Published:Updated:

கேள்விக்கு என்ன பதில்?

கார்த்திகேயன், செந்தில் வேல், சுகிதா
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகேயன், செந்தில் வேல், சுகிதா

அவரை நேர்காணலுக்கு அழைத்து வந்த நபரை அழைத்துக் கண்டபடி திட்டிவிட்டும் சென்றார்.

நாங்க எவ்வளவு பேரைப் பார்த்திருப்போம்...” மற்ற எல்லோரையும்விட இந்த டயலாக்கை உச்சரிக்கக் கூடுதல் தகுதியுடையவர்கள் நம் செய்தித் தொலைக்காட்சி நெறியாளர்கள்தான்... அது நான்கைந்து பேரை வைத்து நடத்தும் விவாத நிகழ்ச்சியானாலும் சரி, ஒரேயொருவருடன் நடக்கும் நேர்காணலாக இருந்தாலும் சரி, மிகச் சாமர்த்தியமாய் கேள்விக் கணைகளைத் தொடுத்து எதிரில் இருப்பவர்களை நிலைகுலையச் செய்வதில் வல்லவர்கள்... ஆனால், அவர்களே மிகவும் நொந்துபோன அல்லது அவர்கள் பெருமையாக உணர்ந்த ஸ்பெஷல் தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கே...

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன்  - மூத்த செய்தி ஆசிரியர், புதிய தலைமுறை

‘`நான் நடத்திய அத்தனை விவாத நிகழ்ச்சிகளையுமே முக்கியமானதாகவே கருதுகிறேன். நேர்காணல்களில், ஒரு தரப்புக்கு எதிராக மாற்றுத் தரப்பு முன்வைக்கும் அத்தனை கேள்விகளும் கேட்க வேண்டும். விருந்தினர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்து உள்வாங்க வேண்டும். அந்த வார்த்தைகளின் உள் அரசியலைத் தேட வேண்டும். ஒரு வார்த்தை பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட அவரின் பிம்பத்தையோ அவர் கட்சியின் பிம்பத்தையோ சுக்குநூறாக்கிவிடும். சீமான் சில நேரங்களில் நெறியாளர் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்பார். திருமாவளவன் வார்த்தைகளை மிகக் கவனமாகக் கையாளுவார். பொருளாதாரம் தொடர்பான நேர்காணல்களில் ப.சிதம்பரத்தைக் கையாள்வது சற்றுக் கடினம்.”

செந்தில் வேல் - அரசியல் பிரிவு ஆசிரியர், நியூஸ் 18

‘`விவாத நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு விவாதமாக நான் கருதுவது, திராவிடமா தமிழ்த்தேசியமா என சுபவீயையும், பெ.மணியரசனையும் முன்வைத்து நான் செய்த விவாத நிகழ்ச்சியைச் சொல்லலாம். அந்த விவாதம் ஒரு ஆவணமாக சி.டியாக பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

எனக்கு ஏமாற்றமாக அமைந்த விஷயம் ஒன்றுண்டு. முன்னாள் முதல்வர் கலைஞரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு ஒருமுறை வந்தது. அவருடைய நினைவாற்றல் அனைவரும் அறிந்ததுதான். அவரிடம் இருந்து சுவாரஸ்யமான பதில்களைப் பெற, நான் அதிகமாகவே என்னைத் தயார் படுத்திக்கொண்டேன். ஆனால், கடைசியில் அந்தப் பேட்டியை என் நண்பர் எடுத்தார்.

செந்தில் வேல்
செந்தில் வேல்

மிகவும் சிரமப்பட்ட தருணம் என்றால், நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான ஒருவர் நான் கேட்ட மூன்றாவது கேள்வியிலேயே, மைக்கைக் கழற்றி வீசிவிட்டு எங்கள் எடிட்டரை அழைத்து என்னைப் புகார் செய்ததைச் சொல்லலாம். அதேபோல, பழ.கருப்பையாவுடன் ஒரு நேர்காணல். அ.தி.முகவில் இருந்து விலகி தி.மு.கவில் அவர் சேர்ந்திருந்த நேரம் அது. ஏன் தி.மு.கவில் சேர்ந்தீர்கள் எனக் கேட்க, `கலைஞர் ஒரு விழாவில் என்னைக் கட்சிக்கு அழைத்தார்... கலைஞரே அழைத்த பிறகு எப்படிச் செல்லாமல் இருக்க முடியும்?’ என்றார். அவரிடம், `துக்ளக் விழா ஒன்றில் ‘கலைஞர் அழைத்தால் யார் வருவார்கள்’ என நீங்கள் ஒருமுறை சொல்லியிருக்கிறீர்களே?’ எனக் கேட்க, ‘இதற்காகத்தான் நான் இதுபோன்ற பேட்டிகளுக்கு வருவதில்லை’ என ஆவேசமாகக் கத்தி சீட்டை விட்டு எழுந்துவிட்டார், பின்னர் ஒருவழியாக அவரை சமாதானம் செய்து நேர்காணல் செய்தேன்.”

சுகிதா - துணை ஆசிரியர், நியூஸ் 7

‘`பொதுவாகவே, பெண்களுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் தெரியாது, கொள்கைகள் தெரியாது, வரலாறு தெரியாது எனப் பொதுப்புத்தியில் பதிந்துபோயிருக்கிறது. அதை விவாத நிகழ்ச்சிகளிலும் எங்களிடம் வெளிப் படுத்துவார்கள். அத்தகைய அனுபவங் களைத் தவிர்ப்பதற்காகவே ஆண் நெறியாளர்களைவிட, பெண் நெறியாளர்கள் நாங்கள் இரு மடங்கு தரவுகளோடு தயார் ஆக வேண்டிய திருக்கும்.

சுகிதா
சுகிதா

விவாதங்களில், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால், ஒருசிலர் ‘என்னம்மா, போம்மா, வாம்மா’ எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். நமக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் நடந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களை இடைவேளை நேரத்தில் கூப்பிட்டுக் கண்டித்துவிடுவேன். அதேபோல, விவாதத்தில் கட்சித் தலைவர்களின் பெயர்களைச் சொன்னால், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்களுக்குக் கடுமையாகக் கோபம் வரும். அப்படி எனக்கு ஒரு கசப்பான அனுபவம் நிகழ்ந்து, பிறகு அந்தக் கட்சியின் தலைவர் எனக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்ட பிறகுதான், அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அமைதியானார்கள். அதுவரையில் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டே இருந்தார்கள்.’’

ஜென்ராம் - மூத்த பத்திரிகையாளர்

‘`பழம்பெரும் தலைவர் ஒருவர், நேர்காணலுக்காக வந்திருந்தார். இருவரும் நேர்காணலுக்காக எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்துவிட்டோம். நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை. நான் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அவர் டீ சாப்பிடாமல், நான் இன்டர்வியூவில் கேட்பதற்காக வைத்திருந்த, நோட்ஸை எடுத்துக் கேள்விகளைப் படித்தார். திடீரென ‘இது போன்ற கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் உங்கள் அலுவலத்தில் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்களா?’ எனக் கோபமாகக் கேட்டார். நான் ‘ஆமாம்’ எனச் சொல்லவும், அப்படியே எழுந்து சென்றுவிட்டார். அவரை நேர்காணலுக்கு அழைத்து வந்த நபரை அழைத்துக் கண்டபடி திட்டிவிட்டும் சென்றார்.

ஜென்ராம்
ஜென்ராம்

அடுத்ததாக, எழுவர் விடுதலை தொடர்பாக ஒரு விவாதம் நடந்தது. அப்போது ‘ஏழு பேரின் பெயரை நீங்கள் சொல்கிறீர்கள்... நான் குண்டு வெடிப்பில் இறந்துபோன 15 காவலர்களின் பெயர்களைச் சொல்லுவேன்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் சொன்னார். உடனே நான் ‘இது நிகழ்ச்சிக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயம். ஏழு பேரும் தங்களை விடுவிக்கச் சொல்லி மனு கொடுத்திருக்கிறார்கள். அது குறித்த விவாதம் இது. இதில் இறந்துபோன பதினைந்து பேரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை’ என்று சொன்னேன். உடனே, ‘கொலையாளிகளின் பெயர்களைச் சொல்கிறீர்கள், உயிர் நீத்தவர்களின் பெயர்களைச் சொல்ல அனுமதிக்க மாட்டீர்களா’ எனக் கேட்டார். நான் அனுமதிக்க முடியாது எனச் சொல்லவும் வெளிநடப்பு செய்துவிட்டார்.’’