
படம்: கிரண் சா
சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் விரக்தியுடன் ஒரு பதிவைப் போட்டிருந்தார் பிரியா பவானி சங்கர். ராஜ்வேல் என்கிற இவருடைய கல்லூரித் தோழருடனான காதலின் பிரேக் அப் மெசேஜ் என்றார்கள் பலரும். அப்போது எதுவும் பேசாத பிரியா அந்த சந்தேகத்துக்கு தற்போது விடை தந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் ராஜ்வேலின் பிறந்த நாளன்று இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘நமக்குள் மாறாதது அந்த அன்பு மட்டுமே’ என அந்த பிரேக் அப் செய்தியைப் பொய்யாக்கியுள்ளார்.

‘சூப்பர் சிங்கர்’, ‘சரிகமப’ என சேனலுக்குச் சேனல் மியூசிக் ரியாலிட்டி ஷோக்கள் இருக்கிற சூழலில், தற்போது புதிதாக இன்னொரு இசை நிகழ்ச்சியும் வரவிருக்கிறது. விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவுக்கு ‘ராக் ஸ்டார்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். புதிய திறமையாளர் களுக்கான களமாக இது இருக்கப் போவதில்லையாம். ‘பின்னணி இசையில் பெரிய வரவேற்பைப் பெறாத பாடகர்களுக்கு இரண்டாவது ரவுண்டுக்கான ஒரு வாய்ப்பு’ என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் என்கிறார்கள்.
சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டுமென்பதுதான் சின்னத்திரைப் பிரபலங்கள் பெரும்பாலானவர்களின் வாழ்நாள் ஆசை. சில டிவி பிரபலங்கள் யாருடைய ரசிகைகள் என்பதை இங்கு பார்க்கலாம். ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி, கமலின் ரசிகை. ‘‘கமல் சார் படம்கூட வேண்டாம்; அடுத்த பிக்பாஸ்ல கலந்துகிட்டா போதும்’’ என்கிறார். ‘செம்பருத்தி’ சபானா, தீவிரமான விஜய் ரசிகை. விஜய்யின் அப்பா அம்மாவிடமே இதைச் சொல்லி ‘‘சார் படத்துல ரெகமண்ட் பண்ண முடியுமா’’ எனக் கேட்டவர் இவர். தன் வீட்டு வரவேற்பறையில் ரஜினியின் போட்டோ மாட்டி வைத்திருக்கும் அளவுக்கு ரஜினி ரசிகை, டிடி. நடிகை ரச்சிதாவோ சூர்யாவின் ரசிகையாம்.

‘நாகினி’ சீரியல் மௌனி ராய்க்கு விரைவில் திருமணம் நடக்க விருக்கிறது. அதுவும் காதல் திருமணமாம். கடந்த ஆண்டு ஷூட்டிங்கிற்காக இவர் துபாய் சென்ற நிலையில் கொரோனா ஊரடங்கு அமலாகிவிட அங்கேயே இருந்தார். அந்த நாள்களில் அங்கு வசித்துவரும் சூரஜ் என்பவருடன் காதல் உருவாகி, அந்தக் காதலே விரைவில் கல்யாணத்தில் முடிய விருக்கிறதாம். சூரஜ் கேரளாவைச் சேர்ந்தவர்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!
முக்கியமான ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாகவே இசை நிகழ்ச்சியின் தொடக்க நாளன்று அந்தத் தொகுப்பாளர் கலந்து கொள்ளவில்லையாம். அதற்குள் ‘இந்த சீசனில் அவர் இல்லை’ எனக் கிளப்பிவிட்டுவிட்டார்கள். இப்படித் தகவல் கிளம்பியதில் அப்செட்டான தொகுப்பாளர், ‘சிலர் நான் இந்த நிகழ்ச்சியில இருக்கக் கூடாதுன்னு ரொம்பவேதான் ஆசைப்படறாங்க’ எனக் கண் சிவந்தாராம். யாரைச் சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை.
சில நேரங்களில் சீரியலின் வசனங்கள் நிஜத்தைப் பிரதிபலிப்பது இயல்பாக நடக்கிறதா, அல்லது, வலிந்து செய்கிறார்களா எனத் தெரியவில்லை. பிரைம் டைம் ஹிட் சீரியலின் வில்லியிடம் சமீபத்தில் ‘உன் டார்ச்சர் தாங்காமத்தான் புருஷன் வெளிநாட்டுல இருந்து வரமாட்டேங்கிறானா’ எனக் கேட்பதுபோல் ஒரு டயலாக். நிஜத்திலும் அந்த நடிகையின் கணவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார்.