை அவர் கையில் டாட்டூவாக வரைந்திருந்தார். அதுதான் அவருடைய முதல் டாட்டூ. அது தத்ரூபமா என் கண் மாதிரியே இருந்துச்சு. அதைப் பார்த்ததும் என்னை அறியாமலேயே கண்கலங்கிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் தினம் தினம் அதிகமா காதல், பரிசுன்னு வாழ்க்கையைக் கொண்டாடறோம்'' என்றதும் அரவிந்த் தொடர்ந்தார்.

“கண் டாட்டூ பார்த்து கண் கலங்கிடுச்சு!”

``ஸ்ருதி நான் நினைச்சதைவிட ரொம்ப சூப்பராவே ஃபேமிலியை ஹேண்டில் பண்றாங்க. அவங்களுக்குச் சின்ன வயசுல இருந்தே பாரிஸ் போகணும்னு ஆசைன்னு சொன்னாங்க. அதனால, எங்க ஹனிமூனுக்கு பாரிஸ், ஸ்பெயின் ட்ரிப் பிளான் பண்ணி போயிட்டு வந்தோம். ஸ்ருதிக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். அவங்க சோலோ ட்ரிப் நிறைய போயிருக்காங்க. அதனால, அவங்க சொன்னபடி பிளான் பண்ணி போயிட்டு வந்தோம். பாரிஸில் எனக்கு சாப்பாடு அந்த அளவுக்கு செட் ஆகலை. ட்ரிப் போயிட்டு வந்து 11 நாளில் 6 கிலோ எடை குறைஞ்சுட்டேன்'' என்றதும், ``ஹனிமூனுக்கு போய் வெயிட் லாஸ் பண்ணினது என் கணவராகத்தான் இருக்கும்'' என கேலி செய்துவிட்டு ஸ்ருதி தொடர்ந்தார்.

``ஃபேமிலி கமிட்மென்ட் இருக்குங்கிறதனால இன்னும் கரியர் குறித்து நாங்க எந்த முடிவும் எடுக்கலை. எனக்கு மல்டி டாஸ்க்கில் பண்ண பிடிக்கும். நடிப்பைத் தவிர்த்து, பிரெஞ்ச் லாங்குவேஜில் B2 லெவல் முடிச்சிருக்கேன். மீடியா துறையிலேயே தொடர்ந்து பயணிக்கலாமா, இல்லைன்னா பிரெஞ்ச் டீச்சராக வொர்க் பண்ணலாமான்னு இன்னும் முடிவு பண்ணலை. சீக்கிரமே பேசி நல்ல முடிவா எடுப்போம்னு நம்புறேன்'' என்றதும், ``எதுவா இருந்தாலும் உனக்குப் பிடிச்சதைப் பண்ணு. அதுக்கு நான் ஃபுல் சப்போர்ட் பண்ணுவேன்'' என்ற அரவிந்தின் தோள் சாய்ந்துகொண்டார் ஸ்ருதி.

தலைதீபாவளி வாழ்த்துகள் கூறிப் புறப்பட்டோம்!