Published:Updated:

``60 வயசுக்கு மேல நடிக்க வர பிள்ளைங்கதான் காரணம்... ஆனா, இப்போ?!'' - கலங்கும் டிவி நடிகர்கள்

சாய்சக்தி
சாய்சக்தி

ஒருபுறம் உயிர் பயத்தை உண்டாக்கியபடியே மறுபக்கம் எல்லோருடைய வாழ்வாதாரத்தையும் குலைத்துப் போட்டுவிட்டது கொரோனா. `எந்தத் துறைக்கும் விதிவிலக்கில்லை’ என்கிற நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் சிலரிடம் கொரோனா பின்விளைவுகள் குறித்து கேட்டோம்.

`குதிரை குப்புறத் தள்ளி, குழியும் பறித்ததாம்’ எனப் பழமொழி சொல்வார்கள். அதுபோலத்தான் கொரோனாவும். ஒருபுறம் உயிர் பயத்தை உண்டாக்கியபடியே மறுபக்கம் எல்லோருடைய வாழ்வாதாரத்தையும் குலைத்துப் போட்டுவிட்டது.

``ரேஷன் அரிசி சாப்பாட்டுக்குப் பழகிட்டேன்!'' - சாய் சக்தி

சாய்சக்தி
சாய்சக்தி

``சில வருஷங்களுக்கு முன்னாடி டப்பிங் சீரியல் பிரச்னையால நிறைய ஆர்ட்டிஸ்டுகளுக்கு வேலை வாய்ப்பு குறைஞ்சது. எனக்கும் அதே பிரச்னை. டிவியே வேண்டாம்னு துபாய் கிளம்பிப் போனேன். ஆனா ஆடுன கால் சும்மா இருக்காதுங்குற மாதிரி அங்க என்னால எந்த வேலையையும் ஒழுங்காச் செய்ய முடியலை. மறுபடியும் இங்க வந்து வாய்ப்புத் தேடினேன். பெரிய முயற்சிக்குப் பிறகு `குக் வித் கோமாளி’ ஷோ கிடைச்சது. அதுல கிடைச்ச பிரபலம் மூலமா விளம்பரம், ஈவென்ட்னு கிடைக்க ஏதோ கொஞ்சம் வருமானம் வந்தது. கரெக்டா அந்த ஷோவும் முடிய கொரோனாவும் வந்திடுச்சு.

இப்ப வாழ்க்கை பழையபடி பூஜ்யத்துக்குப் போயாச்சு. சீரியல் ஷூட்டிங் தொடங்கிட்டாலும், என்னை மாதிரி சைடு கேரக்டர்களையெல்லாம் இப்போதைக்கு கூப்பிட வாய்ப்பே இல்லை. ரியாலிட்டி ஷோ ஷூட்டிங்லயும் இதே கட்டுப்பாடுதான். ஈவென்ட் போய் மூணு மாசமாச்சு. நிறைய ஈவென்ட் கேன்சலாகிடுச்சு.

என்னைப் பொறுத்தவரை படிப்பு கம்மி. அதனால மத்த வேலை எதுவும் தெரியாது. அப்படியே வேலை தெரிஞ்சாலும் சாதாரண மனுஷனா மாறி அந்த வேலையைச் செய்வேனானு தெரியலை. அதனால இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே தீர்வு செலவைக் குறைக்கணும். குறைக்கத் தொடங்கிட்டேன். கையில கொஞ்சம் இருக்கிற காசை எண்ணி எண்ணித்தான் செலவு செய்றேன். சாப்பாட்டுக்கு ரேஷன்ல தர்ற அரிசியை வாங்கிப் பொங்கச் சொல்லிட்டேன். இப்ப பழகிட்டா, நாளைக்கு கையில காசு வந்தாக்கூட செலவழிக்கத் தோணாதில்லையா.’’

``வேலை இல்லாம சென்னையிலிருந்தா சோறுண்ணே?'' - காஜா ஃபெரோஸ்

காஜா ஃபெரோஸ்
காஜா ஃபெரோஸ்

``ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் திருமுருகன் சார்தான் எனக்குத் தொடர்ந்து கேரக்டர் தந்து சப்போர்ட் பண்ணிட்டிருந்தார். `நாதஸ்வரம்’, `குலதெய்வம்’ தொடர்களுக்குப் பிறகும் அவர்கூடத்தான் இருந்தேன்.

சீரியல்ல என்னோட ட்ராக்கே இல்லாட்டிக்கூட அவருடைய ஆபீஸ்ல போய் என்ன வேலை இருக்குதோ அதைச் செஞ்சுட்டு அங்கன என்ன கிடைக்குகோ அதைச் சாப்பிட்டுட்டு இருந்துக்கிடுவேன்.

கொரோனா வந்தாலும் வந்தது. எல்லாம் போச்சு. ஆயிரத்தெட்டு கண்டிஷனோட ஷூட்டிங் நடக்குறப்ப துக்கடா கேரக்டர்ல வந்து போறவன் போய் என்னத்தக் கேக்கறது? பிரச்னை எனக்கு மட்டுமல்ல... இயக்குநர் உட்பட எல்லாருக்கும்தானே? அதனால பேசாம ஊருக்குப் போயிட்டு நிலைமை கொஞ்சம் சரியானதும் வர்றேனு சொல்லிட்டு கிளம்பி, சொந்த ஊரான தர்மபுரிக்கு வந்துட்டேன். வேலை இல்லாம சென்னையிலிருந்தா சோறுண்ணே? எங்க ஊர்க்காரங்களைப் பொறுத்தவரை, நான் ஒரு பெரிய செலிபிரிட்டி(?). அதனால `வேலை ஏதாச்சும் இருந்தாச் சொல்லுங்கப்பா’ன்னா, `கிண்டல் பண்ணாதய்யா’ங்கிறாங்க. சிரிக்கறதா அழறதான்னு தெரியாத நிலையில பைத்தியம் பிடிச்சிடுற மாதிரி இருக்கு'' என்கிறார் காஜா.

``வயசாகியும் நடிக்க வர்றதுக்குப் பின்னாடி வலி இருக்கு!'' - எஸ்.என்.பார்வதி

எஸ்,என்.பார்வதி
எஸ்,என்.பார்வதி

``கொரோனா முடிஞ்சு எப்ப திரும்பவும் நடிக்கப் போகலாம்னு இருந்தப்பதான், 60 வயசு கடந்தவங்களை நடிக்கக் கூப்பிடக் கூடாதுனு சொல்லிட்டதாச் சொன்னாங்க. அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டேன். 60 வயசுக்கு மேல பலரும் நடிக்க வர பிள்ளைங்கதான் காரணம். பிள்ளைகள் ஆதரவு இல்லாம தனி மரமா, அந்த நடிப்பு மூலமா வர்ற காசை வச்சுத்தான் வயித்தைக் கழுவணும்கிற வலியோட எத்தனை பேர் நடிச்சிட்டிருக்காங்கன்னு அரசாங்கத்துக்குத் தெரியுமான்னு தெரியலை. அரசாங்கம் எங்களுடைய நல்லதுக்குத்தான் சொல்றாங்க. ஆனா, வயித்துல பசி எடுக்கறப்ப புத்தி சொல்றதை எங்க கேக்க முடியுது’’ என்கிறார்.

இவர்களைப் போன்ற நட்சத்திரங்கள் தாண்டி, சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் திரைக்குப் பின்னால் இருந்து பணிபுரியும் ஏகப்பட்ட டெக்னீஷியன்களுக்கும்கூட, இதேநிலைதான்.

அடுத்த கட்டுரைக்கு